உருவா அருவா அருவுருவா
உண்மையில் யார்தான் பராசக்தி?
அருளா சினமா ஆதரவா
அண்மையில் நிற்பாள் பராசக்தி;
ஒருவாய் உணவின் ஊட்டமுடன்
ஒவ்வாமையும்தான் பராசக்தி;
இருளா ஒளியா இடைநிழலா
எல்லாம் எல்லாம் பராசக்தி!
வேம்பின் கொழுந்தாய் முளைவிடுவாள்
வீசும் காற்றாய் வருடிடுவாள்
தேம்பும் மகவாய் தெரிந்திடுவாள்
தேசுடைக் கதிராய் எழுந்திடுவாள்
பாம்பின் படத்தினில் பீடமிடும்
பராபரை வடிவுகள் கொஞ்சமல்ல;
சாம்ப சதாசிவன் இறைஞ்சுகிற
சாம்பவி எங்கள் பராசக்தி!
திரிபுரை கரத்தினில் திரிசூலம்
திருமுகம் தன்னில் திரிநேத்ரம்
பரிபுரை படைத்தாள் முக்காலம்
பரிந்தருள் செய்தால் பொற்காலம்
எரிதழல் அவளது வடிவாகும்
எண்திசை அவளின் உருவாகும்
சரிவுகள் நீங்கி நிமிர வைப்பாள்
சக்தியின் திருப்பதம் வாழியவே!