மொத்தப் பிரபஞ்சங்கள் எத்தனையோ அத்தனைக்கும்
மூச்சாகி நின்றவளே வாழ்க
பித்தனின் நடனத்தைப் பக்கத் திருந்தபடி
பார்க்கின்ற பேரழகி வாழ்க
வித்தைகள் அனைத்துக்கும் வித்தாகி நிற்கின்ற
வித்தக சக்தியே வாழ்க
யுத்தங்கள் நிகழ்த்திடும் இடதுகால் சிறுவிரல்
எய்திடும் வெற்றிகள் வாழ்க
திருவிழி ஓரத்தில் தென்படும் பேற்றுக்காய்
திருக்கோவில் தினம்தேடி வந்தேன்
வருவினை எரிக்கின்ற வகையேதுந் தெரியாமல்
வலிநூறு தினங்கொண்டு நொந்தேன்
ஒருமுறை உன்நாமம் உரைத்ததும் பராசக்தி
உறுகின்ற சுமைநீங்கக் கண்டேன்
கருவெனும் வலைவீழும் காரியம் இனியில்லை
காளிநின் உளம்கண்டு கொண்டேன்
வேதங்கள் படிகளாய் விளங்கிடும் திரிபுரம்
வீற்றருள் புரிகின்ற தாயே
நாதங்கள் சலங்கையாய் நிருத்தியம் புரிந்திடும்
நாயகி நான்முகி நீயே
பேதங்கள் காட்டியும் ஒன்றெனக் கூட்டியும்
பலமாயம் செய்கின்ற மாயே
போதமே போதத்தின் சாரமே புண்ணியப்
போகமே பேரெழில் சேயே
காலையில் எழுஞ்சுடர் கடும்பகல் சுடுங்கனல்
கண்ணெதிர் குளிர்கின்ற ஜாலம்
வாலையே நின்னருள் லீலையே இங்கிதை
வாயார இசைத்தலே கானம்
நீலமாம் வானும்நீ நித்தில நிலவும்நீ
நட்சத்ர கும்மாளம் நீதான்
மூலமே ஆதியே முடிவிலா நீலியே
முக்தியின் அற்புதம் நீதான்
மேருவுன் ஆசனம் மந்திரம் வாகனம்
மேதையர் உளமெலாம் கோவில்
கூருகிர் நகங்களால் குடரையும் வாங்கியே
கூத்திடக் குருதியும் நாவில்
காருண்ய ரூபமாய் கனிந்திடும் தாய்மையாய்
காமாட்சி தோன்றுக நேரில்
பேரன்பின் ஆழியே புவனத்தின் தாய்மையே
புதுமேன்மை பெருகவிடு வாழ்வில்