நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பரமனுக்கு இப்படி ஒரு துன்பம் நிகழ்ந்துவிட்டதே. என் உயிரினும் இனிய இறைவனுக்கு என்ன ஊறு நேர்ந்ததோ என்றெல்லாம் அவர் பதறுகிறார்.
“பாவியேன் கண்ட வண்ணம் பரமானார்க்கு அடுத்ததென்னோ
ஆவியேன் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்ததென்னோ”
என்று திண்ணனார் மனம் பதறுகிறார்.
பச்சிலைகளைக் கொண்டு வந்து பிழிந்தார். இறைவனுடைய திருக்கண்களில் இருந்து பாய்ந்த ஊதிரம் நின்ற பாடில்லை. வெவ்வேறு வழிகளையெல்லாம் யோசித்துவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து இறைவனுக்கு அப்ப நினைத்தார். ‘ஊனுக்கு ஊன்’ என்ற பழமொழி அவருக்கு நினைவு வந்ததாலே தன் வலக்கண்ணை எடுத்து சிவபெருமானின் வலது கண்ணில் அப்பினார்.
சிவபெருமான் கண்ணிலிருந்து குருதி வழிவது நின்றது. குதித்துக் கூத்தாடினார். திண்ணனாரின் அன்பை மேலும் வெளிப்படுத்த விரும்பிய இறைவன் தன் இடக்கண்ணில் இருந்தும் உதிரத்தை வடியச் செய்தார்.
இப்போது திண்ணனாருக்கு கவலையில்லை. இன்னொரு கண்தான் இருக்கிறதே.
அடையாளத்துக்காக இறைவனுடைய திருக்கண்ணின் பக்கத்தில் தன்னுடைய பாதங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய இடது கண்ணையும் பெயர்த்து அப்புவதற்கு முற்பட்டார்.
அதற்கு மேல் சிவபெருமானால் பொறுக்க முடியவில்லை. “தறித்திலன் தேவதேவன்” என்பார் சேக்கிழார். “நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!” என்று மும்முறை சொல்லி, இறைவன் வெளிப்பட்டு திண்ணனாருடைய கைகளைப் பிடித்து ஆட்கொண்டார் என்பது வரலாறு. தனது வலப்பாகத்திலே நிற்க அருள் செய்தார் என்றும் வரலாறு சொல்கிறது.
இந்த நூலில் உள்ள திருத்தொண்டர் புராணத்தை நான் மீண்டும் வரலாறு, வரலாறு என்று கூறக் காரணம் ஒரு வரலாற்றுச் செய்திக்குரிய நேர்மையோடும், சீர்மையோடும் சேக்கிழார் பதிவு செய்திருப்பதால்தான். சிவபெருமானால் ‘கண்ணப்பர்’ என்று பெயர் சூட்டப்பட்ட அவரை சுந்தரர், ‘கலைமலிந்த சீர்நம்பி’ என்கிறார். திருத்தொண்டர், ‘நல்லறிவாளன்’ என்கிறார்.
ஒரு வேட்டுவரை என்னதான் அவர் பக்தியிலே முதிர்ந்தாலும் அவரை நல்லறிவாளன் என்று சொல்ல என்ன காரணம்? என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு பார்த்தால் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை புதிய நோக்கிலே நம்மால் பார்க்க முடியும்.
மரபின் மைந்தன் ம.முத்தையா