அறிவுக்கான அளவுகோல்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். முறை சார்ந்த கல்வி முறை சாறாக் கல்வி என்றெல்லாம் பலவகையாக இன்றைய சமூகம் பேசுகின்றது. ஒரு மனிதனின் மிகப் பெரிய பலம் அவனுக்கு இருக்கிற இயல்பான நுண்ணறிவு. ஒருவன் எவ்வளவு புத்தகங்களைப் படித்தாலும் அவனுடைய இயல்பான அறிவுதான் மேம்பட்டு வெளிப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுமதன்
உண்மை அறிவே மிகும்”என்பது திருக்குறள்.
பட்டம் என்பதுதான் இன்று கல்விக்கான அடையாளமாய் ஆகி இருக்கிறது. ஒரு பல்கலைக்கழகம் தருகிற பட்டம் என்பது முறைப்படுத்தப் பட்ட கல்விக்கான ஓர் அடையாளம் மட்டுமே. அது மட்டுமே கல்வியா என்றால் இல்லை.
பட்டப்படிப்புகள் உருவாக்கப்படாத காலகட்டத்தில் எத்தனையோ மேதைகள் இந்த உலகத்தில் தோன்றி இருக்கின்றனர். திருவள்ளுவருக்கு யாரும் எந்த பட்டமும் தந்ததாகத் தெரியவில்லை. கல்வியில் பெரியவன் கம்பன் என்று கொண்டாடக் கூடிய கவிச்சக்கரவர்த்தி கல்லூரிக்குப் போனதாய் நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. இயல்பான அறிவை தங்கள் விருப்பத்தின் மூலம் பெருக்கிக் கொள்வது ஒரு வகை. அறிவு என்று எதையெல்லாம் நம்புகிறோமோ, அறிவின் வெளிப்பாடு என்று எவற்றையெல்லாம் கருதுகிறோமோ அவற்றை எந்த கல்வியறிவும் இல்லாமல் இயல்பாகவே செய்வது இன்னொரு வகை.
பெரியபுரணத்திற்கு விரிநூல் என்று பெயர். சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய ‘திருத்தொண்டத் தொகை’ தொகைநூல். நம்பியாண்டார் நம்பிகள் பாடிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ வகை நூல். இவற்றை விரிவாக திருத்தொண்டர் புராணமாக சேக்கிழார் பாடினார். அதனால் அது விரிநூல்.
திருத்தொண்டர் புராணத்துக்கு மூல நூலாகிய திருத்தொண்டத் தொகையில் கண்ணப்பரைப் பற்றி சொல்ல வருகிறபொழுது சுந்தரமூர்த்தி நாயனார், ‘கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்’ என்று பாடுகிறார்.
வேட்டுவ குலத்தில் திண்ணன் என்ற பெயரோடு பிறந்து வேட்டுவத் தொழிலையே வாழ்வெல்லாம் பயின்று வில்லன்றிச் சொல்லறியா வேட்டுவராய் வாழ்ந்து கலை மந்த சீர்நம்பி என்று சுந்தரர் கொண்டாடுகிறார்.
நம்பியாண்டார் நம்பிகள் ஓர் இடத்தில் இரண்டு நாயன்மார்களை பற்றிச் சொல்கிறார். ஒருவர் சிவ-லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபட்ட விசித்திரமான பக்தனாகிய சாக்கிய நாயனார்.
இன்னொருவர் முரட்டுத்தனமான பக்தியினால் தன் வாயில் இருக்கிற தண்ணீரையே சிவலிங்கத்தின் மீது கொப்பளித்து அதையே அபிஷேக நீராக்கிய திண்ணனார். இவர்தான் கண்ணப்பனாக பிற்காலத்தில் வரப்போகிறார்.
அந்த இரண்டு நாயன்மார்களைப் பற்றிப் பாடுகிறபோது சாக்கிய நாயனாரை ஒரே சொல்லில் கல்லெறிந்தான் என்று மட்டும் குறிப்பிடுகிற நம்பியாண்டார் நம்பிகள், திண்ணனாரை நல்லறிவாளர் என்று போற்றுகிறார்.
“கல்லெறிந்தானும் தன் வாய்நீர் கதிர்முடி
மேல் உகுத்த நல்லறிவாளனும்
மீளா வழிசென்று நண்ணினரே” என்பது நம்பியாண்டார் நம்பிகள் உடைய திருமொழி.
“வேட்டுவத் தொழிலன்றி வேறொன்று அறியா திண்ணனாரை” சுந்தரர் கலைமலிந்த சீர் நம்பி என்கிறார். நம்பியாண்டார் நம்பிகளோ, அவரை நல்லறிவாளன் என்று கூறுகிறார். அப்படியானால் திண்ணனார் என்கிற கண்ணப்பரின் வரலாற்றிலே இருக்கக்கூடிய சில பகுதிகளை நாம் பார்ப்பது அவசியம்.
மரபின் மைந்தன் ம.முத்தையா