திருவாரூர் அம்மானை ஒன்றில் இப்படி ஒரு பாடல் உண்டு.
“ஈசன் பசுவாகி ஏமன் ஒரு கன்றாகி
வீசுபுகழ் ஆருரின் வீதி வந்தார் அம்மானை”
என்றொருத்தி பாடுகிறாள். பசுவும் கன்றுமாக வந்தார்கள் என்றால் அந்தப் பசுமாடு. கொஞ்சம்கூட பால் கறக்காதோ என்று இன்னொருத்தி கேள்வி எழுப்புகிறாள்.
“வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை”
என்று கேட்கிறாள்.
உடனே முன்னவள் இந்தப் பசு எப்படிப்பட்ட பசு தெரியுமா-? தன் கன்றுக் குட்டியை காலால் எட்டிஎட்டி உதைக்கிற பசு. அது எங்கே பால் கறக்கப்போகிறது என்று வேடிக்கையாகச் சொல்கிறாள். திருக்கடவூரில் எமதர்மனை தன் காலால் கடிந்தவர் சிவபெருமான். அவர் பசுவாகவும் இவர் கன்றாகவும் வந்திருந்தால் கன்றை உதைக்கக்கூடிய பசு எப்படிப் பால் கறக்கும் என்பது இவருடைய கேள்வி.
“கன்று உதைகாலி கறக்குமோ அம்மானை” என்று அந்தப் பாட்டின் வரி முடிகிறது. மனுநீதிச் சோழன் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை பேச வருகிற சேக்கிழார், இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு அங்கே விடை தருகிறார். இந்த உலகம் படைத்து எல்லோருக்கும் முன்னவனாக இருக்கும் இறைவன் திருவுள்ளம் வைத்தால் எது முடியாது? என்று கேள்வி எழுப்புகிறார்.
“யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத
செயல் உளதோ”
என்பது சேக்கிழாருடைய வாக்கு. நீங்கள் எந்தப் புராணத்தில் எந்த அற்புதத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய வாசகம் இது.
“யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத
செயல் உளதோ”
வாழ்வில் நிகழக் கூடிய அற்புதங்கள் சில மகான்கள் மூலம் வெளிப்பட்டாலும் அவை இறைவன் திருவுள்ளம் கொண்டு நிகழ்த்துபவை என்ற எண்ணம் ஏற்பட்டு விடுமேயானால் அந்த அற்புதங்களிலேயும், அதிசயங்களிலேயும் ஒருவனது சிந்தனை சிக்கிப்போகாமல் வாழ்வில் இறைவனை நோக்கி அவன் இதயத்தைத் திருப்புவான் என்பது சேக்கிழார் உளவியல் பூர்வமாய் அறிந்த உண்மை.
பெரியபுராணத்தின் தொடக்கம் ஓர் அற்புத நிகழ்வோடு தொடங்குகிறது. நிறைவில் மற்றொரு அற்புதத்தை சேக்கிழார் பாடுகிறார். கோவைக்கு அருகில் இன்று அவிநாசி என்று வழங்கப் பெறும் திருப்புக்கொளியூரில் முதலை வாய்ப்பட்ட சிறுவனை சில ஆண்டுகளுக்குப் பிறகு உரிய வளர்ச்சியோடு மீண்டும் கிடைக்கப் பெறுமாறு ஓர் ஆதிசயம் நிகழ்கிறது.
“உரைப்பார் உரையுகந்து உள்கவல்லாய்
கரைக்கால் முதலையை பிள்ளை தரச்சொல்லு காலனையே”
என்று ஆலாலசுந்தரர் பாடிய பதிகம் இந்த அற்புதத்தை நிகழ்த்துகிறது. காவியத்தின் தொடக்கத்திலேயும் முடிவிலேயும் இரண்டு அற்புதங்களைச் சுட்டி காவியம் நெடுக நடக்கும் அற்புதங்களை எதிர்கொள்வதற்கு வாசகர்களை தயார்படுத்துகிறார் சேக்கிழார்.
இறைவன் திருவுளம் இருந்தால் எந்த அதிசயமும் அதிசயம் இல்லை என்ற சமநிலையோடு ஒருவர் பெரிய புராணத்திற்குள் நுழைவாரேயானால் பக்தியின் பெருமையை தொண்டின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும் என்பதற்காக சேக்கிழார் நிகழ்த்திய அற்புதம் இது.
மரபின் மைந்தன் ம.முத்தையா