நில நடுக்கம் நேரும்போதெல்லாம் வெட்டவெளிக்கு வந்துவிடுமாறு நிலவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பூமி பிளந்து இறந்தவர்களைவிடவும் வீடு இடிந்து முடிந்தவர்களே அதிகம். அடைந்து கிடக்கும் வீட்டைத் துறந்து, விரிந்து பரந்த வெட்டவெளிக்கு வரும்போது வாழ்க்கை பாதுகாப்பாகிறது.
இது நிலநடுக்கத்திற்கு மட்டுமல்ல. உள நடுக்கத்திற்கும் உள்ளபடி பொருந்தும். தானே எழுப்பிக் கொண்ட சந்தேகச் சுவர்கள், தலைக்கு மேல் எழுப்பிக் கொண்ட தன்னலக்கூரை, ஆகாயத்தின் அறிமுகம் தடுத்து அடைத்து வைத்திருக்கும் சிந்தனை ஜன்னல்… இவையெல்லாம் உள நடுக்கம் வரும்போது உயிர்குடிக்கும் அபாயங்கள்.
வான் பதறும்போதும் தான் பதறாத தன்மையே வெற்றியாளரின் விலாசம். உள்ளம் பதறும்போதெல்லாம் உலகத்தோடு கலந்துவிடுங்கள். தானே பெரிதென்று தருக்கி நிற்பவன் தடுமாறும்போது சாய்ந்து கொள்ளத் தோளின்றி சிரமப்படுவான். எனவே வாழ்வின் மையத்திற்கு வாருங்கள்.
விரிந்துகிடக்கும் வாழ்க்கைப் பரப்பில் நிற்க நிற்க மனது விரியும். நம்பிக்கை வளரும். உறவுகள் பலப்படும். உயர்வுகள் வசப்படும்.
பதற்றத்தால் செயல்புரிந்து பலதையும் சாதிக்கப் பார்ப்பது தோல்விக்கு வழி. “அவசரத்தில் கைவிட்டால் அண்டாவிற்குள் போகாது” – இது அர்த்தமுள்ள பழமொழி.
பதற்றம், தன் எண்ணத்தைத் தெரிவிக்கும் முயற்சியில் இருக்கும் நாக்கை நசுக்கும். பொய்களைப் படிக்க வைக்கும். நம்ப முடியாத உறுதிமொழிகளை வாரிக் கொடுக்கச் சொல்லும். பிறர் சிரிப்பதையும் அறியாத தவிப்பில் தள்ளும்.
நம் மீது பிறர் கொண்டிருக்கும் குறைந்தபட்ச நல்லெண்ணத்தையும் குலைக்கும். பதற்றம் பிறக்கும்போது மனம் காட்டும் பாதையிலே செல்லாமல் அற நூல்களை அள்ளிப் படியுங்கள். ஆன்றோர் மொழிகளை ‘சிக்’கெனப் பிடியுங்கள். “பெரியவர்களின் பொன்மொழிகள், வழுக்கும் நிலத்தில் விழாமல் காக்கும் ஊன்றுகோல் போன்றவை” என்கிறார் வள்ளுவர்.
“இழுக்கல் உடையழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்” (415)
என்பது திருக்குறள்.
மனசின் இருட்பரப்பில் அறிவு வெளிச்சம் பரவ வேண்டிய பொழுதுகள், பதற்றப் பொழுதுகள். தாளாத பதற்றம் என்பது தற்காலிகப் பைத்தியம். குடிபோதையினும் கொடும் போதை.
உயர்ந்தோர் பலரின் இலட்சியங்களை அவசரக்காரர்கள் கை பதறிப் போட்டுடைக்கும் பரிதாபம் பல இடங்களிலும் நிகழ்கிறது.
வாழ்க்கை என்கிற அற்புதத்தைக் கூடப் பதற்றத்தால் போட்டுடைக்கிறார்கள் மனிதர்கள் என்பதைத்தான் சித்தன் ஒருவன் சிரித்தபடி பாடினான்.
ஆன்மா என்கிற ஆண்டி, பிரம்மன் என்கிற குயவனிடம் பத்து மாதங்கள் கெஞ்சிப் பெற்று வந்த உடம்பு என்கிற குடத்தைப் பதற்றத்தாலும் தலைகால் புரியாத தருக்கத்தாலும் போட்டுடைக்கும் கதைதான் வாழ்க்கை என்கிறான் அவன்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!”
என்பது அந்தப் பாடல்.
பதற்றம் படுத்தும் பாட்டைப் புரிந்து கொண்ட யாரும், அதை மனசுக்குள் மையம் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். தீமை நிகழ்ந்துள்ளதா என்பதைத் தீர விசாரித்துத் தெளிந்து, முதிர்ந்த கண்ணோட்டத்தோடு முடிவெடுப்பார்கள்.
பதற்றத்தின் கருவில் பிறக்கும் அவசரம், அரக்கக் குழந்தை. எதையும் உடைக்கும். எதையும் சிதைக்கும். துளிகூட யோசிக்காமல் தேன்கூட்டைக் கலைக்கும்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…