ஒருவருடைய பலம்தான் அவருடைய சாதனைகளுக்கு முழுமையான காரணமாக இருந்தது என்று கூறமுடியாது. பலவீனமும் பல சாதனைகளுக்குக் காரணமாக அமையும்.
எப்படி என்றால், அவர்கள் தங்களின் பலவீனங்களிலிருந்து கற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்களிலிருந்து பல உண்மைகளைப் புரிந்துகொள்கிறார்கள். பிறகு பலவீனத்தை களைந்துவிட்டு, அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை அஸ்திவாரமாக மாற்றும்போது வெற்றிபெறுவது சாத்தியமாகிறது.
பலவீனத்தைக் கண்டுபிடியுங்கள்:
“நான் சொன்னால் சரியாக இருக்கும். நான் செய்வதில் தவறே இருக்காது. நான் 100% சரியாக நடந்துகொள்கிறேன்” என்றுதான் அநேகம் பேர் நினைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் சுட்டிக்காட்டும் குறைகள் அல்லது பலவீனங்கள் நிஜமாகவே நம்மிடம் உள்ளதா? என்று நேர்மையாக சிந்தித்துப் பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம்.
“நீ ஒரு சோம்பேறி” என்று யாராவது கூறினால், “இல்லை, இல்லை. நான் நிதானமாக தெளிவாகச் செய்கிறேன்” என்று ஒரு விளக்கம் சொல்லிக் கொள்வது. இதுபோல் ஒவ்வொருவரிடமும் சில குறைகளுக்கு அதை நிறை போலக் கூறும் பதில் ஒன்று இருக்கும்.
“நீ மிகவும் படபடப்பாக இருக்கிறாய்.”
– “இல்லை. நான் மிகுந்த சுறுசுறுப்பு.”
“என்ன இருந்தாலும் அதை நீ சொல்லியிருக்க வேண்டாம்.”
– “நான் உண்மையைத்தான் சொன்னேன். அதில் தவறில்லை.”
“மிகவும் பிடிவாதமாக இருக்கிறாய்.”
– “என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்.”
இப்படி பலப்பல விஷயங்களில் பலவீனங்கள் நம்மில் இருப்பதாகவே ஏற்றுக்கொள்ளாத வரை நாம் அடையும் மகிழ்ச்சியும், வெற்றியும் குறைவானதாகவே இருக்கும்.
எனவே, மற்றவர்களின் விமர்சனங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று ஒருமுறையேனும் பரிசீலனை செய்யுங்கள். பலவீனத்தை உணர்ந்தால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதனால் அபரிமிதமான வெற்றிகளை அடையலாம்.
பலத்தை உபயோகியுங்கள்:
விளையாடும்பொழுது நாம் தோற்காமல் இருக்க எவ்வளவு பிரயத்தனப்படுவோம். அதே சமயம் முதலாவதாக வருவதற்காக எவ்வளவு பலத்துடன், விரைவாகச் செயல்பட வேண்டுமோ அத்தனையும் நம் முழுபலத்தையும் உபயோகித்து விளையாடுவோம். அதேபோல லட்சியத்தை நோக்கி முன்னேறும்போது முழுமையான திறமையை, பலத்தை உபயோகிக்க வேண்டும்.
சில உதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்:
சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் எப்படி அபாரமாக விளையாடுகிறார்? சதுரங்க விளையாட்டுக்கு மிகவும் தேவையானது ஞாபக சக்திதான். அது அவரிடம் உள்ளதால்தானே ஒவ்வொரு முறையும் வெற்றி வாகை சூடுகிறார்.
ஆனால் அதே விஸ்வநாதன் ஆனந்த் போட்டிகளுக்கு புறப்படும்போது, தனது லக்கேஜ், விமான டிக்கெட் என்று முக்கியமானவற்றைக்கூட எடுத்துச் செல்ல மறந்துவிட்டு ஏர்போர்ட் சென்றுவிடுவாராம். அவரது தாயார், மனைவி இவர்கள் மிகவும் சிரத்தை எடுத்து ஞாபகப் படுத்திக்கொண்டே இருப்பார்களாம்.
வெளிநாட்டிலிருந்தாலும் புறப்படும் சமயத்தில் தொலைபேசியில் அழைத்து, இதை எடுத்தாயா? அதை எடுத்தாயிற்றா? என்று நினைவூட்டுவார்களாம். பலவீனங்களை சரிசெய்ய முடியாத சமயங்களில் நம்பிக்கைக்கு உரியவர்களின் உதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நிறுவன மேலாண்மையிலும் அவ்வாறேதான். நமக்குத் தெரியாத நுணுக்கமான விஷயங்களை, அத்துறையில் தேர்ந்த நபர்களை பணிக்கமர்த்தி வேலைகளைச் செவ்வனே செய்து முடிக்கலாம்.
எல்லைகளைப் புரிந்துகொள்ளுங்கள்:
நீங்கள் நல்ல பேச்சாளராக இருக்கலாம். அதற்காக ஒரு நாளைக்கு மூன்று நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்ளக் கூடாது. நல்ல நடன சிரோன்மணியாக இருக்கலாம். அதற்காக காலை, மாலை, இரவு என்று முழுவதுமாக ஒப்புக் கொண்டுவிட்டால் என்ன ஆகும்-? சோர்ந்துபோய் விடுவதுடன், தம் வேலையில் தரம் குறைந்துவிடும்.
எனவே, பலவீனங்களிலிருந்து பெறும் அனுபவங்களைக் கொண்டு பலங்களைப் பெருக்குங்கள். அசைக்க முடியாத ஒரு வெற்றிக் கோட்டையைக் கட்டுங்கள்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…