நம்பிக்கையூட்டும் விஷயங்களை விடுத்து, ‘ஜாதகம்’ என்ற மூடநம்பிக்கைக்குள் பாதை செல்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஜாதகத்தை வைத்து ஒருவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி, வெற்றி தோல்விகளை கணித்துவிடமுடியும் என்று சோதிடம் கூறுகிறது. 9 கிரகங்களின் நிலையை வைத்தே பலன்கள் கூறப்படும்.
அதேபோன்று, 9 முக்கிய அம்சங்களை மனோதிடத்துடன் வாழ்க்கையில் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
1.நேரம்:
வியாபாரத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவு நேரத்தை அதற்கென முதலீடு செய்கிறீர்கள் என்று கவனிக்க வேண்டும். வியாபாரம் தொடர்பாக செயல்பட சிந்திக்க ஒதுக்கும் நேரம் அனைத்தும் முதலீடாகத்தான் இருக்க வேண்டும். மாறாக இவ்வளவு நேரம் செலவு செய்தேன் என்று கூறும்படியாக இருக்கக்கூடாது.
சுயமாக தொழில் துவங்கும் எண்ணம் இருந்தால், அவர்களுக்கு அந்த எண்ணம் வருவதற்கு முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் நேரத்தை எப்படிச் செலவிட்டார்கள் என்று சிந்திப்பது நல்லது.
– இந்த இந்த நேரத்திற்கு இந்த இந்த வேலைகளைச் செய்வது எனும் ஓர் ஒழுங்குமுறை.
– நேரந்தவறாமல், சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது – ஆரோக்கியமான உடலைப் பேணுவதால், மனம் ஆரோக்கியமும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்களைப் பார்த்தாலோ பேசினாலோகூட, மற்றவர்களுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் பிறக்கும். இந்த வசீகரம், வணிகத்திற்கு மிகவும் அவசியம்.
– நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவதால் பதற்றம் என்பதே இருக்காது.
பதற்றமில்லாமல் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பும் தேடிவரும். அந்த நம்பிக்கையை, உங்களுக்கென கிடைக்கும் நேரத்தை வைத்தே பெற முடிகிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்று!
“நேரம்” இது தினம் தினம் ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்படும் ஒரு வைரக்கல்.
எவருடைய கல் நன்றாகப் பட்டை தீட்டப்படுகிறதோ, அவருடைய வைரம் விலை உயர்ந்த மதிப்பு வாய்ந்த வைரமாகிறது. அதனை வைரக்கல் என்று உணராத வரையில் அது சுரங்கத்திலிருந்து வெட்டி எடுத்தும் வீணாக்கிவிட்டதற்கு சமம்.
2.துணிவு:
வைரத்தை சும்மா கொடுத்தால்கூட நம்மவர்கள் சிலர் அதை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். “சார், இதுல ஏதோ தோஷம் உள்ளது, ராசி உள்ளதுன்னு எல்லாம் இருக்காம். இது எதுன்னு தெரியாம எப்படி இத நான் வச்சுக்குவேன். வேண்டாம் சார்” என்று கூறி பெற்றுக் கொள்ள மறுப்பார்கள்.
இது உண்மையோ, பொய்யோ, புத்திசாலியாக இருப்பவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, அடுத்ததாக அதனை என்ன செய்யலாம் என்று யோசிப்பார்கள்.
அவர் ராசி நம்பிக்கை அற்றவர் என்றால், அதனை நம்பிக்கையுடன் அணிந்து தனது அந்தஸ்தை உயர்வாகக் காட்டிக் கொள்வார். ராசி நம்பிக்கை உள்ளவராக இருந்தால் அதை விற்று தனக்கேற்ற அணிகலனாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்வார்.
இதற்கு ஒரு துணிவு வேண்டும். சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் கூட பயப்படுபவர்கள் சிறிது சிறிதாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், துணிவு என்பது பிறர் கொடுத்து வருவதல்ல. நம்பிக்கை அடிப்படையிலும், நேர்மறை சிந்தனைகளாலுமே துணிவுவரும். எந்த அளவிற்குத் துணிச்சலுடன் ரிஸ்க் எடுக்கிறார்களோ அந்த அளவுக்கு நல்ல பலனும் கிடைக்கும். அனுபவ அறிவுடன் துணிவைச் சேர்ப்பது மிகச் சிறந்தது.
3.லட்சியம்:
எது இலக்கு? எது பாதை? அதற்கான கால வரையறை எவ்வளவு? என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இலக்கு இல்லாத ஓட்டம் வீண். எனவே, லட்சியம் ஒன்றை வைத்து, அதனை நோக்கிய ஓட்டமாக, உழைப்பாகவே உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இல்லையென்றால் செக்குமாடு போல உழைப்பு முழுவதும் ஒரே வட்டத்திற்குள் அடங்கிவிடும்.
4. பயமின்மை:
பயம் ஒரு பலவீனம். “பயமே மரணம், அச்சமின்மை வாழ்வு” என்கிறார் விவேகானந்தர். தேவையற்ற பயங்களை ஒதுக்கிவிட வேண்டும்.
ஒரு விஷயம் எப்படி நடக்கப் போகிறது என்பது தெரியாமலேயே அது மோசமாகத்தான் நடக்கப்போதுகிறது என்று எண்ணும் அனுமானம். அப்படித் தவறாகத்தான் முடியும் என்னும் எதிர்மறை எண்ணத்தின் மீது நம்பிக்கை… இதுதான் பயத்தின் அடிப்படை. நன்கு சிந்தியுங்கள். நடக்காத, ஒரு விஷயத்திற்காக ஏன் பயப்பட வேண்டும்? எதுவாக இருந்தாலும், அது நல்லபடியாக நடக்கும் என்று நம்பி செயல்படவேண்டும். பயம்தான் தவறாக செயல்பட வைக்கும். தைரியம்தான் சரியாக செயல்பட வைத்து மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
5.செயல்:
இலக்கு, துணிவு, நேரம் இவை அனைத்தும் சரியாக இருந்தாலும், சரியாக செயல்படுவது என்பதுதான் அறுவடை செய்வதற்கு சமம். மனதில், அறிவில் இருக்கும் சமர்த்து, செயலிலும் இருக்க வேண்டும். எல்லாம் இருந்தும் செயல்படாமல் வாய்ச்சொல் வீரராக இருந்தால் பயனில்லை.
6.உறுதி:
தெளிவாக முடிவெடுத்து செயல்படத் துவங்கிய பிறகு, துவளக்கூடாது. உறுதியுடன் செயல்பட வேண்டும். ஒரு பெண் தான் வீட்டில் செய்யும் அப்பளங்களை ஒரு ரூபாய் லாபத்திற்கு தினமும் 5 ரூபாய்க்கு மட்டும் விற்றுவந்தார். நாளாக நாளாக 5,10,20,100 என்று வியாபாரமும் வரவேற்பும் பெருகியது. இப்பொழுது ஆயிரக்கணக்கில் வியாபாரம் செய்து லாபம் பெற முடிகிறது. எந்தத் தொழில் செய்தாலும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் முன்னேற்றப் பாதையில் உறுதியுடன் செயல்பட முடியும்.
7.நேர்மை:
1 டாலர் பணமும் நூறு கோடி டாலர் நேர்மையும் இருந்தால் போதும் ஈஸியாக ஜெயித்துவிடலாம் என்பது மேற்கத்தியப் பழமொழி. நேர்மை இருந்தால் தோல்வியே கிடையாது. தரம், வாக்குறுதி இவற்றில் நேர்மை இருந்தால் விளம்பரம்கூட இல்லாமல் ஜெயித்துவிடலாம்.
8.மனமும் ஆன்மாவும்:
மனதையும் இதயத்தையும் இலகுவாகவும் மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தில் உறவுகள் மேம்படும். இதில் சரியாக இருந்தாலே லாபம் உறுதி என எழுதி வைத்துக்கொள்ளலாம்.
9.தோற்றம்:
மேற்கூறிய எல்லாவற்றுடன் உங்களின் வசீகரமான தோற்றமும் சேரும்பொழுது வெற்றி இன்னும் அருகில் வந்துவிட்டது என்றே கூறலாம். முதலில் உங்களின் தோற்றம் பேச ஆரம்பிக்கும். பிறகே உங்களது அறிவு, அனுபவம், ஆளுமை எல்லாம். எனவே எளிமையான, சுத்தமான, அழகான உடைகள், எளிய அலங்காரங்கள் இவையே போதுமானது. இத்தகைய தோற்றம் பிறர் மனதில் நம் மீது நம்பிக்கையை வரவழைக்கும்.
9 கிரகங்களும் சாதகமாக அமைந்த ஜாதகம் போல இந்த 9 விஷயங்களும் சரியாக இருந்தால் உங்கள் பயோடேட்டா, பிற்காலத்தில் சக்ஸஸ் சக்ரவர்த்திகளில் இடம் பிடிக்கும்!