“மனுஷன்னா பலவீனம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லிக்கொண்டே வேண்டாதவற்றை விடாப்பிடியாகப் பற்றியிருப்பவர்கள் சிலருண்டு. “அது” என்றால் போதைப் பழக்கமாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை.
அரட்டையில் ஆர்வம், அனாவசியப் பதட்டம் என்பது போன்ற பலவீனங்களில் தொடங்கி, புகை, போதை போன்ற பலதும் இதிலே அடங்கும். உங்கள் பலவீனம் என்ன என்று உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லுமாறு நெருக்கமானவர்களை வற்புறுத்துங்கள்.
முதுகுக்குப் பின்னால், முணுமுணுத்து வந்ததை முகத்துக்கு நேராக சொல்லத் தூண்டுங்கள். அடுத்து, அந்தப் பழக்கத்தை ஏன் அகற்ற வேண்டும் என்றொரு பட்டியலை மனதுக்குள் தயார் செய்து, அதனை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சிகரட்டைத் தொடும்போது, அந்தக் காரணங்களின் பட்டியல் உங்கள் கையிலிருக்கும் சிகரட்டைத் தட்டிவிடும்.
மூன்றாவதாக, வாழ்க்கையில் எப்போதும் இரண்டு பாதைகள் உண்டு. சௌகரியமான பாதை ஒன்று. சரியான பாதை இன்னொன்று. சௌகரியமான பாதையைவிட சரியான பாதைதானே சரியானது! எனவே, முழு மனதோடு சரியான பாதையை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
உடனிருக்கும் யாரோ ஒருவரிடம் உங்களைக் கண்காணிக்கும் பொறுப்பை நீங்களாக ஒப்படையுங்கள். அவ்வளவு பெரிய யானை, தன்னைக் கட்டுவதற்கான சங்கிலியைத் தானே எடுத்து பாகனிடம் நீட்டுகிறதல்லவா? அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் தடுமாறும்போது யாராவது தட்டிக்கேட்பது நல்லதுதானே. பதற்றமான நேரங்களில்தான் பழைய பழக்கங்களைப் புதுப்பித்துக்கொள்ளத் தோன்றும். நகம் கடிப்பதில் தொடங்கி இது நீளும்.
ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதென்று பதற்றம் கொள்கிறீர்களா? முதலில் பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். பிறகு சிக்கலில் இருந்து வெளியே வருவதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
நாமே சின்னச் சின்ன பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு வெளியேற முடியாமல் தடுமாறும்போது, நம் பயணத்தை அந்தப் பழக்கங்களே நிறுத்தப் பார்க்கும். “மனுஷன்னா பலவீனம் இருக்கும்” என்பது உண்மைதான். ஆனால், பலவீனங்கள் இருந்தால் வெற்றியாளனாக இருக்க முடியாது. அவை நம்மை நிறுத்துமுன், நாம் அவற்றை நிறுத்துவது நல்லதுதானே!
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…