நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நேரத்தில், எதையும் செய்யாமல் “சிறிது நேரம் சும்மா இருக்கலாம்” என்று தோன்றும்.
அதுபோன்ற நேரங்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து, வித்தியாசமான வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த இடைவேளை அவசியமானதா-? அனாவசியமானதா? கண்டுபிடிக்கலாம், வாருங்கள்!
உங்களை ஒருமுறை கேளுங்கள்!
இந்த இடைவேளை இப்போது தேவையா என்று உங்களை நீங்களே கேளுங்கள். சில நேரங்களில், கடுமையாக வேலை செய்து களைத்திருந்தால், ஓர் இடைவேளை வேண்டுமென்று மனம் மனுப்போடும். சில நேரங்களில் தேவையில்லாத சோம்பல் காரணமாய், உங்கள் வேலைக்கு உங்கள் மனமே “ஒத்தி வைப்புத் தீர்மானம்” கொண்டுவரும்.
முதல் காரணமென்றால், தாராளமாக இடைவேளை விடுங்கள். இரண்டாவது காரணமென்றால் கண்டிப்பான சபாநாயகராக மாறி, “நோ” சொல்லிவிடுங்கள்.
நேர அளவைக் குறையுங்கள்!
வழக்கமான ஒரு மணி நேரம் செய்கிற உடற்பயிற்சிக்குத் தயாராகிறீர்கள். உங்கள் மனம் “இன்றைக்கு வேண்டாமே” என்கிறது. “சரி, அரைமணி நேரம் செய்துவிட்டு வரலாம்” என்று சமரசம் செய்து கொள்ளுங்கள். “சரி இன்னைக்கு வேண்டாம்” என்று விட்டால் தினமும் மனமும் அடம்பிடிக்க ஆரம்பிக்கும்.
வழக்கமான முறையை மாற்றுங்கள்:
பெரும்பாலும் சோர்வோ சோம்பலோ வருவதற்குக் காரணம் ஒரே மாதிரியான வாழ்க்கை முறைதான். தினமும் டூவீலரில் அலுவலகம் செல்பவர் என்றால், ஒரு நாள் பேருந்தில் செல்லுங்கள். பாதையை மாற்றுங்கள். அமரும் திசையை மாற்றுங்கள். வாஸ்துவுக்கா அல்ல, உங்களுக்காக!
சுகமா? சுமையா?
உங்கள் முக்கியக் கடமைகளை உள்மனம், சுகமான பணி, சுமையான பணி என்று பகுத்து வைத்திருக்கிறது. சுமையான பணிகளைத் தொடங்கும்போதுதான் தள்ளி வைக்கலாம் என்று தோன்றுகிறது. எனவே, சுமையான, சிரமமான பணிகள் என்றிருக்கும் அபிப்பிராயங்களை மாற்றுங்கள். அலுத்துக்கொண்டே செய்வதையே ஆசையாய்ச் செய்தால் அப்புறம் இடைவேளை இல்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கலாம், இதயத்தைப்போல!
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…