“அரைக் கிணறு தாண்டியவர்கள்” மீதியுள்ள தூரத்தைத் தாண்டும் முன் எதனால் விழுகிறார்கள்? முழுக்கிணற்றையும் தாண்ட முடியாது என்று தாங்களாகவே முடிவுசெய்து கொள்வதால்தான் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
மனித மூளைக்குள் பல விஷயங்கள் காட்சி வடிவில் பதிவாகியிருப்பதாக, டாக்டர் காரி பிரிப்ரம் என்கிற புகழ்பெற்ற நரம்பியல் சார்ந்த உளவியல் நிபுணர் சொல்கிறார்.
அதாவது, ஒரு விஷயத்தை உங்கள் கற்பனையில் காட்சிபூர்வமாக அமைத்து, மூளையில் பதிவு செய்துகொண்டால், சாதிக்க முடியும் என்கிற நேர்மறையான அணுகுமுறை மூளையில் ஆழப் பதிந்துவிடுகிறது.
அந்த அணுகுமுறை மாறும்போது அச்சம் பிறக்கிறது. அவநம்பிக்கை எழுகிறது. “நம்மால் முடியாது” என்கிற நினைவு தோன்றி நடுக்கம் கொடுக்கிறது.
என்னதான் மூளையில் அப்படியரு மலர்ச்சியான பிம்பம் பதிவாகியிருந்தாலும் நெருக்கடியான நேரங்களில் மனம் அவநம்பிக்கை அலைகளைப் பரவ விடுகிறது. இந்த அவநம்பிக்கை அலைகள்தான் அணுகுமுறையில் ஏற்படும் தடுமாற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாய் அமைகின்றன.
அணுகுமுறையை சீர்செய்ய ஐந்து அம்சத் திட்டங்களை உளவியல் நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
முதலாவது, சவால்கள் நிறைந்த சூழலில் கடந்து போனவற்றைப் பற்றிய கவலைகளை விட்டு நிகழப்போவது பற்றி நினைப்பது. பலரும், ஒரு தவறு நேர்ந்தபிறகு யாரால் நேர்ந்தது, என்ன காரணம் என்பதைப் பற்றியே ஏகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இது, கடந்த காலம் குறித்த கவலைகளைத் தீவிரப்படுத்துமே தவிர எதிர்காலத் தீர்வுகளுக்குத் துணை வராது. எனவே, “அடுத்தது என்ன” என்ற அணுகுமுறையே உகந்தது.
இரண்டாவதாக, ஒரு சிக்கல் நிகழும்போது, அந்த சிக்கலின் தீர்வு நோக்கி உடனடியாக நகர்ந்துவிட வேண்டும். சிக்கலின் கன பரிமாணங்கள், அதன் விளைவுகள் போன்றவற்றைத் திரும்பத் திரும்ப விவாதிப்பதன் மூலம் தீர்வுக்கான பாதையில் நாமே தடைகளை ஏற்படுத்துவதாகப் பொருள்.
மூன்றாவதாக, எவ்வளவு பெரிய சோதனையிலும் ஒரு சாதகமான அம்சம் இருக்கவே செய்யும். அந்த சோதனை ஒரு புதிய படிப்பினையைத் தருவது மட்டுமல்ல, இதுவரை இல்லாத புதிய அனுபவத்தையும் தரும். அந்த அனுபவத்தின் விளைவாக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் கிடைக்கும்.
நான்காவதாக, எந்தவொரு சூழலுமே அடுத்த கட்ட வெற்றிக்கான ஆயத்தம்தான். ஒரு போர்வீரனைப் பொறுத்தவரை, போர்க்களம்தான் வெற்றிக்கான வாய்ப்புக்கூடம். ஒரு விஞ்ஞானியைப் பொறுத்தவரை, பரிசோதனைக்கூடம்தான் வெற்றிக்கான பிரசவ அறை. எந்த ஒரு சிக்கலும், அதனை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புதான்.
ஐந்தாவதாக, எந்த ஒரு சூழலையும் சரியாகக் கணித்து செயல்பட வேண்டுமென்றால், அதற்குரிய பட்டியலைத் தயார்செய்வது மிகவும் முக்கியம். அந்தச் சூழல், அதிலிருந்து விடுபட வழிகள், என்று ஒவ்வொன்றையும் எழுதிப் பட்டியல் போடும் போது நமக்குத் தெளிவு பிறக்கிறது. பிரச்சினைதான் நம் கையில் இருக்கிறதே தவிர, பிரச்சினையின் கையில் நாம் இல்லை என்கிற புரிதல் வருகிறது.
இந்த அணுகுமுறை சரியாக மேற்கொள்ளப்பட்டாலே போதும். எந்தச் சூழலிலும் வெற்றி நிச்சயம்!
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…