எந்த ஒரு சிந்தனையாளரையும் கேளுங்கள் – “உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள்.
ஒரு காரியத்தைத் தொடங்கும்போது, அதைச் செய்யலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படுகிறது. அது சந்தேகமா? உள்ளுணர்வின் குரலா என்று எப்படித் தீர்மானிப்பது?
ஒரு குரல், சந்தேகத்தின் குரலா என்று நீங்கள் சந்தேகம் கொள்கிறீர்களா? அப்படியானால் சந்தேகமேயில்லை! அது சந்தேகம்தான்! ஏன் தெரியுமா? உள்ளுணர்வின் குரல், உங்களுக்குள் ஒரு கேள்வியோ, சிக்கலோ, தேடலோ தீவிரமாகும்போது ‘பளிச்’சென்று எழுகிறது.
“என்ன செய்வது? ஏதும் புரியவில்லையே” என்று குழப்பம் வருகிறதென்றால் அந்தக் குழப்பத்தின் உச்சியில் திடீரென்று பாய்கிற வெளிச்சம்தான் உள்ளுணர்வு.
சந்தேகத்தின் கதை வேறு. அதுவா? இதுவா-? அப்படியா? இப்படியா? எனறு எழுகிற கேள்விகளின் தடுமாற்றம்தான் சந்தேகம். பல்வேறு காரணங்களை நீங்களாகப் பட்டியலிட்டு, தனக்குள்ளேயே தர்க்கம் செய்யும்போது அது சந்தேகத்தின் விளையாட்டு.
சரியாகச் சொல்வதென்றால், ஒரு சிக்கலை நீங்கள் மேலோட்டமாகவும், முழு ஈடுபாடு இல்லாமலும் அணுகுவீர்களென்றால் அது வெறும் சந்தேகமாகத்தான் இருக்கும்.
ஒரு கேள்வி உங்களுக்குள்ளேயே வெகு தீவிரமாக மையம் கொள்ளுமானால் அதற்கு பதில் சொல்கிற வேலையை உள்ளுணர்வு எடுத்துக் கொள்கிறது.
எல்லாத் திசையிலும் இருட்டு மூடிவிட்டது என்று கருதுகிறபோது திடீரென்று வருகிற வெளிச்சம், உள்ளுணர்வின் வெளிச்சம்.
இன்னொரு சூழ்நிலையிலும் உள்ளுணர்வு நன்கு செயல்படுவதை நீங்கள் பார்க்க முடியும்.
உங்கள் தனிப்பட்ட தேவை, குடும்பம், வேலை, கல்வி என்கிற உங்கள் சின்னச் சின்ன அடையாளங்கள் ஆகியவற்றை எல்லாம் கடந்து, இந்தப் பிரபஞ்சம் என்கிற பெரிய சக்தியின் ஒரு துளியாக உங்களை உணர்கிறபோது, உங்கள் உள்ளுணர்வு நன்கு வேலை செய்கிறது. ஏன் தெரியுமா?
உள்ளுணர்வு என்பதே, உங்களுக்குள் இருக்கிற பிரபஞ்சப் பேராற்றலின் அம்சம்தான். உங்கள் சராசரி எல்லைகளைக் கடந்து, உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொள்கிற போது உள்ளுணர்வு தூண்டப்பட்ட நிலையில் மிகத் துல்லியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
உங்கள் தகவல் அறிவு, நீங்கள் சேகரித்த அனுபவம், மற்றவர்களிடம் நீங்கள் பார்த்த விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுவது அடிப்படைச் சந்தேகம்.
இந்த நிலையில் பிரச்சினை உங்களுக்கும் மேலே இருக்கிறது.
பிரச்சினையைவிட மேம்பட்ட மனநிலையில் நீங்கள் இருக்கும்போது உள்ளே ஒலிக்கும் குரல்தான் உள்ளுணர்வின் குரல். எனவே, சிக்கல்கள் ஏற்படுகிறபோது மட்டும் உள்ளுணர்வின் உதவியைத் தேடாமல், எப்போதும் உள்ளுணர்வைத் தூண்டப்பட்ட நிலையிலேயே வைத்திருங்கள். பரந்த சிந்தனை, எல்லைகளைக் கடந்த எண்ண ஓட்டம், தியானம் போன்றவை உள்ளுணர்வைத் தூண்ட உறுதுணை புரியும்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…