பள்ளிக்கூடம் போய்வரும் குழந்தைகளின் முகங்களை கவனியுங்கள். பள்ளிக்கூடம் போகும்போது முகத்தில் இருக்கிற அதே கலவரம், பல குழந்தைகளுக்கு, வீட்டுக்கு வரும்போதும் இருக்கிறது. டியூசன், புதிய கணக்குத் திட்டம் என்று ஏகக் கெடுபிடிகள் வீட்டிலும்!!

குழந்தைகள் என்னவாக வர வேண்டும் என்று தீர்மானித்துவிட்ட பெற்றோர்கள் பலர், குரோட்டன்ஸ் செடிகளை நறுக்கி நறுக்கி வளர்ப்பது மாதிரி குழந்தைகளின் குழந்தைத்தனத்தையும் மற்ற ஆர்வங்களையும் நறுக்கி நறுக்கி வளர்க்கிறார்கள். இன்றைய பெற்றோர்கள் பலருக்கு ஒரு விசித்திரமான குணம் வந்திருக்கிறது. குழந்தை எதைச் செய்தாலும், அதில், “என்ன பயன்” என்கிற கேள்வி.

குழந்தைக்குப் பாட்டுப்பாடும் ஆர்வம் இருந்தால், “சினிமாவில் பாடி சம்பாதிப்பியா” என்கிற கேள்வி. கவிதை எழுதும் மாணவனைப் பார்த்தால், “சினிமாவிலே பாட்டெழுதுவியா” என்ற கேள்வி.

இதெல்லாம் இல்லையென்றால், “பேசமா படிக்கிற வேலையைப் பாரு” என்கிற கெடுபிடி.

இந்த உலகத்திற்குள் வந்தபோது, கடவுள் தந்தனுப்பிய திறமைகளைத் திருடு கொடுத்துவிட்டு, மனப்பாடக் கிளிகளாய் மாறி நிற்கும் குழந்தைகள் நிறையவே உண்டு.

குழந்தைகளிடம் இருக்கிற எந்த ஆற்றலாக இருக்கட்டும், அது அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த ஆர்வம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தும். அதுவே அவர்களை வெற்றியாளர்களாக வளர்க்கும்.

எனவே, கல்வியில் முன்னேறிக்கொண்டே தங்கள் தனித்திறமைகளை வளர்க்கவும் பெற்றோர்கள் துணை செய்ய வேண்டும். எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை நன்றாகப் பாடும். அதனைப் பாட்டு கற்றுக்கொள்ள அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். பாட்டு கற்றுத்தருகிற வித்வான், பாரம்பரிய இசையில் நன்கு வளர வாய்ப்பாக சொல்லித் தருகிறார். பெற்றோர்களோ சினிமாப் பாடல்களைப் பாடக் கற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். பிரபலமாகும் பாடல்களைப் பாடிப் பழகுவதே பிரபலமாவதற்கான வழி என்பது அவர்களின் மூடநம்பிக்கை!

கலைகளில் “பயனில்லாதது” என்று எதுவும் இல்லை. தனக்கு விருப்பமிருக்கிற கலையில் ஆழமாகப் பயிற்சி மேற்கொள்ளும்போது குழந்தைகள் மனதில் ஏற்படும் கம்பீரமும் புத்துணர்ச்சியும் அலாதிதான்.

எனவே, குழந்தைகளுக்குள் விசுவரூபமெடுக்கும் கலையுணர்வை காட்டுச்செடி போல் தழைக்க விடுங்கள். குரோட்டன்ஸ் செடி போல் நறுக்காதீர்கள்.

வீட்டில் இருக்கும் அலங்காரப் பொருட்களின் வரிசையில் உயிருள்ள வாஸ்துவாய் குழந்தைகளைப் பலர் கருதுகிறார்கள்.

“சராசரி விற்பனைப் பொருளாய் மாற்ற முடியாதவற்றிலிருந்தே பிரம்மாண்டமான ஆனந்தம் பிரவாகமெடுக்கிறது” என்கிறார் ஓஷோ-.

“The greatest joy floods you only when you are capable of doing something that can’t be reduced to commodity” என்கிறார் அவர்-.

அத்தகைய கலைத்திறமை செழித்து வளர அனுமதிப்பதும், அதில் குழந்தைகள் பெறும் நம்பிக்கையை சேர்ந்து அனுபவிப்பதுமே பெற்றோரின் கடமைகள்.

கலீல் ஜிப்ரான் சொன்னதைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல! உங்கள் மூலமாக வெளிப் பட்டிருக்கிற, பிரபஞ்சத்தின் குழந்தைகள்.”

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *