வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுக வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான் அது.

இந்த உலகம் போட்டிகள் நிறைந்ததுதான். ஆனால், நம்மை நாம் நிரூபிப்பதில் நிதானம் காட்ட வேண்டுமா, அவசரப்பட வேண்டுமா என்பது, நம்மோடு யார் மோதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

ஒரு ரயில் நிலையம் முன்பதிவு செய்யப்பட்ட சீட்டு உங்களிடம் இருக்கிறது. ரயில் வந்து நிற்கிற பிளாட்பாரத்தில் நுழைய, முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து அலைமோதுகிறார்கள் என்றால், அவர்களுடன் நீங்கள் போட்டி போட வேண்டிய அவசியமில்லை. மிக நிதானமாய், மிக உறுதியாய் உங்கள் இடத்தை நீங்கள் சென்றடையலாம்.

தகுதிகளாலும் திறமைகளாலும் வழிநடத்தப்படுபவர்களின் பாதை, எப்போதும் தனிவழிதான். நீங்கள் ஒரு நிறுவனத்தில் நல்ல அனுபவம் வாய்ந்த அலுவலராகத் திகழ்கிறீர்கள். வேறொரு நிறுவனத்துக்குப் போகலாம் என்று தோன்றினால், அங்கே இடம் காலியாகிறதா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

உங்கள் தகுதிகளை அந்த நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினால் உங்களை வேலையில் அமர்த்திக்கொள்ள அந்த நிறுவனம் ஆர்வம் காட்டும்.

சராசரிகளுக்கு மத்தியில் நீங்கள் உலவி வந்தாலும் சரியான விதத்தில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தால்போதும். உங்களுக்கு உரிய அங்கீகாரம் உரிய முறையில் வந்துசேரும்.

ஏதேனும் ஓர் அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் மிகவும் அலட்சியமாக நடத்தப்படுகிற இடத்தில் நீங்கள் உங்கள் ஆளுமையை சரியாக வெளிப்படுத்தும்போது சூழலே மாறும். உங்களுக்கு மட்டுமின்றி, பாமர விண்ணப்பதாரர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்கும்.

இதற்கெல்லாம் அடிப்படை, சுய கௌரவம். உங்கள்மேல் உங்களுக்கிருக்கிற உயர்ந்த அபிப்பிராயம்.
ஓர் அரசன் இருந்தான். பெரும்புலவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் மிகவும் ஆர்வம் காட்டுபவன். நீண்ட காலமாய் வறுமையில் வாடிய புலவர் ஒருவர், அவனிடம் சென்று தன் பாடல்களைப் பாடிப் பரிசுப் பெறப் புறப்பட்டார். தன் மீதும், தன் தமிழ் மீதம் போதிய மரியாதை அந்தப் புலவருக்கிருந்தது. நீண்ட பயணம். வறுமையில் வறண்ட மேனி. அழுக்கடைந்த ஆடைகள்.

அரண்மனையை நெருங்கிய புலவர் அதிர்ந்தார். பெருங்கூட்டம் அலைமோதியது. அன்று அரசனுக்குப் பிறந்த நாள் என்பது அவருக்குத் தெரியாது. ஜனத்திரளுக்குள் சிக்கினார் புலவர். கூட்டம் தள்ளிய தள்ளலில், அரசனுக்கு மி அருகில் போய் விழுந்தார். கூட்ட நெரிசலைக் கண்டு அரசன் ஏற்கனவே எரிச்சலில் இருந்தான். வந்து விழுந்தவர் புலவர் என்பது அவனுக்குத் தெரியாது. யாரோ இரவலர் என்று எண்ணியவன், விழுந்து கிடந்த புலவரைப் பார்த்து, “அடேய்! பறக்காதே!” என்றான். விழுந்த புலவர் எழுந்தார். எழும்போதே பாடல் “கணீர்” என்று புறப்பட்டது.

“கொக்கு பறக்கும்! புறா பறக்கும்!
குருவி பறக்கும்! குயில் பறக்கும்!
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்…
நான் ஏன் பறப்பேன் நராதிபனே!”

இந்த வரிகளே, வந்திருப்பவர் புலவர் என்பதை, அரசனுக்கு உணர்த்தியது. மனம் வருந்தினான். உரிய மரியாதைகள் செய்தான். தன் மீதும் தன் புலமை மீதும் புலவருக்கிருந்த மரியாதை, அரசனையும் பணிய வைத்தது.

உங்களை நீங்கள் மதியுங்கள்; உலகம் நிச்சயம் மதிக்கும்.

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *