“ஆமாம். என்ன சொல்லப் போறீங்க? என் தொழிலில் நான்தான் ராஜா” என்கிற எண்ணம், இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே தலை தூக்குகிறதா? சந்தேகமேயில்லை. நீங்கள் சிறுதொழில் செய்பவர்தான்.
யாரெல்லாம் சிறுதொழில் செய்கிறார்கள்? ஏன் சிறுதொழிலுக்கு வருகிறார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும், நிர்வாகவியல் நிபுணர் ஒருவர் தந்த பதில்கள் முக்கியமானவை.
“தன் மீதுள்ள நம்பிக்கை, முழுமையான சுதந்திரம், இந்த இரண்டும்தான் ஒருவர் சுய தொழில் தொடங்கக் காரணம். இந்த இரண்டின் அளவும் அதிகமாவதுதான் அவர் தனது தொழிலைக் கைவிடவும் காரணம்” என்றார் அவர்.
உண்மைதான். ஒரு தொழிலை, ஊழியராக இருந்து செய்த அனுபவம், தன்மீது நம்பிக்கையைத் தருகிறது. அதே நம்பிக்கை, சுயமாய்த் தொடங்கினால் சுதந்திரமாய் இருக்கலாம் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. அப்படித்தான் அநேகம்பேர், சிறுதொழில் தொடங்குகிறார்கள். ஆனால், காலப்போக்கில் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். என்ன அது? ஒரு தொழிலைத் திறம்பட செய்வதென்பது வேறு. அந்தத் தொழிலை நிர்வகிப்பது என்பது வேறு.
பரபரப்பாகப் பேசப்படுகிற எழுத்தாளர் ஒருவர், பதிப்பகம் ஒன்றைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். புத்தகங்களைப் பதிப்பிப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்தவர்களிடமிருந்து பணம் பெறுவது, வரிகள் கட்டுவது என்று எத்தனையோ விஷயங்களை எடுத்துப் போட்டு செய்ய வேண்டும். ஆனால் அவர் கவனம் நன்கு எழுதுவதிலும் அழகாக வடிவமைப்பதிலும்தான் இருக்கும். ஒரு புத்தகத்தின் அடக்க விலை அதிகமாகும் அளவு வடிவமைப்பதும், பிறகு விற்பனை செய்ய முடியவில்லையே என்று திணறுவதும் நேரும். ஏனென்றால், ஒரு தொழிலைத் திறம்பட செய்வதென்பது வேறு. அந்தத் தொழிலை நிர்வகிப்பது என்பது வேறு.
பொதுவாகவே, பெண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று பரவலாய் ஒரு நம்பிக்கை. ஆனால், ஓர் ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா? சிறுதொழில் தொடங்கி நடத்துவதில் ஆண்களைவிடவும் பெண்கள் வெற்றிகரமாக இயங்குகிறார்களாம். என்ன காரணம்? ஓர் ஆணின் இயல்பே, பல்வேறு விஷயங்களும் தனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்வதுதான். அரசியல், விளையாட்டு, சர்வதேச விஷயங்கள், சினிமா என்று எதைக் கேட்டாலும் அதுபற்றிப் பேசுவது ஆண்களின் இயல்பு.
இதனால், அவர்கள் ஆழ்மனதில் தனக்கொரு விஷயம் தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தயங்குவதும், அதன் விளைவாக, குத்துமதிப்பாக எதையாவது செய்துவிட்டுத் திணறுவதும் நடக்கிறது. இதில் ஓர் ஆறுதலான விஷயம், மேலைநாட்டின் சிறுதொழில் அதிபர்களைவிட, கீழை நாடுகளின் சிறுதொழில் அதிபர்கள் எச்சரிக்கையாகக் காலை வைக்கிறார்கள் என்பதுதான்.
ஆலன் வில்லியம்ஸ் என்ற அறிஞர், 10,000 சிறுதொழில் நிறுவனங்களைப் பத்தாண்டுகள் ஆராய்ச்சி செய்தார். உண்மையில், 14 ஆண்டுகாலம், 30,000 நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டினார். ஆனால் பாவம்! அவர் ஆராய்ச்சி பாதி நடக்கும்போதே 20,000 நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
அவரது ஆராய்ச்சியின்படி, சிறப்புப் பயிற்சிகளில் பங்கேற்பதை விரும்பாத சிறுதொழில் நிறுவனங்கள், அதிக அவதிக்குள்ளாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனக்குத் தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொண்டு, பயிற்சிகளை மேற்கொண்டு, சிறு சிறு பிழைகளைத் தொடக்கத்திலேயே திருத்திக் கொள்பவர்கள், பெரிய தொழிலதிபர்களாக உரிய வளர்ச்சி பெறுகிறார்கள்.
மற்றவர்கள் இடையில் காணாமல் போகிறார்கள். சிறுதொழிலில் சிறந்து விளங்க முயற்சி மட்டும் போதாது. பயிற்சியும் அவசியம் என்பது புரிகிறதல்லவா?
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…