பல நிறுவனங்களில் ஊழியர்களுக்குக் கை நிறைய சம்பளம் கொடுப்பார்கள். சம்பளத்திற்கேற்ப வேலையும் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் வேலையில் நிலைப்பதில்லை. அதே நேரம், சில நிறுவனங்களில் குறைவான சம்பளம்தான் கொடுப்பார்கள். ஆனால், அங்கே வேலையில் இருப்பவர்கள் பல்லாண்டு காலமாய் அங்கே நீடிப்பார்கள். அதற்கென்ன காரணம்?
பல சர்வதேச நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து வருபவரான பாப்பிராக்டர் ஒரு சுவாரசியமான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். சர்க்கிள் கே கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்தில், சிந்தியா என்றொரு பெண், இடைநிலை ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையைத் தற்காலிகமாக வைத்துக்கொண்டு, நல்ல வேலை தேடலாம் என்ற முடிவில் இருந்த அவர், வேறு வாய்ப்புகள் வந்தபோதும்கூட பத்தாண்டுகளுக்கு மேலாக அதே நிறுவனத்தில் வேலையில் இருந்தார். கணவனைப் பிரிந்து, தன் மகனைத் தனியாளாக வளர்த்தவர் அவர். வேலைக்கு வந்து சில மாதங்களுக்கு நடந்ததொரு சம்பவம்தான் அதற்குக் காரணம். ஒருநாள் மாலை சிந்தியாவுக்கு, அவருடைய மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “அம்மா! வரும்போது எனக்கு பேஸ்பால் கிளவுஸ் வாங்கி வா!” அதன் விலை 19 டாலர்கள். “இப்போது முடியாது! ஆறுமாதம் கழித்து வாங்கித் தருகிறேன்” என்று சிறுவனை சமாதானம் செய்தார் சிந்தியா.
மறுநாள் காலை சர்க்கிள் கே கார்ப்பரேஷன் மேலாளர், தன் அறைக்கு சிந்தியாவை அழைத்தார். “உங்கள் மகனிடம் நீங்கள் பேசியதைக் கேட்டேன். சில விஷயங்களைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க முடியாது. உங்களிடம் பணமில்லை என்பதை உங்கள் மகன் புரிந்து கொள்ள மாட்டான். அவன் உங்களுக்கு முக்கியமில்லை என்று நினைத்துக் கொள்வான். உங்களுக்கு அதிக சம்பளம் தர எங்களால் முடியாது. என்றாலும் நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர் என்பதை உணர்த்த இது ஒரு சந்தர்ப்பம்” என்று சொல்லி, ஒரு ஜோடி பேஸ்பால் கிளவுஸ் கொண்ட பையைக் கொடுத்தார்.
நிறுவனம் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறது என்பதைவிட, நிறுவனம் தன்னை எவ்வளவு மதிக்கிறது என்பதே முக்கியம் என்று சிந்தியா முடிவெடுத்தார். இன்னும் நன்றாக செயல்பட்டு, நிரந்தரப் பணியாளராய் நிலைபெற்றார். சம்பளத்தைவிடவும் சந்தோஷம் தருகிற விஷயம் ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர்தான் அங்கீகாரம்.
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…