வேலை கேட்டுவரும் விண்ணப்பங்களுடன் தன்விவரக் குறிப்புகள் இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு வருபவரின் பழக்க வழக்கங்களுக்கும் பேச்சு முறைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிம்பம் அதில் இருக்கும். எவ்வளவு படித்திருந்தாலும், என்னென்ன தகுதிகள் பெற்றிருந்தாலும், நேர்முகத் தேர்வில் தன்னை சரியாக வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள் வெற்றிபெறுவது கடினம்தான்.
நேர்முகத் தேர்வு நடைபெறும்போது உரையாடலின் தொனி இப்படித்தான் இருக்கும் என்று நீங்களாக முடிவுசெய்வது நல்லதல்ல. கேள்வி கேட்பவர் சம்பிரதாய ரீதியில் ஒரு நேர்காணலை நடத்தும் மனநிலையில் இருப்பாரேயானால் அதனை கலகலப்பான ஒன்றாக மாற்ற நீங்கள் வலிந்து முயலக்கூடாது. அவர் கலகலப்பாகக் கேள்வி கேட்டால் நீங்கள் இறுக்கமாக பதில் சொல்ல முயலக்கூடாது.
மிகைப்படுத்தப்பட்ட உற்சாகமும் அளவுக்கதிகமான பணிவும் இரண்டுமே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
அடுத்தது, கேள்விகள். கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்ல முயல்வது சிலரின் வழக்கம். இதன் மூலம், உங்கள் பதில், “வழவழா, கொழகொழா” ரகமாய்ப் போய்விடும் அபாயம் உண்டு. கேள்விக்கேற்ற பதிலை நேராகச் சொல்வதே நல்லது. இல்லையென்றால் இரண்டு தவறான முடிவுகளுக்கு நேர்காணல் நடத்துபவர்கள் வந்துவிடுவார்கள்-. உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவோ தெளிவாக வெளிப்படுத்தவோ முடியாதென்று நினைப்பார்கள். அல்லது, தெரியாத விஷயத்தை நீங்கள் மூடி மறைப்பதாய் நினைத்துக் கொள்வார்கள். சொற்களில் இருக்கும் கூர்மையும் சிக்கனமுமே நன்கு செயல்படப்போவதன் அடையாளங்கள்.
ஏற்கனவே எங்காவது வேலை பார்த்துக்கொண்டிருப்பீர்களேயானால், தற்போதுள்ள நிறுவன உரிமையாளர்களைப் பற்றிக் கேட்பார்கள். “ஏன் விலகுகிறீர்கள்?” என்று கேட்டால் பலரும் தங்கள் தற்போதைய முதலாளிகள் பற்றியோ மேலதிகாரிகள் பற்றியோ எதிர்மறையாகச் சொல்வார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை.
“இவருக்கு வேலை கொடுத்தால் நாளை நம்மைப் பற்றியும் இப்படிதான் சொல்வார்” என்கிற எண்ணம் உங்களைப் பற்றி ஏற்பட்டுவிடும்.
எனவே, உங்கள் பக்கம் எவ்வளவுதான் நியாயமிருந்தாலும் நிறுவனங்கள் பற்றிக் குறை கூற முயலாதீர்கள்.
நடப்பிலுள்ள பொதுவான விஷயங்கள் குறித்தும் நேர்முகத் தேர்வுகளில் கேள்வி கேட்பது வழக்கம். அவற்றுக்குக் காரணம், பொது அறிவில் உங்களுக்கிருக்கும் ஈடுபாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாராரைக் குறிப்பிட்டு கடுமையாகப் பேசுவார்கள்.
கேள்வி கேட்பவர் என்ன எண்ணம் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. எனவே, நடுநிலையாக அதுபற்றி நமக்குத் தெரிந்ததைச் சொல்ல வேண்டும்.
உங்கள் தகுதிகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கடந்து உங்கள் மீதான அபிப்பிராயம் உருவாகிற இடம் நேர்முகத் தேர்வில் செலவாகும் நிமிடங்கள்தான். அதற்கு மன அளவில் உங்களை முதலில் தயார்ப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்!
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…