“மரணத்துக்குப் பிறகு மக்கள் உங்களை மறந்துவிடாமல் இருக்க வேண்டுமா? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பிறர் படிக்கும்படியான விஷயங்களை எழுதுங்கள். அல்லது பிறர் எழுதி வைக்கும்படியான விஷயங்களைச் செய்யுங்கள்” என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்கும் இருக்கிற வேறுபாடே இதுதான். சாதனைகள் அற்றதாய் வாழ்க்கை அமையும்போது, சாரமற்றும் போகிறது வாழ்க்கை.
வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிடங்களை நிறையப்பேர் நிரப்புவதேயில்லை. மூங்கிலில் உள்ள முழுமையான வெற்றிடம் அழகானது. அது இசையின் கருவறை. ஆனால், அரைகுறையாய் நிரப்பப்பட்ட ஜாடிகள் போல் ஆகிவருகிறது பலரின் வாழ்க்கை. ஒரு முனிவர் இருந்தார். அவரது சீடர்கள் உபதேசத்திற்காகக் காத்திருந்தபோது, ஒரு ஜாடியைக் கையிலெடுத்தார். ஜாடி கொள்ளும் விதமாக இரண்டு சிறு பாறைகளை உள்ளே போட்டார்.
“ஜாடி நிறைந்துவிட்டதா?” என்று கேட்டார். “ஆம்” என்றனர் சீடர்கள். உடனே கொஞ்சம் கூழாங்கற்களை உள்ளே போட்டார். ஜாடியைக் குலுக்கியதும் கூழாங்கற்கள் உருண்டோடி இருந்த இடைவெளிகளை நிரப்பின.
“இப்போது நிச்சயமாக நிரம்பிவிட்டது” என்றனர் சீடர்கள். முனிவர் சிரித்துக்கொண்டே, கொஞ்சம் மணலை அள்ளி உள்ளே போட்டார். என்ன ஆச்சரியம்! மணலுக்கும் உள்ளே இடமிருந்தது.
“இப்போதாவது ஜாடி நிரம்பிவிட்டதா?” என்றார் முனிவர். “இதுவரையில் தவறாகச் சொன்னோம். இப்போது சரியாகச் சொல்கிறோம். ஜாடி நிச்சயமாக நிறைந்துவிட்டது” என்றார்கள் சீடர்கள்.
முனிவர் அமைதியாகக் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார். இருந்த இண்டு இடுக்குகளில் எல்லாம் தண்ணீர் நிரம்பியது.
அரைகுறையான நிறைவை வைத்துக்கொண்டே முழுமையாக வாழ்வை வாழ்ந்ததாய் நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
குடும்பம் – பணி ஆகியவை மட்டுமே வாழ்க்கை என்று கருதுபவர்கள், இரண்டு பாறைகளைப் போட்டதுமே வாழ்க்கை நிறைவடைந்துவிட்டதாய் நினைப்பவர்கள்.
“பொதுப்பணி” என்கிற கூழாங்கல்லுக்கு, “பொது அறிவு” என்கிற மணலுக்கு, “ரசனை” என்கிற தண்ணீருக்கு நம் அன்றாட வாழ்வில் நேரம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர்கள் சாதிக்கிறார்கள். மற்றவர்கள் பாவம்! வாழ்க்கையை வாழாமலேயே வாழ்ந்து முடிந்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள்.
உங்கள் இதயத்தை – அறிவை நன்றாகக் குலுக்குப் பாருங்கள். இடமிருப்பது தெரியும். பயனுள்ள விஷயங்களை உள்ளே கொண்டு செல்லுங்கள். உங்களால் சாதிக்க முடியும்.
ஒன்று படைப்பாளராக மலர்வீர்கள் – இல்லை என்றால் படைப்புகளில் இடம்பெறும் சாதனையாளராகத் திகழ்வீர்கள்!
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…