வெற்றியின் அளவுகோல்கள் விதம்விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவுகோல்கள் உண்டு.
ஒரு துறையில் ஈடுபடும்போது, அதில் உங்கள் வளர்ச்சி அனைத்துப் படிநிலைகளிலும் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பாருங்கள். உதாரணமாக – நீங்கள் செய்யும் பணிகளால் உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கிறது. புகழ் வளர்கிறது. எல்லோரும் உங்களை நாடி வருகிறார்கள். இதெல்லாம் சரி, உங்களுக்கு இதனால் பொருளாதார நன்மை ஏற்படுகிறதா?
“மற்றவை எல்லாம் கிடைக்கிறது. பணம் கிடைக்கவில்லை. அதனால் என்ன! ஆத்ம திருப்தி கிடைக்கிறதே” என்று நீங்கள் சொல்வீர்களேயானால், உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்.
எந்த ஒரு வேலைக்காக நீண்ட நேரம் செலவிடுகிறீர்களோ, அதில் எல்லாம் கிடைப்பது போலவே பொருளாதார நன்மையும் வேண்டும். நிறைய சம்பாதித்தவர்கள், மன நிறைவுக்காக சமூக சேவை செய்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
ஆனால் எதைத் தொழிலாகச் செய்கிறீர்களோ அதில் பொருளாதார நன்மையும் ஓர் அம்சம். பொருளாதார நன்மை கிடைக்காமல் இருப்பது இரண்டு காரணங்களில் நிகழ்ந்திருக்கலாம்.
1. நீங்கள் செய்யும் பணிகள் நல்ல பெயரையும் புகழையும் நோக்கி செய்யப்படும் அளவு பொருளாதார நன்மை தரவில்லை என்றால், அந்த வேலையை அப்படித்தான் – அதன் மூலம் பெரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைக்காது என்று பொருள்.
2. அல்லது, உரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைத்தாலும் அந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி வளங்களைப் பெருக்கும் வழி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பொருள்.
இதில் முதலாவது காரணம்தான் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் நடைமுறை உண்மையென்றால், உங்கள் உழைப்புக்கான விலையை நிர்ணயிக்க நீங்கள் தயங்குகிறீர்கள் என்று கருதலாம்.
இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை, மற்றவர்கள் தவறாகக் கருதுவார்கள் என்று மகத்தான பணிகளை செய்து அதற்குரிய ஊதியத்தைப் பெறவோ, அல்லது நீங்களே உங்கள் ஊதியத்தை நிர்ணயம் செய்து கேட்கவோ தயங்குவது பிற்காலத்தில் விரக்தியிலும் தன்னிரக்கத்திலும் கொண்டுபோய்விடும். எனவே இந்த மனநிலையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக உள்ள காரணம்தான் உங்களைப் பொறுத்தவரை உண்மை என்றால், நிதி ஆதாரங்களை சரிவரக் கையாள்வதில் உங்களுக்குப் பயிற்சியில்லையென்று பொருள். இத்தகைய சூழ்நிலையில் சரியான ஒருவரை நியமித்து உங்கள் நிதி ஆதாரங்களை சீர் செய்ய வேண்டும்.
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…