நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள்.
1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா?
2. உங்களிடம் பணிபுரிபவர்கள், புதிய திறமைகளை வெளிப்படுத்தி, புதிய நுட்பங்களைக் கற்றறியாவிட்டாலும் பரவாயில்லை – சொல்கிற வேலையை சரியாகச் செய்தாலே போதும் என்று நினைக்கிறீர்களா?
3. மாறிவரும் சூழலுக்கேற்ப, முன்னேற்றம் நோக்கிய மாற்றங்களை முதலில் உங்களிடமும் – பிறகு உங்கள் பணியாளர்களிடமும் – உங்கள் ஒட்டுமொத்த சூழலிலும் உருவாக்க விரும்புகிறீர்களா?
இதிலுள்ள மூன்றாவது எண்ணத்திற்கே நீங்கள் முதலிடம் தருவதாக இருந்தால் புதுமை உங்கள் பிறப்புரிமை என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பதாகப் பொருள்.
செய்வதைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வது என்பதற்குப் பச்சையான அர்த்தம் என்ன தெரியுமா? ஏற்கனவே இருக்கும் சிக்கல்களைத் தீர்க்கத் தெரியவில்லை என்பதுதான் அர்த்தம்.
அன்றாட நடைமுறைகளிலேயே ஆயிரம் சிக்கல்களை வைத்துக்கொண்டு தீர்க்க முடியாமல் தடுமாறுபவர்கள்தான் இருப்பதை சரியாகச் செய்தால்போதும் என்று கருதுவார்கள்.
ஒரு நிறுவனத்தில் பெரிய தலைவலியாக இருப்பது எது என்று நிச்சயம் தெரியும். நிறுவனத்தில் இருப்பவர்கள் அந்தத் தலைவலியை தினம்தினம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் என்றால், அது மிகவும் தவறான அணுகுமுறை. வலிகளோடும் சிக்கல்களோடும் வாழப் பழகுவது எந்த வளர்ச்சிக்கும் இடம் தராது.
எனவே புதுமை நோக்கிய முதல் படியே சிக்கலற்ற – சீரான நடைமுறைகளை நிறுவனத்தில் கொண்டுவருவதுதான்.
SAP – என்ற அமெரிக்க நிறுவனம் வெற்றிகரமான நிறுவனங்களை ஆராய்ந்ததில் ஓர் அடிப்படையைக் கண்டறிந்திருக்கிறது. “தங்கள் நிறுவனத்திற்கு தேவைகள் என்ன – எவற்றுக்கு முதலிடம் தரவேண்டும் – அவற்றை விரைவாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்துவது எப்படி?” இந்த மூன்று கேள்விகளுக்கும் எந்த நிறுவனத்திடம் விடைகள் உண்டோ அந்த நிறுவனம் பல புதுமைகளை உள்வாங்கிக் கொண்டு வேகமாக வளர்கிறது.
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…