பணியில் சேர விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இரண்டுவிதமான தகுதிகளை நிர்வாகம் எதிர்பார்க்கும். ஒன்று, அந்தப் பணியை செய்வதற்கான தொழில் நூல் ரீதியான தகுதிகள். இன்னொன்று, மனித வள அடிப்படையில் ஒரு பணியாளராக – நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் தோள் கொடுப்பவராக – உங்கள் தகுதிகள்.
இந்த இரண்டில், முதலாவது அம்சம் நீங்கள் முயன்று பெற்ற தகுதிகள். இரண்டாவது அம்சம். நீங்கள் கூர்மைப்படுத்திக்கொண்டு இருக்கக்கூடிய தகுதிகள். உங்களைச் சந்தித்த நாள் முதல் நிமிடத்திலிருந்து, உங்களைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை உருவாக்கப் போகிறவை இந்தக்கூடுதல் தகுதிகள்தான்.
பதற்றம், பயம் போன்றவை முகத்திலேயே நின்று முன்னுரை எழுதும். பதற்றமும் பயமும் உங்கள் தகுதி பற்றிய உங்களுக்கே இருக்கும் குறைவான மதிப்பீட்டின் அடையாளங்கள். பதற்றத்தில் இருக்கும்போது கேட்கப்படுகிற கேள்விகளை உங்களால் முழுமையாக உள்வாங்க முடியாது. கேள்வி புரியாதபோது, வார்த்தைகளில் தடுமாற்றம் வந்து உங்களையும் நம்பிக்கை இழக்கச் செய்யும். மனதை அமைதியாக்கிக் கொண்டு நேர்காணல் அறைக்குள் நுழைவது அவசியம். மூச்சை ஆழ இழுத்துவிடுகிற பயிற்சியை மேற்கொள்வது, கண்மூடி சிறிதுநேரம் அமர்ந்திருப்பது போன்றவை நேர்காணலுக்கு ஓரிரு மணி நேரங்கள் முன்னதாகவே செய்யலாம்.
கேட்கப்பட்ட கேள்வியை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு உங்களுக்குச் சரியென்று படுகிற பதிலை நிதானமாகவும் உறுதியாகவும் சொல்லுங்கள். உங்கள் விடை தவறென்று கேள்வி கேட்பவர்கள் தெரிவித்தால், வருத்தம் தெரிவித்துவிட்டு, சரியான பதிலைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுங்கள். நீங்கள் சொன்ன பதிலுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், பதில் சொன்ன தோரணையிலும் வெளிப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். பெரும்பாலும் நேர்காணல்களில் கேட்கப்படுகிற முதல் கேள்வி, “உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்” என்பதுதான்.
பல பேர் தங்கள் பிறப்பு – பிறந்த தேதி – பிறந்த மருத்துவமனையில் தொடங்கி, பெற்றோர் பற்றிய விபரம் – அக்கா, அண்ணன் எங்கே வேலை பார்க்கிறார்கள் என்று பட்டியல்போட்டு, “குலமுறை கிளத்து படலம்” ஒன்றையே சொல்லி முடிப்பார்கள்.
இப்படிச் சொன்னால், கேள்வி கேட்பவருக்கு நீங்கள் வேலைதேடி வந்திருக்கிறீர்களா? கல்யாணத்திற்கு வரன்தேடி வந்திருக்கிறீர்களா என்ற சந்தேகம் எழ வாய்ப்பிருக்கிறது.
‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்றால் உங்கள் கல்வித்தகுதி, வேலை பார்த்த அனுபவம் அல்லது அது தொடர்பாக நீங்கள் பெற்ற சிறப்புப் பயிற்சிகள் – கூட்டாகப் பணிபுரிவதில் உங்களுக்கும் ஆர்வம் – உங்களின் அணுகுமுறை ஆகிய விஷயங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த விவரங்களைப் பட்டியல் போட்ட பிறகு, குடும்பம் பற்றி இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்ளலாம்.
சமீப காலமாய் நேர்காணல்களில் கேட்கப்படுகிற கேள்விகளில் ஒன்று, “உங்கள் பலவீனங்கள் என்ன?” என்பது. இந்தக் கேள்வி காதில் விழுந்ததுமே, சிலர் உணர்ச்சி வசப்பட்டு, கண்களில் நீர் மல்க, மண்டியிடாத குறையாய் பாவ மன்னிப்பு கேட்கிற பாவனையில், தங்கள் பலவீனங்கள் – தவறுகள் – தகுதிக் குறைவுகள் என்று பட்டியல் போட்டு, கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக்கொள்ளும் அளவுக்குப் போய்விடுவார்கள்.
இப்படிச் செய்வதில், கேள்வி கேட்பவர்களும், “கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்” என்று ஆசீர்வதித்து அனுப்பிவிட வாய்ப்பிருக்கிறது.
உங்களைப் பற்றிய உண்மைகளைச் சொல்லலாம். ஆனால் உங்கள் மேல் நம்பிக்கையிழக்கச் செய்யும்விதமாக சொல்லக்கூடாது. உங்கள் சிறிய பலவீனம் ஒன்றைச் சொல்லி அதை எப்படி சரிசெய்து கொண்டீர்கள் – அல்லது சரி செய்து வருகிறீர்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.
உதாரணமாக, “மறதி என் பலவீனமாக இருந்தது. என் பலவீனமாக இருந்தது. எனவே எல்லாவற்றையும் எழுதிவைத்துக் கொண்டு செய்யப்பழகிவிட்டேன்” என்று சொல்லலாம்.
அதேபோல, “உங்கள் பலங்கள் என்ன?” என்று கேட்கிறபோது சிலர், “உங்கள் நிறுவனம் சரிந்து கொண்டிருக்கிறது. சரி செய்ய நானிருக்கிறேன்” என்று எல்லை மீறிய உற்சாகத்தில் பேசுவதுண்டு.
உங்களிடம் உள்ள தனித்தன்மை, நிறுவனத்தின் வளர்ச்சியில் பயன்படக்கூடிய உங்கள் அணுகுமுறை – உங்களின் நல்ல இயல்புகள் ஆகியவற்றை அடக்கமாக – ஆனால் – அழுத்தமாகச் சொல்லலாம். இதற்கு முன்னர் பணிபுரிந்த இடம் பற்றிக் கேட்கிறபோது, அந்த நிறுவனத்தின் குறைகளில் தொடங்காதீர்கள். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. நிறுவன உரிமையாளர்கள் எல்லோரும் எப்போதும் தனிக்கட்சி. அலுவலர்களின் விமர்சனங்களை ஏற்கும் மனப்பான்மை பலருக்கும் இருப்பதில்லை. விளம்பர நிறுவனமொன்றை நடத்தி வந்த மனிதர், கூடுதலாக சில தொழில்கள் செய்து கொண்டிருந்தார். அவரிடம் வேலை கேட்டு வந்தார் ஓர் இளைஞர். முந்தைய நிறுவனம் பற்றிக் கேட்டபோது அந்த இளைஞர், “எங்க ஓனருக்கு வேற தொழில் இருக்கு. அதனாலே இதிலே கவனம் செலுத்தறதில்லை” என்றதும் இவருக்கு வந்ததே கோபம்!! “அதனாலென்ன? அவர் உங்களுக்கு சம்பளம் தருகிறாரல்லவா?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். இவர்கள் எல்லோரும் ஒரே ஜாதி….
இரண்டாவது காணரம், நீங்கள் இந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற நேர்ந்தால் இதேபோல வெளியே போய் சொல்வீர்கள் என்று கருதுவார்கள்.
எனவே, முந்தைய நிறுவனத்தைவிட்டு வெளியேற தனிப்பட்ட காரணங்கள் இருந்தால் சொல்லுங்கள். “உங்கள் நிறுவனத்தில் வளர்ச்சி அதிக வாய்ப்பு உள்ளதாக எண்ணுகிறேன்” என்பது போன்ற குளுமையான பதில்களைக் கூறலாம். முந்தைய நிறுவனத்திடமிருந்து நீங்கள் சுமூகமாகப் பிரிந்து வந்திருந்தால் அவர்களிடமிருந்து பெற்ற நற்சான்றுக் கடிதத்தைக் காட்டலாம். பிரிய நேர்ந்தாலும் பிரச்சினை செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.
உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்புகிற விஷயங்கள் என்ன என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேள்வியாளர் கேட்கலாம். அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். பொருட்படுத்தவே முடியாத சின்ன விஷயங்களைச் சொல்லுங்கள். “எங்கே ஐஸ்க்ரீம் கிடைத்தாலும் ஒரு கை பார்ப்பதுண்டு. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மாறிவருகிறேன்” என்று பதில் சொல்லுங்கள். கேள்வியாளருக்கு ஐஸ்க்ரீம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்த பதில் அவருக்குப் பிடிக்கும்.
“எங்கள் நிறுவனம் பற்றி என்ன தெரியும்?” என்ற கேள்வி கண்டிப்பாக இடம் பெறும். எந்த நிறுவனத்தில் வேலை கேட்டுப் போகிறீர்களோ, அந்த நிறுவனம் குறித்து நன்றாகவே தெரிந்திருப்பது அவசியம்.
அப்புறம் உங்கள் சமயோசிதத்தையும் தெளிவையும் சோதிக்கிற கேள்விகள் சில இடம்பெறும். “உங்களுக்குப் பின்புறம் உள்ள சுவரின் நிறமென்ன?” இது ஓர் உதாரணம். உடனே நீங்கள் பின்னால் திரும்பிப்பார்த்து பதில் சொல்லக்கூடாது. உங்கள் முன்னே இருக்கிற சுவரின் நிறம்தான் பின்னாலும் இருக்கும். நீங்கள் ஏதேனும் வண்ணமாக இருந்தால் என்னவாக இருப்பீர்கள் என்றொரு நேர்காணலில் கேட்கப்பட்டது. சிலர் தங்களுக்குப் பிடித்த நிறங்களைச் சொன்னார்கள். ஒருவர், “எனக்குப் பஞ்சுமிட்டாய் மிகவும் பிடிக்கும். எனவே பிங்க் நிறமாக இருப்பேன்” என்று மழலைக்குரலில் எல்லாம் பதில் சொன்னார்.
வேலை யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பதைவிட, அவர் என்ன பதில் சொன்னார் என்பது முக்கியம். “நான் மிகவும் அமைதியானவன். எதையும் ஆழமாக ஆலோசிப்பேன். எனவே, இருந்தால் நீ நிறமாக இருப்பேன்” என்றார்.
வித்தியாசமாக சிந்திப்பதாய் நினைத்து வினோதமாக பதில் சொல்லாமல் விவரமான பதில்களைக் கொடுங்கள். உங்கள் மேல் நம்பிக்கையை – முடிந்தால் பிரம்மிப்பை ஏற்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்!
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…