“என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்!” என யாராவது சொன்னால், அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரது வார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைக் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான். ஒரு மனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை அனைத்தையும் மீட்கலாம். ஆனால், நம்பகத் தன்மையை இழந்துவிட்டால் பின்னர் எதுவுமே இருக்காது. நீங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நம்பகமானவராய் நிலைபெறவென்று சில வழிமுறைகள் உண்டு.
சொன்ன சொல்லைக் காப்பது:
நாம் சொன்ன சொல்லைக் காக்க முடியாமல் நம்மையும் மீறிய காரணங்கள் ஏற்படலாம். அவற்றையும் மீறி, சொன்ன சொல்லைக் காப்பதே, சிறந்தது. நமது நம்பிக்கை மாத இதழின் தொடக்க விழா 2004 மே 3ஆம் தேதி நடைபெற்றது. மாலை 5.40க்குள் அரங்குக்கு வருவதாக விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான டாக்டர் வினுஅறம் குறிப்பிட்டிருந்தார். அவரது விலையுயர்ந்த கார் வருவதற்கான சுவடே 5.45 வரை தெரியவில்லை.
5.48 இருக்கும், ‘சர்’ரென்று ஓர் ஆட்டோ வந்து நின்றது. வழியில் பழுதான காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, அவசரம் அவசரமாய் ஆட்டோ பிடித்து பத்து நிமிடங்கள் முன்பாய் அரங்கம் வந்து சேர்ந்தார் அவர். இது, சொன்ன சொல்லைக் காப்பதன் அடையாளம்.
சின்ன சொல்லையும் காப்பது:
ஒருவர் பெரியதோர் உதவிகேட்டு உங்களிடம் வருகிறார். புதன்கிழமை சாயங்காலம் ஆறுமணிக்கு நேரில் வந்து செய்து கொடுப்பதாய் சொல்கிறீர்கள். உங்கள் வீட்டு சி.டி.யில் அபூர்வமாய் பாடல் ஒலிக்கிறது. வந்தவர் ஆவலுடன் வினவும்போது “இதென்ன பிரமாதம்! புதன்கிழமை வரும்போது உங்களுக்கு ஒன்று தருகிறேன்” என்கிறீர்கள். புதன்கிழமை பெரிய உதவியைச் செய்து தரப்போகும்போது இந்தச் சின்ன விஷயத்தையும் மறவாமல் செய்து கொடுப்பீர்களென்றால் உங்கள் மதிப்பும் நம்பகத்தன்மையும் பல மடங்குகள் உயர்ந்துவிடும்.
வார்த்தை தரும்போது கவனமாய் இருங்கள்:
ஒன்றைத் தருவதாகவோ, ஓர் இடத்திற்கு வருவதாகவோ, வார்த்தை தரும்போது, நாள் – நேரம் – இடம் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். அதற்கு முன்னால், அந்த விஷயத்தை உங்களால் செய்து தரமுடியுமா என்று ஒருமுறைக்க இரண்டு முறை நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள். அதன்பின்னால், உங்களால் முடியும் என்பதையோ, முடியாது என்பதையோ தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.
வார்த்தை தவறினால்:
உங்களையும் மீறி எப்போதாவது சொன்ன சொல் தவற நேர்ந்தால், முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல் தந்து வருத்தமும் தெரிவியுங்கள். அது உங்கள் தொழில் சார்ந்ததாக இருந்தாலும் சரி, நீங்கள் செய்து தரும் உதவியாக இருந்தாலும் சரி நாம் தந்த வார்த்தையை மீற நமக்கே உரிமையில்லை என்பதை மனதில் உணர்ந்து, கூடிய விரைவில் அதனைச் செய்து தர முயலுங்கள்.
நம்பகத் தன்மைகள் கொடுக்கும் நன்மைகள்:
உலகம் உங்களை நம்பத் தொடங்கும்.
உயர்ந்த இடங்களில் இருப்பவர்கள் உங்கள் மேலுளள நம்பிக்கையால் உதவுவார்கள்.
உங்கள் பெயரை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள் – உங்கள் வட்டம் விரிவடையும்.
உங்களால் ஒரு சில நேரங்களில் சரியான நேரத்தில் செய்து தரமுடியாதபோதும் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.
உங்கள் மேல் உங்களுக்கே நம்பிக்கை அதிகரிக்கும்!
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…