இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.
1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா?
2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் குறித்து வையுங்கள்.
3. தள்ளிப் போடுவதை ஒரு வழக்கமாகத் தொடங்கி, வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? அவர்கள் என்ன ஆனார்கள்?
இதையெல்லாம் செய்தாலே தள்ளிப் போடுவதில் இருக்கும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நமக்குப் புரிந்துவிடும்.
ஒரு மளிகைக் கடைக்குப் போகும்போதே நம்மிடம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இருக்கிறதே. ஒவ்வொரு விடியலின் போதும் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் வேண்டாமா என்ன? தள்ளிப் போடும் பழக்கம் நம்மை விட்டுத் தள்ளிப் போக அடிப்படையில் இன்னொரு வேலையையும் செய்தாக வேண்டும். அதுதான் விடியல் பொழுதைப் பயன்படுத்துவது. விடிந்து சிறிது நேரம் சென்றபிறகு விழிப்பவர்களுக்கு நாள் நகர்கிற வேகத்திற்கு ஈடுகொடுத்து, அதைத் துரத்திப் பிடிப்பதே பெரிய பாடாகி விடுகிறது.
விடியல் நம்மை நன்றாக வேலை வாங்கக் கூடிய நேரம். தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், அந்த வேலைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அதன் பின்னர் வேலையைத் தொடங்குவதே உத்தமம்.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக்கூட பேனா, பேப்பர், கிளிப், எழுதுவதற்கான அட்டை என்று ஒவ்வொன்றையும் தவணை முறையில் எடுத்துக் கொண்டு வந்தால், இதை எழுதி முடிக்கிற வேலை கண்டிப்பாகத் தள்ளித்தான் போகும்.
இதையெல்லாம்விட முக்கியம், ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது. ஒரு நாள் முழுவதும் இயந்திரம்போல் யாரும் வேலை பார்த்துக்கொண்டே இருப்பதும் சாத்தியமில்லை. உல்லாசத்திற்குக் கொஞ்ச நேரம், நண்பர்களுடன் பேச சிறிது நேரம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு சில நிமிஷங்களை அவ்வப்போது ஒதுக்க வேண்டி வருகிறது.
ஏகத்துக்கு வேலை இருப்பதாக நினைப்பவர்கள் இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை முற்றாக நீக்கிவிட்டு, வேலையிலேயே முழு கவனம் செலுத்துவதாய்த் தொடங்குவார்கள். இடையில் அலுப்புத் தட்டத் தொடங்கிவிட்டால் போச்சு. இந்த வேலை – சொந்த வேலை – எந்த வேலையையும் செய்யாமல், வேலைக்கான ஆயத்தப் பணியை வேண்டுமென்றே நீட்டிக்க மனது தூண்டத் தொடங்கும். உற்சாகமும் தூங்கத் தொடங்கும்.
நம்முடைய நேரங்களை சமவிகிதத்தில் சரியாகப் பங்கிட்டு வேலைகளில் ஈடுபடப் பழகி விட்டால் நேரம் வீணாவதை நிச்சயமாகத் தடுக்கலாம்.
என்னசெய்ய விரும்புகிறோம் – என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியை அதிகமாக்குவதே தள்ளிப் போடுகிற மனோபாவம்தான்.
இன்னொன்றும் முக்கியம். ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான வேலை என்று ஒன்றை மட்டும் பட்டியலிடுங்கள். அவற்றை முதலில் முடித்து விடுங்கள். அதன்பின், மற்றவற்றைச் செய்ய உங்களுக்கு உற்சாகம் தானே பிறக்கும்.
நாள் முழுவதும் காரியங்களைத் தள்ளிப் போடாமல் சாதகமாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு விடியற்காலை விசேஷமானது என்று பார்த்தோம். விடியற்காலையைப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் உகந்த வழி, இரவு விரைவிலேயே உறங்கப் போவதுதான். தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பே தொலைக்காட்சி- கணினி ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
தள்ளிப் போடத் தூண்டும் சோம்பல், உங்களைவிட்டுத் தள்ளிப் போகும். தள்ளிப் போடாதீர்கள் துள்ளியெழுங்கள்.
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து..