பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என்று நம் முதலீடுகள் உள்ள துறைகள் மந்த கதியில் இருப்பதைப் பார்த்துப் பலரும் மனம் கலங்கி இருக்கிறார்கள். “இதற்குத்தான் பங்குச் சந்தையே வேண்டாம் என்பது” என்று சிலரும், இதுவரை பங்குச் சந்தை பக்கமே போனதில்லை? இனிமேலும் போகமாட்டேன்” என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிற நேரம் இது. இப்போது உண்மையில் என்ன செய்யலாம் என்பது பற்றி பல நிதி ஆலோசகர்கள் நிறையவே சொல்கிறார்கள். அவற்றினுடைய சாரம் இது!
பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறபோது மட்டுமில்லை. பொதுவாகவே உங்கள் பணத்தை எதில் முதலீடு செய்தாலும் இரண்டு எதிரிகளை அண்டவிடக் கூடாது. முதல் எதிரி பயம். இரண்டாவது எதிரி பேராசை. இருக்கிற எல்லாவற்றையும் இழந்துவிடப் போகிறோமோ என்கிற திகிலை தேவையில்லாமல் ஏற்படுத்துவது இந்த பயம். இருப்பதை எல்லாம் இழந்து விடுவதற்கான ஏற்படுகளைச் செய்வது பேராசை நல்ல முடிவுகளை எடுக்கவிடாமல் தடுக்கிற, எதிரிக்கு பயம் என்று பெயர். மோசமான முடிவுகளை வேகமாக எடுப்பதற்கு உங்களைத் துண்டும் எதிரிக்கு, பேராசை என்று பெயர்.
பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகள் வேகவேகமாய்க் கீழே போகும்போது விற்று விடலாமே என்கிறபதட்டம் வரம். அந்தப் பதட்டத்திற்கு பதில் சொல்லக்கூடாது. அதற்கு எதிரான மனோ நிலையில் இயங்க வேண்டும். ஏனெனில் பங்குகளில் விலை வீழ்ச்சி ஏற்படும் நேரம்தான் பங்குகள் வாங்கப் பொருத்தமான நேரம். அதே நேரம் பங்குகளின் விலை பலமடங்கு எகிறுகிற போது அதிக விலை கொடுத்தேனும் அநேக பங்குகளை அள்ளிக்கொள்ள ஆசை பிறக்கும். ஆனால் பங்குகளில் விலை உயருகிற போது அதுதிடீரென்று குறையவும் கூடும். எனவே சிலவற்றை விற்றுவிட்டு வெளியே வரவேண்டும். அங்கேதான் பேராசையை அனுமதித்தால் அது பெரும் நஷ்டத்திற்குப் பாதை வகுக்கும்.
பங்குச் சந்தை என்பது பணம் மட்டும் விளையாடும் இடமல்ல. உங்கள் சமயோசிதமும் சாமர்த்தியமும் போட்டி போடுகிற களம். உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மூளைக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர்கள் பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் பலமடங்கு பணம் பண்ணுகிறார்கள்.
எனவே, முதலில் உங்கள் உணர்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று உற்று கவனியுங்கள்.
எல்லாம் போகப் போகிறது – இருக்கிற பங்குகளை விற்றுவிடலாம் என்ற பதட்டம் ஏற்படும் போது, உரிய வழிகாட்டுதலோடு பங்குகளை வாங்குங்கள். நீங்கள் நினைத்ததுபோல் எல்லாம் நடக்காது -இன்னும் கொஞ்சம் பங்குகள் வாங்கலாம் என்று தோன்றுகிறதா? இதுதான் பங்குகளை விறக நல்ல நேரம்!!!
அதற்காக உடனே எல்லாவற்றையும் விற்கவோ ஒரேயடியாக வாங்கவோ செய்யாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அடியெடுத்து வையுங்கள். சிறுக வாங்கி சிறுக விற்றுப் பெரு வாழ்வு வாழுங்கள்.
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து..