1. கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவே இடைவெளி விழுந்ததாய்க் கருதுகிறீர்களா? அப்படியானால் ஒன்று மட்டும் உறுதி. நகர்ந்து போனது நீங்களாகத்தான் இருக்கும்.
2. காரியங்களைச் செய்ய கடவுளின் துணையைக் கேளுங்கள். ஆனால் அவரே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று எண்ணாதீர்கள்.
3. அடிப்படை விஷயங்களில்கூட அலட்சியமாய் இருந்துவிட்டு, பிறகு கடவுளின் மீது பழி போடாதீர்கள். கடவுளை நம்புங்கள். ஆனால் கார்க் கதவைப் பூட்டுங்கள்.
4. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது கடவுள் உங்களுக்குத் தந்த பரிசு. நீங்கள் என்னவாக ஆகிறீர்களோ, அது கடவுளுக்கு நீங்கள் தரும் பரிசு.
5. உங்கள் இலக்கை நீங்கள் சென்றடையும் பயணத்திற்குக் கடவுள் பொறுப்பேற்கிறார். ஆனால் கரடுமுரடான பாதைக்கு அவர் பொறுப்பல்ல. அதில் நடப்பதும் கடப்பதும் உங்கள் சாமர்த்தியம்.
6. நன்கு பணி செய்தால் நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம். ஏனெனில் கடவுள் எப்படியும் விழித்திருப்பார்.
7. உங்கள் பிறப்புக்கென்று ஒரு காரணத்தையும், அதை நீங்கள் நிறைவேற்றவென்று ஒரு திட்டத்தையும் கடவுள் கண்டிப்பாக வைத்திருப்பார். அதை நீங்கள் மட்டுமே செய்ய முடியுமென்று அவருக்குத் தெரியும்.
8. தன்னுடைய பாதுகாப்புக்கு உட்படாத எந்த இடத்திற்கும் கடவுள் உங்களை அனுப்புவதில்லை.
9. கடலில் நகரும் படகுதான் உங்கள் வாழ்க்கை. தடுப்பை நீங்கள் போடலாம். காற்றின் திசையைக் கடவுள்தான் தீர்மானிக்கிறார்.
10. செயலில் இறங்குங்கள்; கடவுள் வழி தருவார். நெசவைத் தொடங்குங்கள்; கடவுள் நூல் தருவார்.
11. ஏதேனும் ஒன்றைக் கடவுள் வழங்க மறுத்தால், அதனினும் மேம்பட்ட ஒன்று உங்களுக்குக் காத்திருப்பதாகப் பொருள்.
12. உங்களை எதிர்த்து நிற்கும் எந்த சக்தியும் உங்களுக்குத் துணை நிற்கும் கடவுள் சக்தியைவிடப் பெரிதல்ல.
13. பலர் பிரார்த்தனை என்ற பெயரில் கடவுளுக்கு ஆலோசனைகள் சொல்வதுண்டு. நன்றி மட்டும் சொல்லுங்கள். நன்மை தீமைகளுக்கு அவரே பொறுப்பு.
14. உங்கள் வேலை, கடவுள் பணித்த வேலையைச் செய்வது. கடவுளின் வேலை, உங்கள் வேலைகள் சரியாக நடக்கும்படி பார்த்துக் கொள்வது.
15. கடவுளைத் தேடாதீர்கள். அவரொன்றும் காணாமல் போனவர் அல்ல.
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…