நவீன மாற்றங்கள் எல்லாம் நிர்வாகத்தின் பரப்பளவை வளர்த்துக்கொண்டே போகிற யுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு நிர்வாகிக்கு, பன்முக ஆற்றல் இருந்தால் மட்டுமே, அவரும் நிறுவனமும் நீடிக்க முடியும்.


நிர்வாகிக்கு வேண்டிய ஆற்றல் என்னவென்று யாரையாவது கேட்டால், “நிர்வாகத் திறமை” என்று ஒரே வார்த்தையில் சொல்வார்கள்.


ஆனால் என்னைப் பொறுத்தவரை, “தனக்குத் தெரியாத துறைகளையும் நிர்வகிப்பதே நல்ல நிர்வாகம்.” அதற்கு அர்த்தம், தன் அலுவலகத்தில் எல்லாப் பிரிவுகள் குறித்தும் அவருக்கு ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக, வரவு செலவு, நிதி நிர்வாகம் போன்றவையெல்லாம் ஒரு நிறுவனத்தில் கணக்காளர்கள் செய்வது. ஆனால் அது பற்றிய அடிப்படைத் தகவல்கள் ஒரு நிர்வாகிக்குத் தெரிந்திருப்பது அவசியம். இன்று கம்ப்யூட்டரும் அதற்குப் பெரிதும் துணை செய்கிறது.


அடுத்தபடியாக, ஒரு நிர்வாகிக்கு வேண்டிய திறமை, “பேசித் தீர்த்தல்.” ஒரு நிறுவனத்தோடு தொடர்புடைய பிற நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் என்று பல்வேறு தரப்பினரோடும் மனம் கோணாமல் பேசி, “ஆதாயம் தரும் முடிவுகளை” ஏக மனதாக எடுக்கும் திறமையே இது.
இந்த ஆற்றல்தான் அன்றாட நிர்வாகத்தின் பல சிக்கல்களுக்குத் திறவுகோல் என்பதைப் பலரும் உணர்வதில்லை. உதாரணமாக, ஒரு புகார் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். அந்தப் புகாரை எதிர்கொள்கிறேன் பேர்வழி என்ற பெயரில், பலரும் அதனை எதிர்த்தே பேசிக்கொண்டிருப்பார்கள்.


அதாவது, அந்தப் புகாரின் முகாந்திரமே தவறு என்று தொடங்குவதால், மறுதரப்பில் எதிர்ப்புணர்ச்சிதான் பெருகும். அவர்கள் தங்கள் குற்றச்சாட்டின் அடிப்படைக்கு வலுவூட்டப் பார்ப்பார்களே தவிர, தீர்வு நோக்கி அந்த உரையாடல் நிகழாது. கூர்மையான நிர்வாகிகள் இத்தகைய சூழ்நிலையில், “அடுத்தது என்ன?” என்கிற அணுகுமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள்.


இங்கிலாந்தில் உள்ள பொது தொலைபேசிகள் இரண்டு வகைப்படும். ஒரு தொகையைப் போட்டால் மீதி சில்லறை கொடுக்கக்கூடிய தொலைபேசி. சரியான சில்லறை மட்டுமே போட்டு உபயோகிக்க வேண்டிய தொலைபேசி. இரண்டாவது வகைத் தொலைபேசியில் சில்லறையில்லாமல் ஒரு வாடிக்கையாளர் பவுண்ட் கணக்கில் போட்டார். தான் தவறுதலாகப் போட்டு விட்டதாகவும் மீதித்தொகையைத் தரமுடியுமா என்றும் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதினார்.


சில நாட்களிலேயே அவருக்கு பிரிட்டிஷ் டெலிகாமிடம் இருந்து கடிதம் வந்தது. “இரண்டாவது வகைத் தொலைபேசியில் தவறுதலாக பவுண்ட் செலுத்தியதாக எழுதியிருந்தீர்கள். அதில் சரியான சில்லறை போடவும் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. ஆனாலும் உங்கள் விருப்பப்படி மீதமுள்ள தொகையை இணைத்திருக்கிறோம். தொடர்ந்து பிரிட்டிஷ் டெலிகாமை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.”


இதுதான் “பேசி முடித்தல்” என்கிற நிர்வாகத் திறமைக்கு அடையாளம். நிர்வாகிகளுக்கு வேண்டிய மூன்றாவது முக்கியத் தகுதி, தலைமைப் பண்பு. தானாக முன்வந்து பொறுப்பேற்கும் ஆற்றல்தான் தலைமைப் பண்பின் அடையாளம்.


சர்ச்சில் ஒரு முறை சொன்னார், “தலைவர்கள், தாங்கள் தலைவர்கள் என்று சொல்வதில்லை. செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்” என்று. தலைமைப் பண்பின் அடையாளமே இதுதான். இவையெல்லாவற்றையும்விட ஒரு நிர்வாகிக்கு வேண்டியது புதுமைக் கண்ணோட்டம். முற்றிலும் புதுமையான அணுகுமுறையை மேற்கொண்ட நிறுவன வளர்ச்சி ஊழியர்கள் நலன் போன்றவற்றில் கவனம் செலுத்துவது.


இத்தனை தகுதிகள் இருந்தாலும், ஒரு முக்கியமான பண்பு இருந்தால் மட்டுமே நிறுவனத்திற்கு உள்ளும் வெளியிலும் உள்ளவர்கள் மதிப்பார்கள். அதுதான் மனிதப் பண்பு. பிறர் நலனில் காட்டுகிற அக்கறை, ஊழியர்கள் சிரமங்களைப் புரிந்துகொள்கிற பக்குவம், கனிவு கலந்த கண்டிப்பு ஆகிய அடிப்படைத் தகுதிகள் அவசியமாகின்றன. இத்தனை தகுதிகளையும் பெருக்குவதற்குப் பெயர்தான் மனிதவளம். இத்தகைய நிர்வாகிகளே வெற்றிமயமாக வளர்வார்கள்.


– மரபின் மைந்தன் ம. முத்தையா

(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *