தொழிலதிபர்களின் கூட்டமைப்பு, தொழில் முனைவோரின் கூட்டமைப்பு போன்றவையெல்லாம் உலகுக்குப் புதியதல்ல. இந்தியாவிலும் இத்தகைய அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், ஒரு தேசத்தில் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற சக்தியுடனும் செயல்திறனுடனும் செயல்பட்டன. அவை தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அந்த தேசத்தின் தொழிலுகத்தையும் அதன் போக்கையுமே தீர்மானித்தன எனலாம்.
இது நிகழ்ந்த நாடு எதுவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆம்! ஜப்பான்தான். இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு உருவான அந்தக் கூட்டமைப்புக்கு ஸைய்பட்சு என்று பெயர்.
மிடசூயி, சுமிடோமோ, மிட்சுபூஷி, யசுடா போன்றவை ஸைய்பட்சுவில் அங்கம் வகித்த சிங்கங்கள். ஸைய்பட்சு நிறுவனம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி டிரேடிங் நிறுவனங்கள் இருந்தன. இவற்றுக்கு “ஸோகோ ஸோஷா” என்று பெயர். இந்த ஸைய்பட்சு நிறுவனங்களிடம் விசுவாசமாக பணிபுரிய ஓர் ஊழியர் உறுதி பூண்டுவிட்டால், ஆயுள் முழுவதம் அவருக்குக் கவலையே கிடையாது.
ஜப்பானிய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் வெளியூர் பொருட்களை இறக்குமதி செய்யவும், இந்தக் கூட்டமைப்பு பெரிதும் துணை புரிந்தது. ஸைய்பட்சு கூட்டமைப்பு வளர வளர, அதன் அரசியல் செல்வாக்கும் வளர்ந்தது. அதே நேரம், மேற்கத்திய வழிகள் மூலம், ஜப்பானின் பண்பாட்டுச் சூழலுக்குப் பொருத்தமில்லாத வணிகமுறைகளை ஸைய்பட்சு உருவாக்குவதாகவும் சில குற்றச்சாட்டுகள் கிளம்பின. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு இந்நிறுவனங்களின் பங்குகள் விரிவாக விநியோகிக்கப்பட்டுவிட்டன.
அதன்பிறகு அப்படி சில கூட்டமைப்புகள் உருவாகின. அவற்றில் குறிப்பிடத்தக்கது. மிட்சுயி நிறுவனங்களின் நிமோகுஸாய் குழு. 24 மிட்சுயி நிறுவனங்கள் இதில் ஒன்று சேர்ந்திருந்தன. இதன் தலைவர்கள் ஒன்று சேர்ந்து இவர்கள் நிறுவனங்களுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பைப் பற்றி தொடர்ந்து கலந்து பேசினார்கள்.
இவர்களுக்கும் அரசாங்கம் போதிய முக்கியத்துவம் தந்தது. தொழிலின் நிகழ்கால சிக்கல் பற்றி மட்டும் கவலைப்படுவதால் வளர்ச்சிகள் நிகழாது. அவற்றின் எதிர் காலம் குறித்தும் அக்கறையோடு பரிசீலித்தால் இத்தகைய அமைப்புகள் கூட்டாக முயன்று வெற்றிப் பாதையில் நடையிடலாம்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)