பங்குதாரர்கள் பலரும் சேர்ந்து நடத்தும் நிறுவனங்களில், அவரவர் ‘பங்கு’ என்பது பணத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஓட்டப் பந்தய வீரரின் உடலுள்ள ஒவ்வோர் உறுப்பும் ஓடுவதற்கு உதவுவதை கவனித்திருப்பீர்கள்.
ஓடுவது கால்களின் வேலை என்று கைகள் சும்மாயிருப்பதில்லை. அவை மடங்கி, முறுக்கோடு காற்றைக் கிழித்து விசையைக் கூட்டுகின்றன. கண்கள் இலக்கு நோக்கிக் குவிகின்றன.
இந்தப் பங்கேற்பு மனோநிலை பங்குதாரர்களுக்கு மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை இருந்தாலும் முழுமையான வளர்ச்சிக்காக ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டியது அவசியம்.
பங்குதாரர்கள் கூட்டம் என்றாலே, “கணக்கு வழக்கு” என்று சொல்வது நம் வழக்கம். கணக்கும் அதன் தொடர்பான வழக்கும் மட்டுமே நிறுவனத்தின் வளர்ச்சியல்ல. பெரும்பாலான நிறுவனங்களில், நிர்வாகப் பங்குதாரரின் பணி மிகவும் பரிதாபமானது. மற்ற பங்குதாரர்கள், ஏதோ தாங்கள் முதலாளிகள் என்றும் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்வாகி என்றும் ஒருவித மனோநிலையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.
எனவே, சிந்தித்து, சரியான முடிவுகளை எடுப்பதைக் காட்டிலும், சண்டையிலும் சச்சரவிலுமே சரிபாதி நேரம் செலவாகிவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம், பங்குதாரர் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், திட்டமிடுதல், கட்டுப்படுத்துதல் ஆகியவை சரியாக நிகழாததுதான்.
ஒரு நிறுவனத்தை உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் பாதிக்கக்கூடிய அம்சங்கள் பற்றி முக்கியமான தகவல்கள் பங்குதாரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
வெளியிலிருந்து பாதிக்கக்கூடிய அம்சங்கள் என்று எடுத்துக்கொண்டால், விலை மாற்றங்கள், வட்டி விகித மாற்றங்கள், சட்ட ரீதியான மாற்றங்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.
இவற்றைப் பங்குதாரர்கள் சரியாக கவனித்து, தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
உள்நிலை மாற்றங்கள் என்று எடுத்துக்கொள்வீர்களென்றால், பணியாளர் மனநிலை, உற்பத்தி அளவில் ஏற்ற இறக்கம், நிறுவனத்தின் நிதிநிலை, புதிய வணிக வாய்ப்புகள் என்று பல அம்சங்கள் இருக்கின்றன.
இவற்றை மேம்படுத்துவற்கு அவரவரும் அவரவரால் ஆன உதவிகளைச் செய்யும்போது அது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகிறது.
சில பங்குதாரர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை சில பணியிடங்களுக்கு நியமிக்க முயல்வார்கள்.
அவரை நியமிக்க விரும்பும் துறை, இன்னொரு பங்குதாரரின் நிர்வாகத்தில் இருக்கும். தான் பரிந்துரை செய்யும் நபருக்கு அந்தப் பணிக்குரிய தகுதி இருக்கிறதா என்றுகூடக் கவலைப்படாமல் அவரை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும்படி மறைமுகமாகவோ நேரடியாகவோ நிர்ப்பந்திப்பார்.
வேலைக்கு சேர்த்துப் பயிற்சி தரட்டுமே என்று நினைப்பாரே தவிர பயிற்சி பெற்ற ஊழியர்கள்தான் தேவை என்கிற அடிப்படையை மறந்திருப்பார்.
இவை, நிர்வாகப் பங்குதாரர் மனதில் ஒரு சலிப்பை ஏற்படுத்தும். வேலை செய்வதில் அடிப்படை உற்சாகமே இல்லாமல் முணுமுணுக்கத் தொடங்குவார்.
சில நிறுவனங்களில், பங்குதாரர் கூட்டத்தில் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்வார்கள். வெளியே வந்ததும் மறந்துவிட்டு, நிறுவன வளர்ச்சியையே மையமாக்கிக்கொண்டு அதை நோக்கி செயல்படத் தொடங்குவார்கள்.
இத்தகைய ஒத்திசைவும் புரிதலும் பங்குதாரர்களுக்கு மிகவும் முக்கியம்.
பங்குதாரர் கூட்டத்தில் வகுக்கக்கூடிய பொது இலக்குகள்
1. தொழிலின் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டு விளங்குவது.
2. மிகச்சிறந்த செயல்திறன் கொண்டவர்களையே வேலைக்கு எடுப்பது.
3. ஒவ்வொரு நிதியாண்டிலும் 20% கூடுதல் ஆதாயம் ஈட்டுவது.
4. மொத்த முதலீட்டில் 20% ஆதாயங்கள் வரிக்கு முந்தைய தொகையாக எட்டுவது.
5. வரிக்குப் பிந்தைய லாபத்தில் 25% மீண்டும் தொழிலில் முதலீடு செய்வது.
6. முக்கிய முடிவுகள் எடுக்கையில் அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் திரட்டுவது.
இந்தக் கண்ணோட்டமும், புரிதலும் இருந்தால் பங்குதாரர்கள் கைகோர்த்து வெற்றியை எட்ட இயலும்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)