தொழிலுலகத்தின் எல்லா அம்சங்களிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிற நேரமிது. உலகமயமாக்கல் காரணமாய் சர்வதேசப் போட்டிகள், நுகர்வோர்களின் நுட்பமான தேவைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கங்கள் என்று விதவிதமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.
மாற்றங்கள் நிகழும் சூழ்நிலையைக் கையாள்வதில் யார் ஜெயிக்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்று கேட்டால் ஒரே வரியில் பதில் சொல்லிவிடலாம். பக்குவமான நிர்வாகம் ஜெயிக்கிறது. பதற்றமான நிர்வாகம் தோற்கிறது.
நம் கையை மீறி வெளி சக்திகள் சில மாற்றங்களை ஏற்படுத்தும்போது பதறாமல் இருக்க முடியுமா? இது எல்லோருக்கும் எழுகிற கேள்வி. மாற்றங்களின்போது மலையளவு நம்பிக்கை இருக்க வேண்டும். சரி, இந்த நம்பிக்கை எப்படி ஏற்படும்?
உங்கள் தகுதிகளால் ஏற்படும். அடுத்து நிகழக்கூடியதை கணிக்கிற திறமையால் ஏற்படும்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாற்றங்களின் விளைவை கணித்து, அதன் மூலமாக ஏற்படுத்துக்கொள்ள வேண்டிய உள் நிர்வாக மாற்றங்களை நாம் முன்கூட்டியே செய்துவிடுவது அவசியம்.
ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, இதுபற்றி அழகாகச் சொல்கிறார். மாற்றம் என்பது உங்கள் மேல் நிர்ப்பந்தமாகும் முன்னே மாறிவிடுங்கள் என்று.
இதற்கு, முன்கூட்டியே கணிக்கிற ஆற்றல் வேண்டும். இரண்டாவதாக, மாற்றங்கள் ஏற்படும் வேளையில் உங்கள் நிறுவனத்தின் இலட்சியம், செயல்பாட்டு முறை ஆகியவை மாறும். இந்த மாற்றங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ஏற்படும் வளர்ச்சிகளையும், சின்னச்சின்ன வெற்றிகளையும் ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் ஏற்படும் வெற்றி சிறிதோ, பெரிதோ, அதில் இரண்டு அம்சங்கள் பொதுவாக இருக்கும். அந்தப் பணியை முன்னெடுத்துச் சென்ற ஒரு தனிமனிதரின் பங்கு, அதில் பங்கேற்ற சூழ்நிலையின் பங்கு.
இவர்களுக்குப் பாராட்டு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றைத் தருவது பெரிதல்ல. அந்தக் குறிப்பிட்ட வெற்றியில் பங்குபெறாத பணியாளர்களும் சேர்ந்து அந்த வெற்றியைக் கொண்டாடும் நிலையை நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
வால்மார்ட் கடைகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் நிறுவனர் சாம் வால்டனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒரு வெற்றி ஏற்பட்டுவிட்டதென்றால் அதனை, தன் 350 கடைகளுக்கும் நேரில் சென்று கொண்டாடுவார்.
ஒவ்வொரு மாதமும், இந்த மாதத்தின் சிறந்த வாடிக்கையாளர், இந்த மாதத்தின் சிறந்த விற்பனையாளர் போன்ற விருதுகளை வழங்குவார்.
ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியில் நிர்வாகம் ஏற்படுத்தும் பெருமித உணர்வு அவர்களுக்கு ஊக்கம் தரும். அது மட்டுமா? தங்கள் நிறுவனத்தின் நிலை பற்றிய நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும்.
ஒரு நிர்வாகம் ஏற்படுத்தும் உள்நிலை வலிமையைப் பொறுத்தே மாற்றங்களை எதிர்கொள்கிற சக்தி வளரும்.
மாற்றங்கள் ஏற்படும் சூழலில் நிர்வாகிகள், சில சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையை ஊக்கவிக்க வேண்டும். சவால்களை சந்திக்கக்கூடிய சூழல் இல்லையென்றால் அங்கே வளர்ச்சிக்கு வாய்ப்பிராது. நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கிப் போகிற மனநிலையால் உயர்வுக்கு வழியில்லை.
அசட்டுத்தனமான முடிவுகளை ஊக்கவிக்க வேண்டியதில்லை. ஆனால், முக்கிய விஷயங்களில் முன்னேற்பாட்டோடு சில சவால்களை சந்திப்பதில் தவறில்லை.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)