நிர்வாக அணுகுமுறைகளில் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிற காலம் இது. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கணக்கிலும் பணிபுரிபவர்கள் மத்தியில் நிறுவனம் பற்றிய ஒருமித்த அடிப்படை அபிப்பிராயம் ஏற்படுத்துவதற்கென்று சில உத்திகள், பெரிய நிறுவனங்களில் பின்பற்றப்படுகின்றன.
இதில் முக்கியமானது என்னவென்றால், அதே உத்திகள், சிறிய நிறுவனங்களுக்கும் ஏற்புடையவை என்பதுதான்.
உங்கள் நிறுவனத்தில் 20 பேர் பணிபுரிந்தாலும்கூட, 2000 பேர் பணிபுரியும் நிறுவனங்களின் சில பொது உத்திகளை நீங்கள் பின்பற்ற முடியும்.
இருபத்தோராம் நூற்றாண்டின் நிர்வாகவியல் புரட்சி இதனை சாத்தியம் ஆக்கியிருக்கிறது.
பணியாளர்கள் மத்தியில் நீங்கள் ஏற்படுத்தும் ஒருமித்த அடிப்படை அபிப்பிராயம், உங்கள் நிறுவனத்தின் அத்தனை அம்சங்களிலும் என்னவிதமான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற தெளிவை ஏற்படுத்தும்.
எனவே, நிறுவனத்தின் உள்நிலை தகவல் பரிமாற்றத்தில் சில புதுமைகளைக் கொண்டு வரவேண்டும்.
முதலாவதாக, உங்கள் நிறுவனத்தின் குணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். அதாவது, நிறுவனத்தில் பணியாளர் ஒற்றுமைக்கு முதலிடம் தரப்படுகிறதா? வாடிக்கையாளர் சேவைக்கு முதலிடம் தரப்படுகிறதா? தரத்தின் சிறப்புக்கு முதலிடம் தரப்படுகிறதா? ஆதாயத்தின் அளவுக்கு முதலிடம் தரப்படுகிறதா என்பதை முடிவு செய்யுங்கள்.
ஒரு நிறுவனத்தில் இந்த அம்சங்கள் அனைத்துமே முக்கியம்தான். ஆனால், எதற்கு முதலிடம் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுங்கள்.
உதாரணமாக, பணியாளர் ஒற்றுமைக்கு முதலிடம் என்றால், அந்தக் கோட்பாடு மூன்றுநிலைகளில் வலிமையாக்கப்பட வேண்டும்.
உணர்வு நிலை
தங்களுக்குள் ஒற்றுமை அவசியம் என்பதைப் பணியாளர்கள் உணர்வுரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரே வரிசையில் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள், உங்கள் நிறுவனத்தின் உணர்வுச் சின்னமாக இருக்கலாம். அந்தப் படம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், சட்டைகள் விநியோகிக்கப்படலாம்.
அறிவு நிலை
ஒற்றுமைமிக்க உணர்வு அவசியமென்றாலும், அது வெறுமனே உணர்வோடு நின்றுவிடாமல் அறிவின் தளத்திலும் ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் செயல்முறைப் பயிற்சிகள், அன்றாடப் பணிகளில் வரக்கூடிய கருத்துவேறுபாடுகளை எதிர்கொள்கிற முறை, பேசித் தீர்க்கும் முறை, அனைத்தையும் பற்றிய தெளிவான வரையறைகள் தரப்படவேண்டும்.
செயல்நிலை
ஓர் உறுப்பினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒற்றுமை வளையத்தில் பங்கேற்றால் மட்டுமே செயல்படமுடியும் என்பது போன்ற நிர்வாக நிலைப்பாடுகள் ஏற்பட வேண்டும்.
முதல்படி நிலையிலிருந்து அடுத்த துறைக்கு ஓர் அறிக்கையோ, தயாரிப்போ அனுப்பப்பட வேண்டிய முறை, அதற்கான ஒழுங்குகள், சரிபார்ப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வர வேண்டியது அவசியம்.
இப்படி அலுவலகத்தின் உள்நிலையில் ஒருமித்த கருத்தோட்டம் உருவான பிறகு, நிறுவனத்தை வெளியில் உள்ளவர்கள் என்ன விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற வரையறையும் வகுக்கப்பட வேண்டும்.
“முதலிடம்” என்கிற முத்திரை
நிறைய நிறுவனங்கள், தங்கள் துறையில் தங்களைத் தலைவர்களாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றன. தரம், தயாரிப்பு, அளவு, விற்பனை அளவு, விற்பனைக்குப் பிறகான சேவை, விநியோகத் தொடர்புகள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கணக்கிட்டு, அந்த இடத்தை அவர்கள் தொட்டிருக்கிறார்கள். முதலிடம் என்பதை எட்டியபிறகு, அதனைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் மேன்மேலும் முன்னேற்றங்கள் காட்டுவதற்கும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலிடம் என்கிற முத்திரை அவர்களின் முகவரி. அதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதும், செயல்வழியாக நிரூபித்துக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.
விலைகுறைவு என்கிற கருத்துருவாக்கம்
போட்டித் தயாரிப்பைக் காட்டிலும் குறைந்த விலை என்கிற பிம்பம் ஏற்படுமானால், அதன் விளைவாக தங்கள் இலக்கு யார் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறார்கள். அதன்படி, குறைவான வருமானம் உள்ளவர்களைச் சென்று தங்கள் பொருள் சேர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள்.
தங்கள் பொருளின் விலை குறைவு என்றாலும் தரம் சிறந்ததுதான் என்பதை வலியுறுத்தவும் வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ‘விலை’ என்கிற விஷயமே இவர் பொருளின் அடிப்படை வசீகரம் ஆகிறது.
எங்கும் எங்கள் தயாரிப்பு
விநியோகத் தொடர்புகள் வழியாக எல்லா இடங்களிலும் தயாரிப்புகள் கிடைக்குமாறு செய்து, விரிவான விளம்பரங்களும் செய்து அதன்வழியே எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்வது ஓர் உத்தி. இதனால், தயாரிப்பு அனைவரின் மனதிலும் பதிவதோடு தேவை ஏற்படும்போது முதலில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.
தரத்தின் தனித்தன்மை
விலை – விநியோகம் போன்றவற்றை விடவும் தரத்திற்கே அதிக முக்கியத்துவம் என்கிற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் தங்கள் இலக்குக்கான அளவை துல்லியமாக வகுத்துக் கொள்கிறார்கள்.
தரத்திற்கேற்ற விலை நிர்ணயித்து அதற்குரிய வாடிக்கையாளர்களை மட்டுமே இலக்காகக் கொள்ளும் அணுகுமுறை இத்தகைய நிறுவனங்களுக்கு உரியது.
மாற்றங்களும், புதிய போட்டிகளும், சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கும் பந்தயத்தில், தங்கள் நிறுவனத்தின் நிலைப்பாட்டை ஒருங்கிணைத்து, உறுதி செய்து கொள்கிறவர்களே வெற்றிப்பாதையில் நடையிடுகிறார்கள்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)