ஒரு நிறுவனத்தில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதல்ல, வளர்ச்சியின் அளவுகோல். எவ்வளவு பேர் திறமையாக வேலை பார்க்கிறார்கள் என்பதே சரியான அளவுகோல். நிறுவனத்துக்குள் இருக்கும் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள், மனிதவள மேம்பாட்டுக்கான அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பணிபுரிகிறவர்கள் திறமை முழுமையாக வெளிப்படுகிறது.
இந்தியப் பணிச்சூழலில், நிறைய பணியாளர்கள், தங்கள் செயல்திறன் வெளிப்படாமலேயே பணிபுரிகிறார்கள். இது மிகவும் விசித்திரமான விஷயம். ஏனென்றால், வரையறுக்கப்பட்ட கடமைகளைத் தாண்டி அவர்கள் வெளியே வருவதில்லை. பெரும்பாலும் அத்தகைய வாய்ப்புகளைப் பல நிறுவனங்கள் தருவதில்லை.
வெற்றி பெற்ற சர்வதேச நிறுவனங்கள், என்னவிதமான பணிச்சூழலை ஏற்படுத்தி பணியாளர்களின் முழுத் திறமையையும் வெளிக்கொணர்ந்தனர் என்று பார்ப்பது அவசியம்.
உதாரணமாக, கம்ப்யூட்டர் என்றதுமே நம் நினைவுக்கு வருகிற பெயர் பிறி. 1968இல் மொத்தம் 3000 இடங்களில்தான் ஹெச்.பி.கம்ப்யூட்டர்கள் இருந்தன. பிறகு அந்த நிறுவனம் லாப வளர்ச்சி கண்டது.
அந்த நிறுவனத்தில், மனிதவள ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தினமும் காலை அலுவலகம் தொடங்கிக் கொஞ்ச நேரத்தில் காலை காபி பிரேக் என்ற பெயரில் 1400 ஊழியர்கள் ஒன்றுகூடுவார்கள். அங்கே அன்றாட நடைமுறைகள் தொடங்கி, புதிய வளர்ச்சிகள், சேவையில் மேற்கொள்ளக்கூடிய விதம்விதமான அணுகுமுறைகள் பற்றியெல்லாம் விரிவாக விளக்கப்படும். எந்த ஒரு தயாரிப்பிலும் சேவையிலும் தவறு நடப்பது இயற்கை.
பொதுவாக, சில நிர்வாகங்கள், வெற்றிகளைத் தன் வெற்றியாக மட்டுமே கருதும். தோல்விகளை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தலையில் போடும். ஹெச்.பி. இதற்கு நேரெதிரான அணுகுமுறையைக் கையாண்டது.
தவறுகளையும் அதன் விளைவுகளையும் தனி மனிதர்கள் மேல் சுமத்தாமல் அனைவரும் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டனர். அதே நேரம், வெற்றிகள் வரும்போது, அந்த வெற்றிகளுக்கு யாரெல்லாம் உரியவர்களோ, அவர்களை அடையாளம் காட்டி அதன் பலன்களை அவர்களுக்கே வழங்கினர்.
இந்த அணுகுமுறை காரணமாக, சிறுசிறு தவறுகள் ஏற்பட நேர்ந்தாலும் பெரிய வெற்றிகளை எட்ட முடிந்தது. ஒருங்கிணைந்த முயற்சியின் பலனும் விளைந்தது.
அதேபோல், ஐபிஎம், கேடர்பிலர் போன்ற நிறுவனங்களிடம் ஒரு பழக்கம் எந்தத் தயாரிப்பையும் முதல்முதலாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்க மாட்டார்கள். வாஷிங் மெஷின் என்று எடுத்துக்கொண்டால், அதை முதலில் ஒரு நிறுவனம் அறிமுகம் செய்யும்.
அந்தத் தயாரிப்பில் சில குறைகள் இருக்கும். புகார்களை எதிர்கொள்ள வேண்டிவரும். முதலில் அறிமுகம் செய்த நிறுவனங்கள், அந்தப் புகார்களைப் பெற்று, தயாரிப்பில் உள்ள குறைகள் ஒவ்வொன்றாக சீர் செய்து ஒரு வடிவத்திற்குக் கொண்டுவரும்.
அதன்பிறகு, ஐபிஎம் புதிய அம்சங்களைச் சேர்த்து, குறைகள் பெருமளவு களையப்பட்டதாக புத்தம்புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்யும். கேடர்பிலர் நிறுவனத்துக்கும் இந்த இயல்பு உண்டு.
இதனால், உற்பத்தி – சேவை என்று எல்லா அம்சங்களிலும் சுலபமாக சாதிக்க முடிகிறது. போட்டியாளர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிற உத்தி, இந்த நிறுவனங்களின் தனித்தன்மைகள் எனலாம்.
பணியாளர் மன நிறைவு, தரத்தில் முழு நிறைவு போன்ற இலக்குகளை வைத்துப் பணிபுரிவது அவசியம். ஏனெனில், தொழிலில் லாபம் என்பதே திறமையான நிர்வாகத்தின் பக்க விளைவு என்றார் ஓர் அறிஞர். உண்மைதானே!
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)