உங்கள் நிறுவனத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்
மார்ச் மாதத்தில் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் கூட்டத் தொடர்களில் நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமுமே வருகிற நிதியாண்டுக்கான தம் பட்ஜெட்டை உருவாக்கி முடித்திருக்கும் நேரமிது.
அரசாங்கத்தின் பட்ஜெட் ஆகட்டும், நிறுவனங்களின் அடிப்படை பட்ஜெட் ஆகட்டும்., அவை கீழ்க்கண்ட அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன.
1) போதிய நிதி ஆதாரங்கள் உள்ளனவா?
2) நிதி ஒதுக்கீடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா?
3) நடப்பிலுள்ள நிதி ஆதாரங்களை இன்னும் சிறப்பாக எப்படிக் கையாள முடியும்?
இந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்து ஒரு நிதியாண்டின் நடவடிக்கைகளை வெற்றிகரமாகத் தீர்மானிக்க முடியும்.
பட்ஜெட்டை அரசாங்கம் போடுகிற போதும் சரி. தனி மனிதர்கள் தங்கள் அளவில் ஒரு பட்ஜெட்டை உருவாக்கும்போதும் சரி. அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது.
எல்லா பட்ஜெட்டுமே ஒரு வகை அனுமானம்தான். உத்தேச மதிப்பீட்டில் உருவாகிற பட்ஜெட்டிற்கும் நடைமுறையில் நடந்தேறும் வரவு செலவினங்களுக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.
அனுமானித்த பட்ஜெட்டுக்கும் நடைமுறைக்கு வந்த பட்ஜெட்டுக்கும் இருக்கிற வேறுபாடு, சாதகமாகவும் இருக்கலாம். பாதகமாகவும் இருக்கலாம். பாதகமாக இருக்கிற பட்சத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் சில ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
எனவே, நிதி நிர்வாகத்தின் போக்கை சீர் செய்யவோ, உரிய திருத்தங்களைக் கொண்டு வரவோ, நிதியாண்டின் இறுதிவரை காத்திருக்க வேண்டியதில்லை. உதாரணத்திற்கு, இரண்டு ரூபாய் வருமானம் வருகிறபோது, அதற்கு ஆகிற செலவு ஒரு ரூபாய் என்று அனுமானம் செய்திருக்கிறீர்கள். மூன்று மாதங்கள் கழித்து, 1,42,500 ரூபாய் வருமானமும், 95,000 ரூபாய் செலவினமும் நிகழ்ந்திருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.
அப்படியானால், 1:2 என்கிற உங்கள் அனுமானத்தின் எல்லைகளைக் கடந்து 1:33:2 என்பதாக செலவினம் வளர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில் நிதி ஆண்டு முடியும் வரை காத்திராமல் உடனடியாக உரிய மாற்றங்களைச் செய்துகொள்வதே புத்திசாலித்தனம்.
நிதி விகிதாச்சாரங்களை ஒரு நிறுவனம் மதிப்பிடத் தொடங்குமென்றால், அதற்கு கீழ்க்கண்ட கேள்விகளை அவ்வப்போது கேட்டுக்கொள்ள வேண்டும்.
1) குறுகிய கால இலக்குகளை எட்டும் விதமாக நிதி வரவு உள்ளதா?
2) நிறுவனம் தன் சொத்துகளைத் திறம்பட நிர்வகிக்கிறதா?
3) நிறுவனத்திற்கு இருக்கும் கடன் விகிதம் எவ்வளவு?
4) சொத்து நிர்வகித்தல், கடன் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு ஈடுகொடுப்பதால் நிறுவனத்தின் ஆதாயம் பாதிக்கப்படுகிறதா?
5) நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளின் அடிப்படையில் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கணிக்கப்பட்டுள்ளனவா?
செம்மையான நிதி நிர்வாகம் செய்வதை உறுதி செய்ய வேண்டுமென்றால் கீழ்க்கண்ட அணுகுமுறைகள் அவசியம்.
நிதி ஓட்டம் நன்றாக இருக்க வேண்டும்
ஒரு நிதிநிறுவனத்தில் நிதி நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். வாடிக்கையாளரிடமிருந்து வந்த பணம் நேராக வங்கிக்குச் செல்வதும், வங்கியில், குறுகிய கால வைப்பு நிதிகளாக மாறி வட்டி பெற்றுத் தருவதும் முக்கியம். இந்த எலக்ட்ரானிக் யுகத்தில், பணம் கைக்கு வராமல் நேராக வங்கிக்கணக்கு மாறும்போது, நேரமும் சிரமமும் மிச்சமாகிறது.
பலதரப்பட்ட வங்கிகளின் சேவை முறைகள்
நல்ல சேவையும் வட்டியும் தரக்கூடிய வங்கிகளை நோக்கி நமது அணுகுமுறையும் தேர்ந்தெடுக்கும் திறனும் குவிக்கப்பட்டால் அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
கடன் பெறுவதற்கான தளம் விரிவு செய்தல்
நிதி நிர்வாகம் திறம்பட செய்யப்படும்போது கடன் பெறுவதற்கான தேவை குறையும் என்றாலும், கடன் பெறுவதற்கான ஆதாயங்களையும் தொடர்புகளையும் பெருக்கிக் கொள்வது அவசியம்.
செலவினங்களைக் குறைக்க விரயங்களைக் குறையுங்கள்
செலவினங்களை நேரடியாகக் குறைக்க முற்படும்போது, அது தனிமனிதர்களின் தலையை உருட்டுவது என்றே பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், அளவுக்கு அதிகமான ஆட்குறைப்பு நடவடிக்கை அவசியமில்லை. விரயங்களைக் குறைப்பதுன் மூலமாகவே செலவினங்களைக் குறைக்க முடியும்.
இதற்கோர் உதாரணம், 1990இல், ஸீலாண்ட் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கை. இங்கே சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, 8000 பணியாளர்களில் 93 பேர் மட்டுமே வேலையிலிருந்து விலக்கப்பட்டனர். ஆனால், விரயமாகும் நேரங்களும், தேவையில்லாத செயல்பாடுகளும் கண்டறியப்பட்டன, தடுக்கப்பட்டன. விற்பனையாளர்கள் நீளமான அறிக்கைகள் எழுதுவது குறைக்கப்பட்டது. பணியாளர்கள், தனி மனித நிலையிலும், குழு அளவிலும், விரயம், தாமதம், சமச்சீரில்லாத செயல்பாடு ஆகியவற்றை மெல்ல மெல்ல நீக்கிவிட்டனர். நூற்றுக்கணக்கில் செய்யப்பட்ட சின்னச் சின்ன திருத்தங்கள், இலட்சக்கணக்கான டாலர்களை மிச்சம் செய்ய வழிவகுத்தது.
எனவே, தொலைநோக்குடன் திட்டமிட்டு, உரிய மாற்றங்கள் செய்யும் வாய்ப்பு வசதிகளோடும் உங்கள் நிதியாண்டுத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துங்கள். அதன் வழியாக மிகச் சிறந்த மாற்றங்களைக் கண்கூடாகக் காணமுடியும்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)