ஒரு நிறுவனம் எத்தனை பேரை பணிக்கு வைத்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் இரண்டு விதங்களில்தான் அமையும். ஒன்று, அதிகாரங்களின் வைப்பு முறை. இன்னொன்று, பொறுப்புகளின் பகிர்வு முறை.
ஒரு தனி மனிதர், இன்னொருவரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதுமே ஒரு நிறுவனம் உருவாகி விடுகிறது. புதிதாக வந்த ஒருவர், முதலாவதாக உள்ளவரின் கீழ் பணியாளராகச் சேர்ந்தால் அங்கே அதிகாரங்களின் வைப்புமுறை உருவாகிறது. அதற்குப் பதிலாக, பஙகுதாராக, சமநிலையில் இருப்பாரென்றால் அங்கே பொறுப்புகளின் பகிர்வு முறை உருவாகிறது.
நிறுவனம், வளர வளர, இந்த இரண்டு அம்சங்களுக்குமே அதில் இடமிருக்கும். ஆனால் ஏதேனும் ஒன்றுதான் ஒரு நிறுவனத்தில் அழுத்தம் பெற்றுத் திகழும்.
நிர்வாகவியல் குறித்து எழுதத் தொடங்கிய நிபுணர்களின் தொடக்க காலக் கோட்டுபாடுகளை ஆராய்ந்து பார்த்தால், அவை, அதிகாரங்களின் வைப்பு முறைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.
ஹென்றி ஃபயோல், பிரட்ரிக், வி.டெய்லர் போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில், ஒரு நிறுவனத்தின் திறமையான நிர்வாகத்திற்கென்று நான்கு மையக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன.
நன்கு வரையறுக்கப்பட்ட அதிகார வைப்பு முறை
மேல் நிலையிலிருந்து கீழ்நிலை வரை யார் மீது யார் அதிகாரம் செலுத்தத்தக்கவர்கள், யாருக்கு யார் கீழ்ப்படிய வேண்டும் என்பது போன்ற வரையறைகளை இது குறிக்கும்.
அதிகாரத்தில் ஒழுங்கு
பொதுவாகவே, ஊழியர் ஒருவர், இரண்டு மூன்று மேலதிகாரிகளுக்குக் கீழ்ப் பணியாற்றுகிறபோது, யார் சொல்வதை யார் கேட்பது என்பதுபோன்ற குழப்பங்கள் ஏற்படும். இதன் விளைவாக, நிர்வாகவியல் போக்கில் தடுமாற்றங்கள் காணப்படும். எனவே, அதிகாரங்களை பிரயோகம் செய்வதில் ஒழுங்கமைப்பு மிகவும் முக்கியம்.
அதிகாரத்துக்கேற்ற பொறுப்புணர்வு
ஒரு மனிதர் கட்டளைகள் பிறப்பிப்பது அவருக்கு இருக்கிற அதிகாரத்தின் அடையாளம். அதே மனிதர் தன் கடமைகளை நிறைவேற்றுவது, அவருக்கிருக்கும் பொறுப்புணர்வின் அடையாளம். ஒருவர் பொறுப்புகளைத் தருபவராக மட்டுமின்றி, தன்னுடைய பொறுப்புகளைத் தானே நிறைவேற்றுபவராகவும் விளங்குகிறபோதுதான், கட்டளை பிறப்பிக்கிறவர்களும் கடமையாற்ற வேண்டியவர்களே என்கிற தெளிவு ஏற்படும்.
பிரிக்கப்படுபவை அதிகாரங்களே! பொறுப்புகளல்ல:
ஒரு நிர்வாகத்தின் திறமையான செயல்பாட்டுக்கு இது மிகவும் தேவையான அம்சம். குறிப்பிட்ட அதிகாரியின் கீழ் ஒரு பிரிவு செயலாற்றுகிறது. அங்கே பணிபுரிபவர்களுக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்து தருகிற அதிகாரம், அந்த அதிகாரிக்கும் உண்டு.
ஆனால், அந்தப் பணி சரிவர நிறைவேறாத பட்சத்தில் அந்த அதிகாரி உட்பட அந்தப் பிரிவினர் முழுவதும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தக் கோட்பாட்டின்படி பார்க்கும்போது ஜனநாயகப் போக்கைவிட, சர்வாதிகாரப் போக்குக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவது தெரியும்.
ஜெர்மனியைச் சேர்ந்த சமூகவியல் அறிஞர் மேக்ஸ் வெபர் வரையறுத்த அதிகார முறைக்கு அவரே வைத்த பெயர்தான் தீuக்ஷீமீணீuநீக்ஷீணீநீஹ் என்பது. இவர் வலியுறுத்துகிற முறையை நன்கு கவனித்தால், அதில் சர்வாதிகாரப் போக்கும் ஜனநாயகப் போக்கும் சமநிலையில் இருப்பது தெரிய வரும்.
அவர், நிர்வாக முறையின் அடிப்படைகளாக சில அம்சங்களை அறிவித்தார்.
பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல்:
இது ஜனநாயக அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவரவர் செயல்திறனுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப, தங்களுக்குள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதையே இது குறிக்கிறது.
அதிகார வைப்பு முறை:
எந்த எந்தப் பிரிவுக்கு யார் யார் தலைமை என்பது உள்ளிட்ட அதிகாரங்களைத் தெளிவாக வரையறுப்பதே அதிகார வைப்பு முறை எனப்படும்.
சட்ட திட்டங்களை உருவாக்குதல்:
ஒரு நிறுவனத்தை வழிநடத்திச் செல்லக் கூடியவையாக அந்த நிறுவனத்தின் கோட்டுபாடுகளே அமைய வேண்டியது அவசியம். அதற்கு, நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் வரையறுக்கப்பட வேண்டும்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)