ஒரு நிறுவனத்தின் வெற்றி, கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் பின்னடைவுக்கு, இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளும் கருத்து வேற்றுமைகளுமே முக்கியக் காரணம்.
மனமுதிர்ச்சியும், ஒத்திசைவும் உள்ள நல்ல குழுக்கள் இயங்கும் விதம் குறித்து, சர்வதேச அளவிலான சில பொது கணிப்புகளை நிர்வாகவியல் அறிஞர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
நம்பிக்கையூட்டும் அத்தகைய குழுக்களுக்கென்று உள்ள குணங்கள் என்ன தெரியுமா?
1. ஒவ்வோர் உறுப்பினரும் தங்கள் சக உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், சிறப்பம்சங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.
2. தனிப்பட்ட பேதங்களை, நல்லதென்றோ தீயதென்றோ முத்திரை குத்தாமல் ஏற்றுக் கொள்கின்றனர்.
3. குழுவின் ஆளுமை மற்றும் சக உறுப்பினர்கள் மத்தியிலான உறவுமுறைகளின் போக்கு ஆகியவை குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது.
4. குழு விவாதங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. சிறுபான்மைக் கருத்துக்கு ஊக்கம் தரப்படுகிறது. முடிவுகள் திணிக்கப்படுவதில்லை.
5. முக்கிய அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள், தீர்வு நோக்கில் அணுகப்பட்டு, ஆராயப்படுகின்றன. கருத்து வேறுபாடுகள் உணர்வுரீதியான மோதல்களாக உருமாற்றம் பெறாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றன.
6. குழுவின் செயல்பாடுகள், அதில் தங்கள் பங்கு பற்றி குழு உறுப்பினர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
ஒரு குழுவுக்குள் இத்தகைய புரிதலும் ஒருங்கிணைப்பும் ஏற்படுவதற்கு சில அடிப்படை அணுகுமுறைகளும் செயல்திட்டங்களும் உள்ளன.
முதலாவதாக, ஒரு நிறுவனம் நன்கு செயல்பட வேண்டுமென்றால், அங்கே நிச்சயமின்மை நிலவக்கூடாது. தலைமை நிலையில் உள்ளவர்கள், தாங்கள் ஏற்றிருப்பது ஒரு பொறுப்புதானே தவிர பதவி அல்ல என்பதை மிக நிச்சயமாக நம்புகிறார்கள்.
இரண்டாவதாக, வளர்ச்சிப் பாதையில் வரும் குறுக்கீடுகளையும் சவால்களையும் ஏற்று அந்தக் குழு எதிர்கொள்கிறது. அவற்றைப் புறக்கணிப்பதில்லை. தப்பித்தல் மனோபாவத்தில் தாண்டிச் செல்வதுமில்லை.
நிறுவனத்தில் அனைத்துப் படிநிலைகளிலேயும் ஒற்றுமை உணர்வும், ஒருவருக்கொருவர் விட்டுத்தராத மனோபாவமும் அதே நேரம் நிறுவனத்தின் நலனுக்கு முதலிடம் தரகிற அணுகுமுறையும் தென்படுகிறது.
தங்கள் பணிகளை, அங்கத்தினர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்கிறார்களா என்பது போதிய இடைவெளிகளில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது. அடிக்கடி விடுப்பெடுத்தல், வேலையில் சோம்பல் காட்டுதல் போன்ற குறைகள் காணப்படுமானால், அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்படுகின்றன.
எந்த ஒரு குழுவிலுமே ஆளுமையும், பிறர்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்துடிப்பும் உள்ள ஒருவர் முக்கிய மாற்றங்களை நிகழ்த்துவார். இவர் தலைமைப் பண்புகளோடு திகழ்வார். அத்தகைய உறுப்பினர்களுக்கு இந்தக் குழு போதிய முக்கியத்துவம் வழங்குகிறது.
தொழில் சார்பாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் குழு அடிப்படையிலும் உறுப்பினர்கள் மத்தியில் நல்ல உறவும், நட்பும், புரிதலும் நிலவுகின்றன. இத்தகைய சூழல் உருவாகும் குழுக்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகுந்திருந்தன.
ஆனால், ஒரு குழுவின் வளர்ச்சிப்பாதையில் ஆரம்பகாலத் தடுமாற்றங்கள் தீர்க்க முடியாதவை என்பதை இத்தகைய வெற்றிகரமான குழுக்கள் நன்கு அறிந்திருக்கின்றன. ஒரு குழந்தை, மூத்தவராக ஆகும்முன் பதின்பருவத்தைத் தாண்டி வருவதை எப்படித் தவிர்க்க முடியாதோ அதுபோல ஆரம்பகால உராய்வுகளும் கருத்துவேறுபாடுகளும் எல்லாக் குழுக்களிலும் இயல்பு.
இது நிரந்தரப் பகையாகவோ, நிறுவனத்திற்குள் சிறுகுழுக்கள் உருவாகும் விதமாகவோ வளராமல் அணைபோடும் பொறுப்பு, குழுவை முன்னெடுத்துச் செல்லும் தலைவர்களுக்கு உண்டு.
தெளிவான தகவல் பரிமாற்றம், இதற்கான அடிப்படைத் தேவை. ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில், செய்தி சுமப்பவர் ஒருவர் இருந்தார். நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பிற அலுவலர்களுக்கு செய்திக் குறிப்புகளைச் சுமந்து வருவதே அவர் வேலை. ஓரிரு அலுவலர்கள், “நிச்சயமாகத் தெரியுமா? எனக்கு ஏதும் தகவல் இல்லையா?” என்று ஓயாமல் நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.
செய்தி சுமப்பவருக்கு எரிச்சல் வந்தது. தன்னை இவர்கள் கிண்டல் செய்வதாகத் தவறாக நினைத்தார். எனவே, நிஜமாகவே அவர்களுக்கு வருகிற செய்திகளைக் கொடுக்காமல் விட்டுவிட்டார்.
எனவே, கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட பகையாக வளர்ந்துவிடாமல் தடுப்பதற்கு, நல்ல நிறுவனங்கள் அதீதமான அக்கறையைக் காட்டுகின்றன.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)