வெற்றிகரமான நிறுவனங்கள் பலவற்றில், அவற்றின் வெற்றிக்கென்று ஒரு பொதுக்காரணம் உண்டு. “பணியாளர் ஒத்துழைப்பு” என்கிற மந்திர வார்த்தைதான் அது.
பொதுவாகவே நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் நடுவிலான இடைவெளி குறையக் குறையத் தான் ஆக்கபூர்வமான செயல்கள் ஆரம்பமாகும்.
பல்லாயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட நிறுவனத்தில் நிர்வாகிக்கு ஒவ்வொருவரோடும் தனிப்பட்ட உறவு சாத்தியமில்லைதான். ஆனால், மானசீகமாக, தான் தன் பணியாளர்களுக்கு மிக வேண்டியவர் என்கிற உணர்வை ஏற்படுத்த முடியும்.
உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், திருவாளர் சாம் வால்டனிடம் விசாரித்துப் பாருங்கள். யார் அந்த சாம் வால்டன் என்கிறீர்களா? அமெரிக்காவின் புகழ் பெற்ற வால்மார்ட் கடைகளை உருவாக்கியவர் அவர்.
மக்களுடன் உறவாடும் சேவைத்துறையின் சாம் பயிற்சியெடுத்து ஜே.சி. பென்னியில் தான். அங்கே இருப்பது போலவே வால் மார்ட்டிலும், பணியாளர்கள் அசோசியேட்ஸ் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். கீழ்மட்டப்பணியில் இருப்பவர்களும் நன்கு உற்சாகப்படுத்தப்படுவதால், வால்மார்ட் நடைமுறைப்படுத்தியுள்ள பல வெற்றிக்கரமான யோசனைகளை வழங்கியவர்களே அவர்கள்தான்.
ஒருநாள் விடியற்காலை இரண்டுமணி இருக்கும். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சாம் வால்டன். இரவு நேர பேக்கரியில் சில டஜன்கள் டோ நட் வாங்கிக் கொண்டு தன் சரக்குகளைக் கப்பலிலிருந்து இறக்குபவர்கள் பணிபுரியும் இடத்திற்குப் போனார். அவர்களிடம் பேசியபோது வணிக வளர்ச்சிக்குப் புதிய யோசனைகள் கிடைத்தன.
ஒவ்வொரு சனிக்கிழமையும் பணிபுரிபவர்கள் 7.30மணிக்கு சந்திக்கிறார்கள். மனம் விட்டுப் பேசுகிறார்கள். கூட்டத்தின் முடிவில் சாம் வால்டன் எழுந்து நின்று உரத்த குரலில் கேட்கிறார், “நம்பர் 1 இடத்தில் இருப்பது யார்?” பணியாளர்கள் அதனினும் உரத்த குரலில் ஓசை எழுப்புகிறார்கள் “வால்மார்ட்” “வால்மார்ட்”.
வால்டன் ஒருமுறை தனக்குச் சொந்தமான விமானத்தில் மவுண்ட் பிளஸண்ட் என்ற மலைக்குப் போனார். விமானியிடம், சில நூறு மைல்கள் தள்ளிப் போய் தரைதளத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டு அங்கே வந்த வால்மார்ட் சரக்கு வாகனம் ஒன்றில் ஊறிக் கொண்டார். ஓட்டுநருடன் அரட்டையடித்துக் கொண்டே கீழிறங்கினார். தன் நிறுவன உரிமையாளரிடம் சிலமணி நேரங்கள் செலவிட்ட திருப்தி ஓட்டுநருக்கு. அவர்கள் பார்வையில் புதிய விஷயங்களைப் புரிந்துகொண்ட நிறைவு வால்டனுக்கு. ஆட்டோமொபைல், டிரெக்கிம் வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் முன்ணணி அமெரிக்க நிறுவனம் டானா கார்ப்பரேஷன். இதன் தலைவராக 1973ல் பொறுப்பேற்றார் மேக் ஃபெர்ஸன். இவர் கொண்டுவந்த முதல் சீர்திருத்தமே நிறுவனத்தின் கோட்பாடுகளை எளிமைப்படுத்தியது தான்.
-பணியாளர்களுடன் நேருக்குநேர் உரையாடி கலந்து பேசி, உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது.
-தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் ஊழியர்களுக்கு, பயிற்சிக்கான வாய்ப்பை வழங்குவது.
-தாங்கள் பாதுகாப்பான வேலையில் இருக்கிறோம் என்கிற உணர்வை உழியர்கள் மனதில் உண்டாக்குவது.
ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் தனிப்பட்ட செயல்திறன் மேம்படுத்துவதுதான், நிர்வாகம் வளர்ந்து வருவதற்கான ஆதாரம் என்று நம்பினார் மேக் ஃபெர்ஸன்.
உண்மைதான். ஒரு தொழிலைத் தொடர்ந்து பல காலமாகச் செய்து வருபவர்தான் அந்தத் துறையின் நிபுணர் என்கிற நம்பிக்கை நமக்கு ஏற்பட வேண்டும்.
வாடிக்கையாளர்களுடனான நல்லுறவுக்கு முதல் படி, பணியாளர்களுடனான நல்லுறவு, இந்த அடிப்படையை அறிந்து கொண்ட நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்திருக்கின்றன.
அதற்கு இன்னோர் உதாரணம் டெல்டா ஏர்லைன்ஸ். இங்கே கடைசியாக வேலை நிறுத்தம் நடந்தது 1942ல்!! டாம்பீப் என்பவர் நிர்வாகியாக விளங்கிய காலத்தில் “திறந்த கதவு” என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தார். அடிப்படையான, அத்தியாவசியமான பிரச்சனைகளை கடைநிலை ஊழியர்கள் கூட நிர்வாகத்தின் தலைமையுடன் நேரடியாக விவாதிக்கலாம் என்பதுதான் அந்தத் திட்டம்.
டெல்டா ஏர்லைன்ஸில், வெவ்வேறு துறைகளின் துணைத் தலைவர்களும் நிறுவனத்தின் எந்த வேலையையும், எந்தத் துறையையும் எப்போது வேண்டுமானாலும் கையாளுகிற பயிற்சி பெற்றிருந்தார்கள்.
டெல்டா ஏர்லைன்ஸ் நிர்வாகி ஒருவர் இதுபற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டார். “எங்கள் நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் – விமானம் ஓட்டுவதைத் தவிர”.
தங்களை நிர்வாகம் நம்பிகிறது என்கிற உணர்வும், நம் நிறுவனம் நம்பிப் பணிபுரிய ஏற்றது என்கிற உத்திரவாதம் கிடைத்து விட்டால், நிறுவனத்தின் கொடியை உயர்த்திப் பிடிக்க ஊழியர்கள் உற்சாகத்துடன் முன்வருவார்கள்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)