ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்போது போடும் பணம் மட்டுமே முதலீடு ஆகாது. அது ஓர் ஆரம்பம் மட்டும்தான். ஆனால், அன்றாடப் பணிகளில் நீங்கள் செலவிடும் நேரம், உங்களுக்கிருக்கும் நன்மதிப்பு, சமூக அந்தஸ்து இவையெல்லாமே ஒருவகையில் முதலீடுகள் தான். இப்படி பரவலாக பொதுமைப்படுத்தி சொல்வதை விட கண்ணுக்குத் தெரியாத முதலீடுகளை எப்படி வகைப்படுத்துவது?
மூன்று முக்கியமான கண்ணுக்குத் தெரியாத முதலீடுகளை தாமஸ் ஸ்டீபன்ஸ் என்கிற நிர்வாகவியல் அறிஞர் வரையறை செய்கிறார்.
1.மனிதவளம் என்கிற முதலீடு
2.கட்டமைப்பு என்கிற முதலீடு
3.வாடிக்கையாளர்கள் என்கிற முதலீடு
மனிதவளம் என்கிற முதலீடு:
உலகெங்குமே ஒரேவிதமான போக்கு இதில் தென்படுகிறது என்கிறார் ஸ்டீபன்ஸ். அதாவது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் மனிதவளத்தின் ஆற்றலை முழுமையாகக் கண்டறியவில்லை என்பதுதான் அது.
வரையறுக்கப்பட்ட வேலைகளையே ஊழியர்களை திரும்பத்திரும்ப செய்யச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கக்கூடிய – நிர்வாகத்திற்குப் பயன்படக் கூடிய துணை ஆற்றல்களை நாம் தெரிந்து கொள்வதில்லை.
கடந்த 50 ஆண்டுகளில் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு வாடிக்கையாளர்களின் மத்தியில் வளர்ந்திருப்பதைப் போலவே உற்பத்திக்குப் பயன்படுகிற உபரிப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அனுபவத்தின் காரணமாகவும், உலகமெங்கும் இறைந்து கிடக்கிற தகவல்கள் காரணமாகவும் பணியாளர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
எனவே, உபரிப்பொருட்கள் வாங்குவதில் தொடங்கி, செயல்பாடுகள் வரையிலும் கூட பல ஆலோசனைகளைத் தொழிலாளர்கள் தரக்கூடும். அவற்றைப் பரிசீலனை செய்து பொருத்தமானவற்றை பின்பற்றும் விதமாக நிர்வாகம் தயார்நிலையில் இருப்பது அவசியம்.
GTW கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பிராங் வால்கர் ஒரு சுவாரஸ்யமான தகவலை, மனிதவள முதலீடு என்கிற அடிப்படையில் முன் வைக்கிறார். வருங்காலத்தில் நான்கு விதமான வேலை வாய்ப்புகள் தான் ஒரு நிறுவனத்தில் இருக்கும் என்கிறார் அவர்.
அ) தலைமை நிர்வாகம் – இது நிறுவனத்தை உருவாக்கி, வழிநடத்தி அன்றாட செயல்பாடுகளை முடிவு செய்து வளர்ச்சியை முடிக்கிவிடுகிற குழு.
ஆ) தேவைப்படும் வளங்களைத் தருபவர்கள் – இதில் செயல்திறன், நிதி உள்ளிட்ட வளங்களும், பொறியியல், விற்பனை போன்ற துறைகளும் அடங்கும்.
இ) செயலாக்குபவர்கள் – நிர்வாகம், ஆலோசகர்களின் துணையோடு உருவாக்கிற திட்டங்களை செயலாக்குபவர்கள். உரியவர்களைத் தேர்வு செய்து, பணியில் ஈடுபடுத்தி திட்டங்களை நிறைவேற்றுபவர்கள் இவர்கள்.
ஈ) திறமையாளர்கள் – தொழில்நுட்பம், உற்பத்தி, உருவாக்கம், கணிணி இயங்குவோர் போன்றவர்கள் இந்தப் பிரிவுகளில் அடங்குவர்.
இந்த நான்கு துறைகள் தான் சர்வதேச அளவில் செயல்பாடுகளை இயக்கி நிறுவனங்களின் வேர்களாக விளங்கக்கூடியவை என்பது பிராங் வால்கரின் கணிப்பு.
2.கட்டமைப்பு என்கிற முதலீடு:
இதற்கு தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உறவும், உறுதுணையும் மிகமிக அவசியம். இணையதளங்கள், புள்ளி விபரங்கள், தகவல் பரிமாற்றம் போன்ற அடிப்படை அம்சங்கள் கட்டமைப்பு என்கிற பிரிவின் கீழ் வருபவை.
புள்ளிவிபரங்களை சேகரித்து அவற்றைத் தகவல்களாக உருவாக்குவது முதல்நிலை. அந்தத் தகவல்களை செயல் அறிவாக மாற்றுவது அடுத்த வகை. இரண்டுமே முக்கியமான அம்சங்கள்.
3.வாடிக்கையாளர்கள் என்கிற முதலீடு:
முந்தைய காலங்களில் உற்பத்தியாகிற பொருள் குறித்தும் விற்பனையின் உத்திகள் பற்றியும், வாடிக்கையாளர்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. சில பொருட்களைப் பொறுத்தவரை அந்தத் தயாரிப்பில் ஒரே நிறுவனம் ஈடுபட்டிருந்த நிலையில் பெரிய அளவில் போட்டிகளும் இல்லை. இன்று வாடிக்கையாளர்களின் மனநிலை மிகப்பெரிய அளவில் மாறியிருக்கிறது.
எந்தெந்தத் தயாரிப்பில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது தொடங்கி எவற்றில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பது வரை வாடிக்கையாளர்கள் உலகம் துல்லியமான தகவல் அறிவைப் பெற்றிருக்கிறது.
இதை வளரும் நிறுவனங்கள் ஒரு முதலீடாகவே பார்க்க வேண்டும். வாடிக்கையாளர்களின் விருப்பங்கள், தேர்வுகளும் என்னவென்று தெரிந்தால், அவர்களுக்கு சேவை செய்வது உண்மையில் எளிது. இதற்கான மனநிலைதான் நிர்வாகிகளுக்கு முக்கியம்.
வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வோடு இருப்பது தரமான நிறுவனத்திற்கும், முறையான நிர்வாகத்திற்கும், முறையான நிர்வாகத்திற்கும் துணை செய்யும் அம்சங்களே தவிர எதிரான அம்சங்கள் அல்ல. உங்கள் சிறப்பம்சம் நீங்கள் சொல்லாமலேயே உங்கள் வாடிக்கையாளருக்குத் தெரியுமென்றால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறென்ன இருக்க முடியும்?
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)