புதுமைகளை செய்கிற நிறுவனங்கள்தான் ஆதாயங்களை அள்ளுகின்றன. எல்லோருக்கும் புதுமை செய்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால், “என் நிறுவனத்தில் என்ன புதுமை செய்வது” என்கிற கேள்வியிலேயே பலரும் நின்றுவிடுகின்றனர்.
இந்தக் கேள்வியை ஒரு நிர்வாகி எப்படி எதிர் கொள்கிறார் என்பது மிகவும் முக்கியம். இதை ஒரு புதிராக எண்ணினால், அவரிடமிருந்து புதுமைக்கான கற்பனைக்களம் தள்ளிப்போகிறது. தன் நிறுவனத்தில் புதுமைகள் சாத்தியமில்லை என்கிற அவநம்பிக்கை ஆரம்பத்திலேயே துளிர்விடுகிறது.
மாறாக, புதுமை செய்யும் விருப்பத்தை, ஒரு நூலிழையின் முதல் நுனியாகப் பற்றிக் கொண்டு புதுமைக்கான வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் நோக்கி நகரத் தொடங்குகிற போதுதான் புதுமை செய்கிற தேடல், புதையல் வேட்டையாகத் தொடர்கிறது.
மேலோட்டமாகக் கேட்கிறபோது, செய்வதற்குச் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது ஒன்று, மிகப் பெரிய புதுமையாக வளர்ந்து விட முடியும்.
புதுமையான உத்திகள் பிறக்க வேண்டுமென்றால், அதற்கான முதல் வழி, கற்பனைகளை அனுமதிப்பது தான். கற்பனையை நோக்கிய முயற்சியில் முதலடி வைக்கும்போதே அதை அபாயகரமானதாகக் கருதி, கைவிடுபவர்கள் அதிகம்.
கலைத்துறையில் இருக்கும் ஒரு நண்பர், பல வருடங்களுக்கு முன்பே மினரல் வாட்டர் நிறுவனம் தொடங்கும் விருப்பத்தை நண்பர்களிடம் சொன்னார். “நம்ம ஊரிலே போய் யாராவது குடிக்கிற தண்ணீரை விலை குடுத்து வாங்குவாங்களா? நீங்க வேறே” என்று நண்பர்கள் எச்சரித்தல் அவருடைய ஊக்கம் குறைந்தது. சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், “மினரல் வாட்டர்” மிகப்பெரிய துறையாக விசுவரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது.
தொடங்கப்படாத தொழில்களில் மட்டுமல்ல. தொடங்கப்பட்ட தொழில்களில் கூட அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சில புதுமைகளை நடைமுறைப்படுத்த தெளிவும் துணிவும் தேவை.
புதுமையான உத்திகளின் வெற்றி, எண்களின் விளையாட்டு என்கின்றனர் நிர்வாகவியல் நிபுணர்கள்.
ஒரு நேரத்தில் ஒரேயரு உத்தியைத் தொடங்கி அதை மட்டுமே முயன்றால், அதன் வெற்றிக்கான சாத்தியக்கூறு 10% மட்டும்தான். மாறாக, ஒரே நேரத்தில் பத்துப்பதினைந்து உத்திகள் தொடங்கப்படும்போது அதிக உத்திகள் பலனளிக்கக் கூடும்.
ஜேம்ஸ்ப்ரியான் என்கிற நிர்வாகவியல் நிபுணர் “1:20 என்கிற கணக்கில் புதிய உத்திகளை முயற்சிக்கலாம்” என்று சொல்கிறார். அமெரிக்காவைப் பொறுத்தவரை, கடந்த ஐந்தாண்டுகளில், ஆரோக்கியம் மற்றும் அழகுப் பொருட்களில் 34 தயாரிப்புகள் பெரும் வெற்றி பெற்றதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் எட்டு தயாரிப்புகள், பிரிஸ்டல் என்கிற நிறுவனத்திற்கு உரியவை.
இந்த நிறுவனத்தின் தலைவராக ரிச்சர்ட்கெல்ப் பொறுப்பேற்ற பிறகு ஒரே நேரத்தில் பல புதுமைகளை முயன்று பார்க்க, தன் நிறுவனத்திற்கு ஊக்கம் கொடுத்தார்.
புதிய உத்திகளை ஒரு நிறுவனம் முயல வேண்டும் என்றால் அதற்கு நிர்வாகத்தின் அமைப்புமுறை சில அடிப்படை உதவிகளை செய்வது அவசியம். இழப்புகள் பற்றி கவலைப்படாமல் புதிய வாய்ப்புகளை முயன்று பார்க்க ஒரு நிறுவனம் தயாராக இருக்கிறது என்பது அதன் அலுவலர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இதற்கு நிறுவனத்திற்குள் நடைமுறையில் இருக்கும் தகவல் தொடர்புமுறை மிக எளிதாகவும், நேராகவும் இருப்பது அவசியம். நிறுவனத்திற்குள்ளான ஆரோக்கியமான விவாதங்கள் அனுமதிக்கப்படுவதோடு ஊக்கமளிக்கப்படவும் வேண்டும்.
இதற்கு தலைசிறந்த உதாரணம் சிட்டி பேங்க். முதுநிலை மேலாளர்கள் சில புதிய அணுகுமுறைகளை விளக்கிவிட்டு அமர்ந்ததும் கடும் கூச்சல்களும் விவாதங்களும் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கிளம்பும்.
எல்லோரும் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். நிறுவனத்தின் தலைவரில் தொடங்கி யாரை வேண்டுமானாலும் குற்றம் சாட்டுவார்கள். இதன் மூலம் கருத்துப் பரிமாற்ற நிலையிலிருந்தே பலரும் விவாதங்களில் பங்கெடுத்து அந்தப் புதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில் முழு ஆர்வம் காட்டுவார்கள்.
பெரும்பாலான நிறுவனங்களில் இந்த நிலை இல்லை. யாராவது ஒருவர் பேச மற்றவர்க் சுவாரஸ்யமில்லாமல் கவனித்துக் கொண்டும், மிக மெல்லிய விமர்சனங்களை தயக்கத்தோடு தெரிவித்துக் கொண்டு இருந்து விட்டு டீ குடித்துவிட்டு கூட்டத்தை முடித்துக் கொள்வார்கள். இதனால் சந்திப்புகள் வெறும் சடங்குகளாகவே முடிந்து விடுகின்றன.
எந்தவொரு நிறுவனத்திலும் தனித்தனித் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் இயங்கிவருகின்றன. இதில் ஒருங்கிணைந்த மனப்பான்மையோடு கூட்டாக செயல்பட வாய்ப்புகள் தரப்படுவதில்லை. ஒரு நிறுவனத்தின் தலைவர் இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு தேவைப்பட்ட மாற்றத்தை நிறுவனத்தின் உணவுக்கூட்டத்தில் தொடங்கினார். நான்கு நான்கு நாற்காலிகள் கொண்ட சின்னச்சின்ன மேசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு செவ்வக வடிவில் நீளமான மேசைகளைப் போட்டு நிறைய நாற்காலிகளையும் போட்டார். இதனால், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகி, அடிக்கடி கலந்து பேசி தங்களுக்குள் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. பலரும் சந்திக்கும் ஓய்வறைகளில் நிறைய கரும்பலகைகளும் நிறுவப்பட்டு வருவது வளரும் நிறுவனங்கள் பலவற்றில் சகஜமாகிக் கொண்டிருக்கிறது.
ஐபிஎம் நிறுவனம் மைக்ரோ ப்ராஸசர்களை உருவாக்கியபோது அதற்கான வேலைகள் 6 பரிசோதனைக் கூடங்களில் நடைபெற்றன. ஆனால், என்ன உருவாக்கப்படுகிறது என்பதில் மற்ற துறையினர் யாரும் அக்கறை காட்டவில்லை. இதன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த வாட்சன் நிறுவனத்தில் பல இடங்களில் அலுவலர்கள் பரிசோதித்துப் பார்க்கவும், விளையாடவும் மைக்ரோ ப்ராஸசர்களை ஆங்காங்கே நிறுவனார். இது ஊழியர்களின் ஆர்வத்தை பெருமளவு தூண்டியது. எல்லாத் தரப்பினரையும் ஈடுபடுத்துவதும் கருத்துக்களை ஒருங்கிணைத்து புதிய உத்திகளை உருவாக்குவதும் மேற்கொள்ளப்படும்போது புதிர்போல் தெரிந்த புதுமைகள் புதையல்கள் என்பது புரியும்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)