ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென்று சில இலக்குகளைக் கொண்டிருக்கும் என்றாலும் நிர்வாகத்தின் அடிப்படைத் தன்மைகள் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்பது பொது மேன்மைக்கான இலக்குகளைப் புரிந்துகொள்ள உதவும். பீட்டர் டிரக்கர் இது குறித்து சில அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.
1. வளங்களும், செயல்களுக்கான விளைவுகளும் தொழிலுக்கு வெளியில்தான் இருக்கின்றன.
2. செயல்களுக்கு விளைவுகள் வருவதென்பது புதிய வாய்ப்புகளை முயன்று பார்ப்பதில் இருக்கிறதே தவிர சிக்கல்களைகத் தீர்த்துக் கொண்டிருப்பதில் அல்ல.
3. நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமென்றால் வாய்ப்புகளை தீவிரமாக நெருங்க வேண்டும்.
4. சிறிய அளவில் செயல்படுபவர்களுக்கு பொருளாதார ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
5. தலைமை நிலை என்பது தற்காலிகமான விஷயம்தான்.
6. நெடுங்காலம் நீடிப்பது பழையதாகிவிடவும் கூடும்.
7. முயற்சியின் முதல் பத்து சதவிகிதம், முழு ஆதாயங்களைத் தீர்மானிக்கிறது.
8. பொருளாதார மேம்பாடு கிடைக்க வேண்டும் என்றால் முழு கவனம் செலுத்த வேண்டும்.
டிரக்கரின் இந்த வழிகாட்டுதல்கள் மிக முக்கியமானவை. ஒரு நிறுவனம், இயங்குவதே ஆதாயங்கள் பெருக்குவதற்காகத்தான். மாறாக நிறுவனத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதிலேயே கவனமும் நேரமும் செலவாகிக் கொண்டிருந்தால் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் கிடையாது.
அதேபோல பெரிய அளவில் வாய்ப்புகளை முயன்று பார்க்க வேண்டுமே தவிர குறுகிய எல்லைகளுக்குள்ளேயே நின்று கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
விரிவாக்கத்தின் மூலம் மட்டும்தான் புதிய புதிய எல்லைகளை நம்மால் தொட இயலும். அதன்மூலம்தான் புதிய வாடிக்கையாளர்களையும் கூடுதல் ஆதாயங்களையும் பெற முடியும். நிறுவனத்துக்குள் இருக்கிற சிக்கல்களைக் கையாள்வதில் கூடுதல் நேரம் செலுத்தும் நிர்வாகியால் வளர்ச்சியைத் திட்டமிட முடியாது. இங்கேதான் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்க வேண்டிய வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் பற்றி துல்லியமான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
ஒரு தயாரிப்புக்கு சந்தையில் இன்று என்ன இடம், எதிர்காலத்தில் என்ன இடம் என்பதை நன்கு சிந்தித்து அதற்கேற்பத் திட்டமிடுவதே நிர்வாகம். எந்தத் தயாரிப்புக்கும் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் தொடர்ந்து ஒரேவிதமான தன்மையில் நீடித்தால் அது அலுத்துப்போய்விடும்.
தொடர்ந்து புதுமைகள் செய்வதும், புதிய அம்சங்கள் சேர்ப்பதும், வடிவ மாற்றங்கள் – வசதி மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் சந்தையில் நீண்ட காலம் இருப்பதற்குரிய வழிகளாகும்.
எந்த ஒரு நிறுவனமும் சரி, தனி மனிதனும் சரி, தன்னால் என்னவெல்லாம் இயலும் என்பதை முதலில் உணர்ந்து அதற்கேற்ப திட்டமிடுவதே நல்லது.
தன் கண்டுபிடிப்புகளில் ஏறக்குறைய ஆயிரம் பொருட்களுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் காப்புரிமை வாங்கி வைத்திருந்தார். ஆனால் எந்த ஒரு நிறுவனத்தையும் அது ஓரளவு வளர்ந்த பிறகு அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. தன் செயல் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை செய்யத் திட்டமிட்டதுதான் இதற்குக் காரணம்.
வெளிஉலகில் ஏற்படும் எல்லா மாற்றங்களுமே ஏதாவதொரு விதத்தில் சில தொழில்களை பாதிக்கத்தான் செய்கிறது. பிரபலமான ஒரு மனிதரையோ கலையுலகம் சார்ந்தவரையோ வைத்து ஒரு விளம்பரத்தை சில நிறுவனங்கள் தங்களுக்காக தயாரித்துக்கொள்ளும்.
சமூகத்தால் கொண்டாடப்படுகிற அவர் சமூகம் ஏற்காத சில விஷயங்களை அவர் சொல்லிவிட்டால் உடனே அந்த விளம்பரம் அந்த நிறுவனத்திற்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே சமூக மாற்றங்களை, உணர்வுகளை, அபிப்பிராயங்களை அறிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் தன் ஒவ்வொரு பணியையும் திட்டமிட வேண்டிய அவசியம் நிறுவனங்களுக்கு இருக்கிறது.
நிர்வாகிகள் இத்தகைய சமூக மாற்றங்களை ஓரளவு யூகிக்க முடியும். ஆனால் தன் நிறுவனத்தின் இலட்சியங்கள், செயல்முறைகள் ஆகியவற்றை யூக அடிப்படையில் உருவாக்க முடியாது.
கால மாற்றங்களுக்கு ஏற்ப சிறுசிறு திருத்தங்களை செய்து கொள்ளலாமே தவிர முழுவதையும் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கக் கூடாது.
எல்லா நிறுவனங்களும் தன் போக்கை மாறுபார்வை பார்த்து சீரமைக்க கடமைப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இது வாரம் ஒருமுறையோ, மாதம் ஒரு முறையோ வருடம் ஒருமுறையோ செய்யக் கூடிய காரியம் அல்ல.
சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் நிர்வாகிகளால் கணிக்கப்படுகின்றது. நிதியாண்டின் நிறைவில் அந்த வளர்ச்சியைத் தாண்டி பல மடங்கு வளர்வது ஒரு விதத்தில் எச்சரிக்கை தருகிற அம்சம்தான்.
அதேநேரம் இலக்காகக் குறித்த வளர்ச்சியில் பாதிகூட எட்டவில்லை என்றால், அதுவும் நல்ல அறிகுறி அல்ல. ஏனெனில் அபரிமிதமான வளர்ச்சியைக் கையாள நிறுவனம் தயார் நிலையில் இருக்காது. எதிர்பாராத வளர்ச்சி மெத்தனத்தை ஏற்படுத்தும். அதேநேரம் எதிர்பார்த்த வளர்ச்சியில் பாதியைக்கூட எட்டாதபோது அது விரக்தியையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
கணித்த அளவு வளர்ச்சியில் இருபதில் இருந்து முப்பது சதவிகிதம் வரை கூடவோ குறையவோ செய்யுமேயானால் அது நிறுவனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டும்.
போட்டிகளுக்கு மத்தியில் விரைந்து முன்னேறுவதைவிட வலிமையாக முன்னேறுவதே வளரும் நிறுவனங்களின் இலக்கணம்.
– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)