மார்க்கெட்டிங் துறையில் களத்தில் குதிப்பதற்கு முன்னால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள நிறைய நேரம் செலவிடுங்கள். உங்களைப் பற்றிய நிஜங்கள் உங்கள் அனுபவத்திலும் மூத்தவர்களிடமிருந்து கிடைக்கும். சில சமயம் மிக மிக சிறியவர்களின் வார்த்தைகளிலிருந்தும் கிடைக்கும்.
பொதுவாக, முன்பின் தெரியாத குழந்தைகளிடம் மூன்று நான்கு நிமிடங்களுக்குள் உங்களால் பழகிவிட முடிகிறதென்றால், மார்க்கெட்டிங் துறையில் மளமளவென்று முன்னேறுவீர்கள் என்று அர்த்தம்.
குழந்தைகள், புதிய விஷயங்களை எப்போதும் தேடுகின்றன. அதிலும் சுவாரஸ்யமான விஷயங்களை விரும்புகின்றன. நீங்கள் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து சில நிமிஷங்களிலேயே குழந்தைகளின் ஆர்வத்தை உங்களால் கிளறிவிட முடிகிறதா உன்று பாருங்கள்.
ஏன் தெரியுமா? நீங்கள் சொல்லும் புதிய விஷயம், எதிரில் உள்ள பிராஸ்பெக்ட்டிற்கு பிடிக்கிறதென்றால், அவருக்குள் இருக்கிற குழந்தை மனம் விழித்துக் கொண்டதாகப் பொருள். எல்லோருக்குள்ளும் இருக்கும் குழந்தைதான் புதிய விஷயங்களை விரும்புகிறது. எனவேதான், குழந்தைகளால் விரும்பப்படக் கூடியவர்கள் மார்க்கெட்டிங் துறைக்குப் பொருத்தமானவர்கள் என்கிறேன்.
தான் எப்படி எடைபோடப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ள விருப்பம் இருந்தால், தகுந்தவர்கள் வழிக்காட்டத் தயங்கவே போவதில்லை.
பொது விஷயங்கள் தெரிந்தவர், பிறரின் விருப்பங்களைக் காது கொடுத்துக் கேட்பவர். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொண்டவர். தனக்குப் பிடித்த ஒன்று உலகுக்கே பிடிக்க வேண்டுமென அடம் பிடிக்காதவர் என்று இத்தனை சமாச்சார லட்சணங்களும் இருப்பவர்களே சமூகத்தால் விரும்பப்படுவர்கள்.
தமிழகத்தில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றின் தலைவர், தன்னைப்பற்றி என்னிடம் கேட்டபோது இப்படிச் சொன்னேன். “நீங்கள் கேப்ஸ்யூல் லிஃப்டில் போவது போல் பாதுகாப்பாகத்தான் உயர்கிறீர்கள். ஆனாலும் கயிற்றில் நடப்பது போல் கவனமாயிருக்கிறீர்கள்” என்று பல ஆண்டுகளுக்குப் பிறகுகூட ஓர் உரையாடலின் போது அவரால் இந்த உதாரணத்தை நினைவு கூர்ந்திட முடிந்தது.
வெற்றியாளர்களே, அபிப்பிராயங்களை விரும்பிக் கேட்கிறபோது ஒரு துறையில் வளர வேண்டும் என்கிற வெறி இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியம். உங்கள் பேச்சு, நடை உடை பாவனை என்று அநேக விஷயங்களை சரிசெய்ய இந்த அபிப்பிராயங்கள் உதவும்.
இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தபோது மூன்றாவதாக ஓருவர் வந்தார். முதலாமவர், மூன்றாமவரைப் பார்த்து, “வாங்க! வாங்க! இத்தனை நேரம் உங்களைப் பற்றித்தான் பேசிக்கிட்டிருந்தோம்” என்றாராம். என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள இவருக்கு ஆசை. உடனே இரண்டாமவர், “அடடே! இவ்வளவு நேரம் சொன்னீங்களே! இவர்தானா அவரு” என்று கேட்டபடியே கீழே குனிந்து கையில் கல்லை ஏடுத்தாராம்.
அபிப்பிராயங்கள் கேட்பதில் சில நேரங்களில் இத்தகையை விபரீதங்கள் ஏற்படலாம். ஆனால் உங்களை மற்றவர்களின் இடத்தில் நின்று நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்.
மார்க்கெட்டிங்கில் முக்கியமாகத் தேவைப்படும் மற்றொரு கூட்டணி, இதயமும் உறுதியும். இதமாய் இருப்பதும் உறுதியாய் இருப்பதும் வெவ்வேறு விஷயங்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்.
மனதில் வகுத்துக்கொண்ட இலக்கை எட்டுவதென்பதில் நீங்கள் உறுதியாய் இருக்கலாம். அதற்காக அந்த உறுதியும் தீவிரமும் வாடிக்கையாளரிடம் பேசுவதில் வெளிப்பட வேண்டியதில்லை. இதமாக இனிமையாக அதே நேரம் உத்திரவாதம் தரும் விதத்தில் பேசலாம்.
எப்படியாவது இந்த ப்ராஸ்பெக்ட் மடங்க வேண்டும் என்கிற பரபரப்பில் எல்லாப் பக்கமும் வலை எறிந்து வியர்க்க விறுவிறுக்க மார்க்கெட்டிங் பிரதிநிதி பேசிமுடித்தபோது, எதிரே இருந்தவர், தன் குறிப்பேட்டில் மூன்றே வார்த்தைகள் எழுதினார். He is desperate!!! (இவர் இந்த வணிகத்தை நிகழ்த்தியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்) இது உங்கள்மேல் உயர்வான அபிப்ராயத்தை ஏற்படுத்தாது.
மார்க்கெட்டிங் அலுவலர் என்றாலே ஏதோ ஒன்றின் விற்பனையை மையப்படுத்துபவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் வந்திருப்பவர், தேவையான ஒன்றைத் தர வந்தவரா அல்லது தேவையில்லாத ஒன்றைத் தலையில் கட்ட வந்தவரா என்கிற கேள்விதான் மார்க்கெட்டிங் பிரதிநிதிகளை சந்தேகத்துடன் பார்க்க வைக்கிறது.
எதிரே இருப்பவர் முதலில் நம்ப வேண்டியது உங்களை! உங்கள் தயாரிப்பைக்கூட அல்ல. ஒருவரின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, அந்த வாழ்க்கையில் உங்கள் தயாரிப்பு எங்கே பொருந்துகிறது என்பதையும், அதிலே கிடைக்கக்கூடிய பலன்களையும் கச்சிதமாக சொல்ல முடிந்தால், கேட்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.
மாறாக, அவர்களின் தேவையை விடவும் உங்கள் பொருளைத் தள்ளிவிடுவதிலேயே குறிப்பாக இருக்கும்போது நோக்கம் பற்றி அவர்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
எவ்வளவுதான் தகவல் அறிவு, விழிப்புணர்வு போன்றவை ஏற்பட்டாலும், தயாரிப்புகள் குறித்தோ, சேவை குறித்தோ மனிதர்கள் வாயிலாக அறிந்து கொள்ள முற்படுவதுதான் மனித உளவியல்.
பளிங்குபோல் மின்னும் மெனு கார்டை கையில் கொடுத்தாலும் புரட்டிப் பார்த்துவிட்டு, “என்ன இருக்கு” என்று கேட்பதும் இல்லாவிட்டால் ஏற்கனவே முடிவு செய்தபடி, “ஒரு மசால் தோசை” என்று கேட்பதும் பெரும்பாலானவர்கள் இயல்பு. முன்முடிவுகள் அல்லது முன்னே உள்ள மனிதர் -இவர்களை வைத்துத்தான் இந்தியாவில் பொருட்களை வாங்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. உங்களை நம்பகமானவராய் முன்னிறுத்திக் கொள்ளும் போது உங்கள் மீதான நம்பிக்கையே நீங்கள் பரிந்துரை செய்கின்ற சேவையின் மீதோ தயாரிப்பின் மீதோ படர்கிறது.
ஒரு பேனாவை மார்க்கெட்டிங் செய்வது, வாங்குபவரின் எழுதும் தேவைக்கு ஈடுகொடுப்பதில் மட்டுமல்ல, அவருடைய சட்டைப்பைக்கு பொருந்துகிறதா, பிடிமானம் சரியாய் இருக்கிறதா என்று பலவற்றையும் பொறுத்தே இருக்கிறது.
மனதைப் படிக்கலாம் என்றால் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்கலாம்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)