நமது வீட்டின் முகவரி – 1
கல்யாணமாகிக் கொஞ்ச காலம் ஆனதுமே எல்லோரும் கேட்பது, “ஏதும் விசேஷமா?” என்றுதான். விசேஷம் என்றால் தீபாவளி பொங்கலையா கேட்கிறார்கள்? குழந்தைப் பேறு பற்றித்தான் கேட்கிறார்கள். குழந்தையின் சிரிப்பும் பேச்சும் இருந்தால் தினமும் தீபாவளிதான். மகிழ்ச்சிப் பொங்கல்தான்.
உங்கள் குடும்ப வாரிசு குருத்து விடுகிற சம்பவம் மட்டுமல்ல, குழந்தைப்பேறு. அது, இந்த சமூகத்தோடு சம்பந்தப்பட்டது. கருவிலிருக்கும் குழந்தையை பெற்றோர் அவரவர் வாழ்க்கைமுறைக்கும் அணுகுமுறைக்கும் ஏற்ப பாதிக்கவோ, சோதிக்கவோ செய்யலாம் என்பது மருத்துவ உண்மை.
அலறல் வாத்தியங்கள், அழுமைச் சத்தம், அதிர்ச்சி தரும் ஓசைகள், ஆவேச உணர்வுகள் சுற்றுப்புறத்தில் அலைமோதும்போது, கருவிலிருக்கும் குழந்தையின் மனதில் அந்த அதிர்வுகளின் பதிவுகள் தவிர்க்க முடியாததாகின்றன. அதன் விளைவுகளும் மோசமாகின்றன. எனவே கருவுற்ற பெண் இருக்கிற வீட்டில் ஒலிக்கிற இசை இதமாகவும், மிதமாகவும் இருக்க வேண்டும். காற்று கறுப்பை நுழையாமல் பார்ப்பதுபோலவே, கண்ணீர் மல்கும் சீரியல்களையும் தவிர்க்க வேண்டும்.
கருவிலிருந்தபோதே அபிமன்யு, வியூக விபரங்களைக் கேட்டதாகவும், அதை முழுமையாக சொல்லாததால்தான் போர்க்களத்திலே சிக்கிக் கொண்டதாகவும் சொல்வதுண்டு.
கருவிலிருக்கும் காலம் தொட்டே குழந்தை பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இதமான இசை, இனிமையான சொற்கள், நல்ல இலக்கியங்கள் போன்றவை ஒலிக்கும் சூழலில், கருவுற்றிருக்கிற பெண் வாழ்ந்து வந்தால் பிறக்கும் குழந்தையிடம் அந்தப் பண்புகள் படியும்.
அது நம் வீட்டில் இயல்பாகவும் மாறிவிடும். நம் வீட்டின் முகவரி, கதவிலக்க எண்களில் மட்டும் இல்லை. நாம் நம் வீட்டைச் சுற்றி உருவாக்கியுள்ள உணர்வுகளில் இருக்கிறது. நம் வீட்டிற்கு யாராவது வழிகேட்டால், நான்கு பேர் நல்லவிதமாக அடையாளம் சொல்ல வேண்டும் அல்லவா? வீட்டை உருவாக்கும்போதே அதற்கும் சேர்த்து அஸ்திவாரம் போட வேண்டும்.
வீடு என்பது கல்லாலும் மண்ணாலும் கட்டப்படுகிற கட்டடம் மாத்திரம் அல்ல. கனவுகளும் இலட்சியங்களும் உருவாகும் இடம். ஒரு குழந்தை பிறந்து வளர்வதற்கான அடிப்படைச் சூழ்நிலைகளில் ஒன்று பரம்பரை இயல்புகள். இன்னொன்று, சுற்றுச்சூழல் இயல்புகள்.
கருவுற்ற நாள் தொடங்கி, தொற்று நோய்களைத் தவிர்க்க, தாய்க்கு நிறைய தடுப்பூசிகள் போடுகிறார்கள். கலை – இசை போன்றவையும் உணர்வு சார்ந்த தடுப்பூசிகள்.
உங்கள் குழந்தை, உங்கள் முகவரியாகவும், உங்கள் பரம்பரையின் முகவரியாகவும் பெயர் சொல்லப்போகிற பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்துக்குப் பொருத்தமான சூழல் வீட்டுக்குள் உருவாகிவிட்டதா என்று முதலில் கவனியுங்கள்.
“பியானோ வாங்கி வைத்திருப்பவர்களெல்லாம் இசைக்கலைஞர்கள் இல்லை. பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் பெற்றோர்கள் இல்லை” என்றொரு மேல்நாட்டுப் பழமொழி உண்டு.
அன்பும் அமைதியும் மிக்க வீட்டுச் சூழல் உருவாகும் என்றால், அங்கு பிறந்து வளர்கிற பிள்ளைகள்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
குழந்தை, கருவிலுள்ள காலம் தொடங்கி, பிறந்து வளர்கிற காலத்திலும் அதன் உள்ளத்தில் உன்னதமான உணர்வுகள் பதியும் விதமாய் உங்கள் குடும்பச் சூழலை உருவாக்குங்கள்.
ஏனெனில், பிறந்து வளர்வது பிள்ளையல்ல – இந்தப் பிரபஞ்சத்தின் புதிய நம்பிக்கை!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)