நமது வீட்டின் முகவரி – 7
எதிர்காலம் பற்றிய உத்திரவாதம் நிகழ்காலத்திலேயே கிடைப்பதற்குப் பெயர்தான் கேம்பஸ் இண்டர்வியூ. அதில் எல்லோர்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கே இடமில்லை. “பூமி பொதுச்சொத்து; உன் பங்கு தேடி உடனே எடு” என்றார் கவிஞர் வைரமுத்து. எதிர்காலத்தை எதிர்கொள் உற்சாகமாகக் கிளம்ப வேண்டியதுதான்.
நேர்முகத் தேர்வுகள் என்றாலே, அவை இளைஞர்களுக்கு எதிரானவை என்பதுபோல ஒரு தவறான அபிப்பிராயம், தமிழ் சினிமாக்களின் தயவால் உருவாகிவிட்டது. சம்பந்தம் இல்லாத அசட்டுக் கேள்விகள் – பரிந்துரை அடிப்படையில் பணி நிரப்புதல் இவையெல்லாம், நல்ல திறமையைத் தேடும் எந்த நிறுவனத்திலும் இடம்பெற வாய்ப்பில்லை.
தகுதிமீது வைக்கும் நம்பிக்கையும், நேர்கொண்ட பார்வையும், தெளிந்த சிந்தனை, கூர்மையான பேச்சு ஆகியவற்றின் அசைக்க முடியாத கூட்டணியும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தர வல்லவை.
தயக்கமில்லாமல் பேசுவதும், தவறில்லாமல் பேசுவதும் இண்டர்வியூவில் உங்களை மிளிர வைக்கும், ஆளை அசத்தும்படியாய் ஆடை மட்டும் அணிந்துகொண்டு, தட்டுத் தடுமாறிப் பேசுவது உங்கள் மீது நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது. ஆடையில் கம்பீரம் அவசியம்தான். அது “அவுட்டர் வியூ” (Outer View) ஆனால் நடப்பதோ இண்டர்வியூ. உங்கள் உள்நிலையின் தகுதிகளைப் பார்க்க நிறுவனத்தினர் எடுத்துக்கொள்ளும் முயற்சியே இது.
எதிரில் இருக்கும் மனிதரை, கண்ணோடு கண் சந்தித்துப் பேசுகிற துணிவு, அதே நேரம் போதிய அளவு பணிவு இரண்டும் தேவை இண்டர்வியூ செல்லும் இளைஞர்களுக்கு.
பணியில் சேர்வதென்பது தரப்பட்ட வேலையை இயந்திரம் மாதிரி செய்து மட்டுமில்லை. அந்த நிறுவனத்தின் இன்னொரு பகுதியாகவே மாறுவது. அதற்கென்று தனியாகத் துறுதுறுப்பு தேவை. கல்வித் தகுதி, மொழி நடை போன்ற பொதுத் தகுதிகள் தாண்டி, சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கண்களில் மின்னலாய்த் தெறிக்குமென்றால் அதுவே இண்டர்வியூ செய்யும் நிறுவனத்தாரைப் பெரிதும் கவரும்.
சிலரை பணிக்குத் தேர்ந்தெடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டு, நிறுவன மேலாளர், அருகிலிருக்கும் அலுவலரிடம் அலுத்துக்கொள்வார். “பையன் படிச்சிருக்கான். சர்டிபிகேட் எல்லாம் சரியாயிருக்கு. ஆனால் ஸ்மார்ட்டா இல்லையே” என்பார். அவர் தேடுவது, சாதிக்க வேண்டம் என்கிற நெருப்பு உங்களிடம் இருக்கிறதா என்பதைத்தான். நிறையப் பேர், இண்டர்வியூவைத் தங்கள் நேரத்தை செலவிடுவதற்கான கட்டணத்திற்கு பேரம் பேசுகிற வாய்ப்பாகவே கருதுகிறார்கள். அது ஒரு சவால். சவாலை எதிர்கொள்ளும் மனோபாவம் உள்ளவர்களுக்கு சம்பளம் ஒரு தடையல்ல என்பதை, வேலை வாய்ப்பு விளம்பரங்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றன. அதனைப் புரிந்து நடக்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
சில இளைஞர்கள், வேலை கிடைக்க வேண்டுமே என்கிற ஆர்வக் கோளாறு காரணமாய், அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவு வாக்குறுதிகளை வாரி வழங்குவதும் உண்டு. அதன் விளைவாகப் பதவி ஏற்காமலேயே வாய்ப்பு இழக்கும் அபாயம் நேரலாம். ஏன் அப்படி…?
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)