நமது வீட்டின் முகவரி – 8
விற்பனை சார்ந்த துறைகளில் இப்போதெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகம். பேச்சுத்திறன், பணிந்துபோகும் குணம் போன்ற இதற்கான அடிப்படைத் தகுதிகள். இத்தகைய பணிகளுக்கு இண்டர்வியூ நேரத்திலேயே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. “மாதம் ஒன்றுக்கு எந்த இலக்கு வரை உங்களால் எட்ட இயலும்?” என்கிற கேள்விக்கு, சாத்தியமாகக்கூடிய பதில்களையே சொல்லவேண்டும்.
கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மாதத்திற்கு நான்கு கம்ப்யூட்டர்கள்தான் விற்கமுடியும் என்று நீங்கள் கருதினால், அதையே சொல்லலாம். வேலையைப் பெற்றுவிடும் அவசரத்தில், “எட்டு” என்று எட்டாத கனிக்குக் கொட்டாவி விடவேண்டிய அவசியமில்லை. அதற்கு அதிகமாக விற்றால் எப்படியும் ஊக்கத் தொகை பெறத்தான் போகிறீர்கள். எனவே இலக்கை நிர்ணயிக்கக்கூடிய நேரத்தில் நிதானம் அவசியம்.
அது குறித்து விண்ணப்பிக்கும் துறை, உங்களுக்கு வாழ்க்கை தரப்போகும் துறை. எனவே, அதிகமாகவே தகவல்களைத் திரட்டி வைத்துக் கொள்வதில் தவறில்லை. பாடப் புத்தகங்களைக் கல்லூரி முடிந்தபின் மூடி வைத்துவிட்டால்கூட, துறைசார்ந்த இதழ்கள் – நூல்களைத் தொடர்ந்து படிப்பது அவசியம். “Update” செய்துகொள்வது என்று இதற்குப் பெயர்.
இண்டர்வியூக்களில் இன்னொரு முக்கியமான அம்சம். ஒரு கேள்வியை சரியாகப் புரிந்துகொள்வது. பலர் கோட்டைவிடுவது இதிலேதான். தகவல்களைத் தகவல்களாக மட்டுமே தெரிந்து வைத்துக்கொள்வதும், அதனை அறிவாக மாற்றி மனதில் பதிவு செய்து கொள்வதும் அடிப்படையில் வேறுவேறு.
மனித மூளை, பழக்கத்திற்கு அடிமை. ஒரே மாதிரியான முறையில் விஷயங்களை உள்வாங்கிப் பழகிவிட்டால் மாற்றுவது சிரமம். ஒரு கருத்தை நயம் கலந்து சொன்னால் கவிதையாகிறது. விளையாட்டாகச் சொன்னால் நகைச்சுவையாகிறது. இறுக்கத்தோடு சொன்னால் தத்துவமாகிறது. எந்த முறையில் சொன்னாலும் உள்வாங்கிக் கொள்ள திறந்த மனது தேவையாயிருக்கிறது.
உதாரணமாக, “இந்தியாவின் பிரதமர் யார்? – வாஜ்பாய்” என்று கடம் தட்டிப் பழகிவிட்டால், “வாஜ்பாய் எந்த நாட்டின் பிரதமர்” என்கிற கேள்வி கேட்கப்படும்போது கவனம் தடுமாறும். இண்டர்வியூவில் அறிவுள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்று கேட்கும்போது ஒருவர் பதில் சொன்னார், “இல்லை அறிவாளிகள்தான் வெற்றி பெறுவார்கள்” என்று.
அறிவுள்ளவர்களுக்கும், அறிவாளிகளுக்கும் என்ன வித்தியாசம்? “அறிவாளி” என்கிற சொல்லின் அர்த்தம், “அறிவை ஆளத் தெரிந்தவர்” என்பதுதான். ஒரு விஷயம் குறித்து, எங்கே, எப்போது, எப்படிக் கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியும்.
அறிவுள்ளவர் அதனை வெறும் தகவலாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பார். அவருக்குப் பழகிய பாணியில் விட்டுவிட்டு வேறுபாணியில் கேள்வி கேட்டால், சரியான பதிலைத் தன் ஞாபக அடுக்குகளில் தேடி எடுத்துக் கொண்டு வந்து தருவார்.
தகவலை அறிவாக மாற்றிக் கொண்டுள்ளவர்கள் மின்சார பல்பின் சுவிட்ச் மாதிரி. தட்டினால் எரியும். தாமதமாய் எரிந்தால், அதன் பெயர்தான் உங்களுக்குத் தெரியுமே… ஆமாம்! டியூப் லைட்தான்!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)