நமது வீட்டின் முகவரி – 9
நேர்முகத்தேர்வு பற்றி கடந்த இரண்டு அத்தியாயங்களில் நிறையவே பேசினோம். நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்வதென்பது, நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள யாரோ தருகிற வாய்ப்பு. அயல்நாட்டு இசைக் கலைஞர்கள் மத்தியில் பரவலாக ஒரு வாசகம் உண்டு. “பயிற்சியை ஒரு நாள் நிறுத்துகிறாயா? உனக்கு மட்டும் வித்தியாசம் தெரியும். பயிற்சியை இருநாள் நிறுத்துகிறாயா? விமர்சகர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்.” ஆம்! பயிற்சியின்மையின் அறிகுறிகள் வெளிப்படையானவை. பலவீனத்தின் ஆரம்பக்கட்டம் அது.
தொடர்ந்து தகுதிப்படுத்திக் கொண்டே இருப்பதன் தலையாய அவசியம், நேர்காணலில் வெளிப்படும். ஒரு மனிதன் தன்மீது நம்பிக்கை கொள்ள ஒரே வழி தன்னைத்தானே தகுதிப்படுத்திக் கொள்வதும் தன்னை நம்புவதும்தான். “நேர்காணல்” மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை நிறையப் பேர் நிறைவேற்றிவிட்டு, பிறகு நேர்காணலில் கலந்துகொள்கிறார்கள். அதனால்தான் கலைத்துவிடுகிறார்கள்.
எனவே முதலில் நீங்கள் நம்புங்கள். நீங்கள் பங்குபெறும் நேர்காணல் நேர்மையானதுதான் என்று நம்புங்கள். பிறகு அந்த நேர்காணலில் உங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள். “எத்தனை இண்டர்வியூடா போவே” என்று அப்பா அலுத்துக்கொண்டாலும், நண்பர்கள், “ஆல் தி பெஸ்ட்” என்று கை குலுக்கி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் உங்களால் முடியும் என்கிற நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்துங்கள்.
அதைவிட முக்கியம், உங்கள் பலவீனத்தைத் தெரிந்துகொள்வது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு உங்களுக்குப்பிடிக்காமல் போகலாம். எனவே, அதைத் தவிர்த்துவிடலாம் என்று உள்மனம் சொல்லும். தெரியாத துறையைத் தெரிந்துகொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில்தான் வெற்றி முழுமை பெறுகிறது.
“இதெல்லாம் உனக்கு சரிப்படாது! இந்த அளவுக்கெல்லாம் உன்னால் முடியாது” என்று, உங்கள் தகுதியை வெளியிலிருக்கும் யாரோ நிர்ணயம் செய்ய அனுமதிக்காதீர்கள்.
தனது வலிமை பற்றிய மதிப்பீடு யாரிடம் உள்ளதோ அவர், அடுத்தவர்கள் மதிப்பீட்டில் தாழ்ந்துவிடுவதில்லை. குறிப்பாக, பணிநிலைத் திறன் குறித்து நாமே முடிவெடுப்பதே நல்லது.
“எந்த வேலை கிடைச்சாலும் சரி” என்று தழைந்து கொடுக்கும் மனப்பான்மை திறமையாளர்களுக்குத் தேவையில்லை. ஒருவேளை சந்தர்ப்ப சூழலால் ஏதோ ஒரு வேலையை ஏற்க நினைத்தாலும் பார்க்க விரும்பும் வேலையை என்றைக்காவது பார்த்தே தீருங்கள்!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)