நமது வீட்டின் முகவரி – 10
“எடுத்த எடுப்பிலேயே ஏகமாய்ச் சம்பளம்.” இது வேலை இல்லாத இளைஞர்களின் வசீகரக் கனவு. இந்தக் கனவு நிலையிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். ஏனெனில், பயிற்சிக்காலம் முடிந்து பணிக்கு இவர் இன்றியமையாதவர் என்கிற எண்ணம் ஏற்படும்வரை வேலை தருபவரிடம அதிகம் எதிர்பார்க்க முடியாது.
பெரும்பாலும், நிர்வாகிகளுக்கு திறமையாளர்மீது தனிக்காதலே உண்டு. பணியில் சேர்க்கப்பட்டு, பயிற்சிக்காலம் (Probation) முடியும்முன்னர், தன் தகுதியை நிரூபிக்கிறவர் நிலை நிறுத்தப்படுகிறார். அவர் கேட்பது கிடைக்கிறது.
சில இளைஞர்கள் என்னிடம் நேர்காணலுககு வருவார்கள். கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களை மெல்லப் புரட்டிவிட்டு, ஓரிரு கேள்விகள் முடிந்ததும், “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்பேன். “6000” “7000” என்று பதில் வரும். “அப்படியானால் இவ்வளவு லட்சங்கள் உங்களுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கலாமே” என்றால், “இப்போது மார்க்கெட் எப்படி என்று தெரியாது. எனவே, இலக்கு வேண்டாம் சார்” என்பார்கள். சன்மானம் குறித்துக் கவலைப்படுகுற அளவு, சவாலை எதிர்கொள்வதில் இவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை.
ஏன் இவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள் என்றால், தன் திறமைகள் பற்றிக கதாகாலட்சேபமே செய்யும் இளைஞர்கள், பலர் “இலக்கு நிர்ணயித்தல்” என்று வந்ததும் “சடக்”கென்று பின்வாங்குவார்கள்.
ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், உங்களைப் பணியிலமர்த்த நிர்வாகி துணிய மாட்டார். எனவே உங்களால் என்ன முடியுமோ, அதற்கேற்ற விலையை உங்களுக்கு நீங்களே நிர்ணயுங்கள். சம்பளம் பேசுவது என்பது லாட்டரி டிக்கெட்ட வாங்குவதுபோலக் குத்துமதிப்பாகக் கேட்டுப்பார்ப்போம். அடித்தால் லாபம்தானே இது சிலரின் வாதம். ஆனால், அத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் ஒரு நம்பரில் போய்விடுகிறது என்பதுதான் உண்மை.
தகுதிக்குத் தகுந்த சம்பளம் தர நிர்வாகிகள் தயாராக இருப்பார்கள். தகுதிக்குமேல் எதிர்பார்ப்பவர்களிடம் உஷாராக இருப்பார்கள்.
முதல் அறிமுகத்திலேயே நிர்வாகம் பணியாளரையும், பணியாளர் நிர்வாகத்தையும் முற்றாக எடைபோடுவது முடியாத காரியம். “வேலை செய்யட்டும் பார்க்கலாம்” என்பது நிர்வாகியின் மனோபாவம். “பணம் தரட்டும் வேலை செய்யலாம்” என்பது பணிக்கு வருபவர் மனோபாவம். திறமையை வெளிப்படுத்த முதல் வாய்ப்பு கிடைக்குமென்றால், விட்டுக் கொடுக்க வேண்டியவர், பணிக்கு வருபவர்தான்.
நேர்காணலுக்குப் போயமர்ந்த அடுத்த நிமிடமே அந்த நிறுவனத்தின் அங்கமாகத் தன்னை வரித்துக்கொள்கிற அக்கறையைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஓர் உணவகத்துக்குப் போகிறோம். “ஒரு பிளேட் இட்லி வடை” என்றதுமே, “12 ரூபாய் ஆகும் பரவாயில்லையா?” என்று சர்வர் கேட்டால் சரியாயிருக்குமா?
அதுபோல், நேர்காணல் தொடங்கியதுமே நம் தேவைகளைப் பற்றிப் பேசுவது அவர்களை எரிச்சலூட்டும்.
நம்மால் செய்ய முடிந்ததை நாம் சொல்வோம். அவர்களால் தரமுடிந்ததை அவர்கள் சொல்லட்டும்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)