நமது வீட்டின் முகவரி – 11
கல்விக்காலம், பதவிக்காலம், எல்லாவற்றிலுமே இளைஞர்கள் வாழ்வில் பெரும்பகுதி வகிப்பது நட்பு. 25 வயதை எட்டிவிட்ட இளைஞரைக் கேளுங்கள், “என்னதான் சொல்லுங்க! எத்தனை நண்பர்கள் வந்தாலும் பள்ளிக்கூட நண்பர்கள் அளவுக்கு மனசுக்கு நெருக்கமா வர்றதில்லீங்க!” என்பார்.
மனிதனை உயர்த்துவதும், கொஞ்சம் அசந்தால் வீழ்த்துவதும் நட்புதான். அதனால்தான் திருவள்ளுவர்கூட நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு என்று அதிகாரம் அதிகாரமாய் அடுக்கிக் கொண்டே போகிறார். நமது வாழ்வில் நண்பர்களுக்கு என்ன இடம் என்பதை ஆராய்ந்தாலே போதும்; வாழ்க்கையின் பலமான அம்சமாக நட்பு ஆகிவிடும்.
முதலில், பள்ளிக்கூட நட்பு பல்லாண்டுகளுக்குப் பிறகும் மனதில் அழிக்கமுடியாத அத்தியாயமாகிவிடுவது ஏனென்று பார்ப்போம்.
பள்ளிப்பருவத்தில் சக மாணவனை நண்பனாக மட்டுமே பார்க்கிறோம். அவனிடமிருந்து என்னென்ன கிடைக்கும். எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற எண்ணங்கள் துளியும் ஏற்படுவதில்லை. பல வருடங்கள் கழித்துப் பார்க்கிறபோதும், அந்தப் பழைய பதிவுதான் மனதில் நிழலாடுகிறதே தவிர வேறு நினைவுகள் வருவதில்லை. எனவேதான் பள்ளி நண்பர்களை எப்போது பார்த்தாலும் பழைய சந்தோஷம் பற்றிக் கொள்கிறது.
இது சுகம்தான். ஆனால் கூடவே இன்னொரு சிரமும் இருக்கிறது. நட்பு என்றாலே அது பயன் கருதாதது என்பதாக ஓர் எண்ணம் நமக்குள் பதிந்துவிடுகிறது. காலப் போக்கில் கல்லூரி கடந்து வேலைக்குப் போகும் வேளையில், சக அலுவலர்கள் – சமூகத் தொடர்புகள் என்று வரும் நட்பு அத்தனையும், நம்மிடம் எதையாவது எதிர்பார்த்தே ஏற்படுகிறது. அல்லது அத்தகைய எதிர்பார்ப்புகள் இருப்பதாய் நமக்குத் தோன்றுகிறது. இதனால், சக மனிதர்களை நம்பாமை, யாருமே அன்பாக இல்லை என்கிற விரக்தி, சந்தேக மனோபாவம், எல்லாமே ஏற்படுகிறது.
முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருப்பதில் நட்புக்கு ஏதும் நிகரில்லை. என்றாலும், பயன்கருதிப் பழகுகிற பாங்கு 10% ஆவது இருக்கத்தான் செய்யும்.
உடன் பிறந்தவர்களே சொத்தில் உரசிக் கொள்கிறபோது, எங்கிருந்தோ வந்த நட்பில் ஏகமாய் எதிர்பார்த்து ஏமாறுவது கூடாது. குறிப்பாக, நெருங்கிய நண்பனுக்குத் திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நண்பனின் வாழ்வில் தனக்கிருக்கும் முக்கியத்துவம் குறித்து, அந்தப் புதிய பெண்ணின் முன்னே நிரூபிக்க நினைத்து, அளவுக்கு அதிகமான உரிமையை சிலர் எடுத்துக்கொள்வார்கள்.
புதிதாக வந்த பெண் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் குணத்தோடிருப்பது இயல்புதான். எனவே இத்தகைய வெளியுறவுகள் ஒரு மிரட்சியைக் கொடுக்கும்.
அவர் பார்வையே சரியில்லை என்கிற விதமாய்ப் பேசத் தொடங்கினால், ஆண்டாண்டு கால நட்பின் அடித்தளமே ஆட்டம் காணத் தொடங்கும்.
இத்தகைய அணுகுமுறையால் எந்தப் பயனும் கிடையாது. இழப்புதான் மிச்சம். நண்பர்களுக்குள் எல்லைக்கோடு போட்டுக்கொண்டு – உறவின் தன்மையை நிர்ணயித்துக்கொண்டு – பழகத் தொடங்கினால் பிரச்சினைகள் தோன்றுவதில்லை.
நட்பு… பொன் முட்டையிடும் வாத்து. அறுத்துப் பார்ப்பது ஆபத்து.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)