நமது வீட்டின் முகவரி – 14
கடந்த அத்தியாயத்தில் காதலுக்காக உயிரை விடுவதுதான் புனிதமா என்கிற கேள்வியை எழுப்பி இருந்தேன். நட்பானாலும் காதலானாலும், அது வாழ்க்கைக்குத்தான் நம்மை தயார்ப்படுத்த வேண்டும். ஓர் உறவு முறிகிறதென்றால் அங்கே தேர்வு செய்த நபர் தவறானவர் என்று அர்த்தம். காதலே தவறானது என்று அர்த்தமல்ல.
எனவே, இவர்கள் தோற்பதால் காதலின் புனிதம் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. காதலின் பெயரால் உயிர்கள் பலியாகும்போதுதான் காதலின் புனிதம் கெடுகிறது.
இப்படி யோசிப்போம். காதல் எதை நோக்கி அழைத்துச் செல்லும்? திருமணத்தை நோக்கி. அதாவது, இரண்டு உயிர்கள் இணைந்து, உயிரை உருவாக்குவதன் ஆரம்பப் படிநிலையே காதல்.
அப்படியானால், காதலின் பண்பு புதியதாய் ஓர் உயிரைப் படைப்பதே தவிர, இருக்கிற உயிரை எடுப்பதல்ல.
தோல்வியின் துயரத்தில் சாவைத் தழுவும் அந்த உயிர்களை நாம் அவமரியாதை செய்யவில்லை. ஆனால் அந்த அளவு மனதில் இருக்கும் உறுதியை வாழ்வு நோக்கி அவர்கள் மடை மாற்றம் செய்யலாமே என்கிற ஆதங்கம்தான்.
தாங்கள் பூச்சிகள்போல் நொய்மையானவர்களாய், பலமில்லாதவர்களாய் இருப்பதன் அடையாளமாகவோ என்னவோ, பூச்சிமருந்தைக் குடித்துவிட்டுப் பலியாகிறார்கள் பல காதலர்கள்.
மன்மதன் எய்த மலர்க்கணைகள், மலர் வளையங்களாவது ஏன்?
ஒரு முடிவுக்கு நாம் வரலாம். எது வாழச் சொல்கிறதோ அது காதல். பிரிவில் வாடினாலும் விரைவில் எது மீண்டும் உயிர்க்கொடியைத் தழைக்கச் செய்கிறதோ, அது காதல். பக்கத்தில் இருந்த நிலைமாறி, தூரத்து மின்னலாய் தொலைந்துபோன பின்னும், எந்த உறவு கண்களில், மனசில் வெளிச்சம் தந்துவிட்டுப்போகிறதோ… அது காதல்.
கவியரசு கண்ணதாசனிடம் காதலுக்குக் கண்ணில்லை என்று யாரோ சொன்னார்கள். அதற்கு அவர் தந்த பதில் அருமையானது.
“கண்ணிழந்தவர்கள், நடந்துபோகப் பாதை இருக்கிறதா என்று ஊன்றுகோலால் தட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள். காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான். கண்ணிழந்தவர்களுக்கு இருக்கும் விவஸ்தைகூடவா இல்லை” என்றார் கண்ணதாசன்.
அவரது திரைப்பாடலையே நாம் எண்ணிப் பார்க்கலாம்.
“பருவம் வந்த அனைவருமே காதலிப்பதில்லை
காதலிக்கும் அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடிக்கும் அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை”
உண்மையான காதல் உயிரைக் கொடுக்கும்; உயிரைக் குடிக்காது. கவிஞனாக்கும்; கோழையாக்காது. வாழச்சொல்லும்; வாடச் சொல்லாது.
காதலர்களை விடக் காதல் பெரியது.
இழந்த காதலின் வலி தரும் நினைவுகளில் சுகமும் உள்ளது!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)