நமது வீட்டின் முகவரி – 15
நட்பு, காதல் போன்ற தனிமனித உறவுகள், அன்பு காரணமாய் நம் இயல்புக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடும். ஆனால், ஒருவர் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டிய உறவுகளில் மிக முக்கியமானது அலுவலகச் சூழலில் ஏற்படும் உறவுகள். தனிமனிதனின் உளவியல் பாங்கை, உளவியல் அறிஞர்கள் இரண்டாகப் பிரிப்பதுண்டு. தனிமைச் சூழலில் தனிமனிதன், சமூகச் சூழலில் தனிமனிதன்.
சமூகச் சூழலில் முக்கியமானது அலுவலகச் சூழல். இந்த உறவுகள் சரியாகக் கையாளப்படாதபோது இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று, அலுவலகத்தின் பொதுவாக இயக்கத்திற்கு நேரும் பாதிப்பு. இன்னொன்று, அலுவலகத்தில் நம்முடைய வளர்ச்சிக்கு ஏற்படும் பாதிப்பு.
இளமையின் வேகத்தில், சாதிக்கும் ஆர்வத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து மாட்டிக் கொள்கிற அலுவலர்கள் ஏராளம். இவர்களுக்குத் தீய நோக்கம் ஏதுமில்லை. ஆனால் மேற்கொண்ட நல்ல பணியை சரியான முறையில் செய்யத் தெரியாததுதான் காரணம்.
தான் மேற்கொண்ட பணி, தன் துறையைச் சார்ந்ததுதானா, அதில் மேற்கொள்ளக்கூடிய முடிவு அலுவலகத்தின் பொதுக்கொள்கைக்கு ஏற்றதா? அது வேறு அலுவலர்களின் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதாய் ஆகுமா என்பது போன்ற எதையும் எண்ணிப் பார்க்காமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளே அலுவலக உறவுகள் சிதைவதற்குக் காரணம்.
அலுவலகங்களில் கருத்து மோதல் வர இரண்டு காரணங்கள். 1.தனது முக்கியத்துவத்தை நிலைநாட்ட சிலர் முயலும்போது வரலாம். 2. தன் இடத்தை இன்னொருவர் அபகரிப்பாரோ என்கிற எண்ணம் ஏற்படும்போது மோதல் எழலாம்.
இந்த இரண்டு சூழ்நிலைகளையும் கடந்து வரும் பக்குவம் அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்படும்போது அங்கே சுமுகமான சூழ்நிலை நிலவும்.
ஓர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்கிறபோது? அங்கு எத்தனை துறைகள் உள்ளன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த எந்தத் துறைகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைவிட முக்கியமாக, எந்த வேலையை, யார் செய்யக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, அலுவலகத்தில் கணக்காளராக நீங்கள் பணிக்குச் சேர்கிறீர்கள். அங்கு பணிபுரியும் பொறியாளர் ஒருவருக்கு உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அழைப்பு வந்த நேரத்தில் அலுவலர் அங்கே இல்லை. உடனே மதியம் 12 மணிக்கு வாங்க சார், அவரைப் பார்க்கலாம் என்று நீங்கள் சொல்லிவிடுகிறீர்கள். இதன் மூலம் இரண்டு தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அந்தப் பொறியாளருக்கு 12 மணிக்கு வேறு வேலை ஏதும் வெளியே இருந்து போயிருப்பாரானால், வந்து பார்க்கிற வாடிக்கையாளர் பொறுப்பே இல்லாத ஆளுங்கப்பா என்று புலம்பிக்கொண்டே திரும்புவார்.
அல்லது, யாரைக் கேட்டு 12 மணிக்கு அவரை வரச் சொன்னீங்க என்று பொறியாளர் உங்கள் மேல் பாயக்கூடும். ஆர்வம் அளவுக்கு மீறினால் ஆர்வக் கோளாறு என்பார்கள்.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே. இது எல்லா அலுவலகங்களிலும் எழுதிவைக்க வேண்டிய வாசகம்.
சிக்கல்கள் வந்தபிறகு கையாள்வதைக் காட்டிலும் சிக்கலே வராமல் தடுத்தால், அலுவலகச் சூழல் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் மிக்கதாக இருக்கும். அதற்கொரு வழி இருக்கிறது. அது….
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)