நமது வீட்டின் முகவரி – 16
அலுவலகத்தில் ஏற்படும் அத்தனை சிக்கல்களையும் சீரமைக்க கைதேர்ந்த நிர்வாகிகள் கையாளும் ஒரே அஸ்திரம், மதித்தல்.
ஒவ்வொரு தனிமனிதரும் எதிர்பார்ப்பது தனக்கும், தான் வகிக்கும் பொறுப்புக்கும் உரிய மரியாதையைத்தான். அதனை மனதாரத் தருவதற்குத் தயாராகும்போது அலுவலகத்தில் இணக்கமான சூழல் ஏற்படுகிறது.
ஒரே குழுவாக இணைந்து செயல்பட வேண்டிய அலுவலகத்தில் சிறுசிறு குழுக்கள் தலைதூக்கும் “கோஷ்டி அரசியல்” நடப்பதுண்டு. இந்தச் சூழ்நிலை தவிர்க்கப்படும்போது, அலுவலர்களின் செயல்திறன் கூடும். அலுவலர்கள் மத்தியில் இணக்கமான சூழ்நிலை உருவாவதற்கு, உலகின் புகழ்பெற்ற விளம்பர இயல் நிபுணராகத் திகழ்ந்த ஒகில்வி, சில நல்ல வழிமுறைகளைக் கூறுகிறார்.
1. அலுவலகத்திற்குள் நடக்கும் காகித யுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். கண்டன அறிக்கைக் கடிதம் போன்றவற்றுக்குப் பதிலாக நேரிலேயே கூப்பிட்டுப் பேசிவிடுங்கள்.
2. சக அலுவலர்கள் பற்றி, “போட்டுக்கொடுக்கும்” மனிதர்களைத் தவிர்த்துவிடுங்கள். நீங்கள் நிர்வாகத்தில் அங்கம் வகித்தால் அவரை நீக்கிவிடுங்கள்.
3. அலுவலர்கள் சேர்ந்து அமர்ந்து மதிய உணவு அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இது பல்வேறு மனத்தாங்கல்கள் நீங்க வழிவகுக்கும்.
4. யாரேனும் ஒருவர், சக ஊழியர் பற்றி, “அவர் திறமையே இல்லாதவன்” என்று குறை கூறினால், யாரைச் சொன்னாரோ அவரை அழைத்து, அவர் முன்னிலையில் இதனைத் திரும்பச் சொல்லும்படி அவரைப் பணியுங்கள்.
5. செயல்படாதவர்கள் தேங்கிய குப்பையின் கிருமிகள் போல, அவர்களை அகற்றுங்கள்.
பெரிய நிறுவனங்களில் மக்கள் தொடர்பு அலுவலர்கள் இருப்பதுண்டு. அவர்களுக்கு இருவகையான பணிகள் உண்டு. வெளியிலிருந்து வருபவர்களுடன் நல்லுறவு பேணுதல், அலுவலகத்தின் உள்னே நல்ல உறவுகளை வளர்த்தல்.
தீர்க்கமுடியாத அளவு மோதல்கள ஏற்படுமானால் அவற்றை இருவரும் மனம்விடடுப் பேசித் தீர்ப்பதே நல்லது. ஒருவேளை சரிசெய்ய முடியாத அளவு மனத்தாங்கல் ஏற்பட்டால் அலுவலகத்தில், சண்டை போட்ட ஊழியர் பற்றி மற்ற ஊழியர்களிடம் விமர்சனம் செய்கிற போக்கை முற்றாகத் தவிர்க்க வேண்டம். மோதல் வலுப்பெறாமல் இருக்க இதுவே வழி.
எல்லாவற்றையும்விட, தனி மனிதர்கள் மத்தியில் இருக்கும் கருத்துவேறுபாடுகள், அலுவலகத்தின் பொது நன்மையையோ பணிகளையோ பாதிக்காமல் பாதுகாக்கிற பொறுப்புணர்வு அலுவலர்களுக்கு அவசியம்.
நிர்வாகத்தோடு நெருக்கமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் சக அலுவலர்களைப் பகைத்துக் கொள்வதும், சக அலுவலர்கள் தன்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாத விஷயங்களில் நிர்வாகத்துடன் முரண்டுபிடிப்பதும், அலுவலகத்தில் நமது வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய அணுகுமுறைகள்.
பொதுவான ஒரே நோக்கத்திற்காகப் பணிக்கு வருபவர்கள், தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியை வளர்த்துக்கொண்டு, நட்பையும் வளர்த்துக் கொண்டால் அங்கே நிறுவனமும் வளரும். ஊழியர்களும் வளர்வார்கள்.
போட்டி பொறாமைகளை வளர்ப்பதன் மூலம், கெட்டபெயரும், வீண் குழப்பங்களுமே வளரும்.
வளர வேண்டியவர்கள் நாம்தான். விரிசல்கள் அல்ல!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)