நமது வீட்டின் முகவரி – 18
“அலுவலகத்தில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் என்னைப் பதற்றமடையச் செய்கின்றன” என்றார், என்னைச் சந்தித்த ஒரு நண்பர். கருத்துவேறுபாடுகள் தவறானதல்ல. தனி மனிதர்கள் ஒரே இடத்தில் சேரும்போது, ஒரேவிதமான கருத்தைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. ஆனால், கருத்து வேறுபாடுகள் வீண் பிடிவாதத்தாலோ அகங்காரத்தாலோ விளைந்தால், அது அலுவலக சூழலைப் பாதிக்கும்.
கருத்துவேறுபாடுகளில் பெரும்பான்மையானவை தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகவே ஏற்படுகின்றன. கணவன் மனைவி இருவரும் காரில் போய்க் கொண்டிருந்தனர். கணவரைப் பார்த்து, “சோர்வாக இருக்கிறீர்களே! காபி சாப்பிடலாமா?” என்றார். மனைவிக்கு முகம் வாடிவிட்டது. இரண்டுநாட்கள் முகம் கொடுத்தே பேசவில்லை.
கணவனிடம், “தனக்குக் காபி வேண்டும்” என்பதை மறைமுகமாக வெளிப்படுத்த முயன்றார் மனைவி. அது கணவனுக்குப் புரியவில்லை. பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. தகவல் தொடர்பு துல்லியமாக இல்லாதபோது கணவன் மனைவிக்கு நடுவிலேயே இவ்வளவு குளறுபடிகள் ஏற்படுமென்றால், அந்நியர்கள் ஒன்றாகப் பணிபுரியும் அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்.
வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் “வாடிக்கையாளர் நன்மை” என்கிற பொதுக்காரணத்தை முன்வைத்துச் செயல்படுகிறார்கள். ஓர் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் என்று வைத்துக்கொள்வோம். இயந்திரத்தின் குறிப்பிட்ட பகுதியை வாடிக்கையாளர் அனாவசியம் என்று கருதுவதாக விற்பனையாளருக்குத் தகவல் கிடைக்கிறது. அவர் என்ன செய்ய வேண்டும்?
அந்தப் பகுதி ஏன் பொருத்தப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தைப் பொறியாளரிடம், இணக்கமாகக் கேட்டுப் பெறலாம். மாறாக, “இது மாதிரி அனாவசியமானதெல்லாம் எதற்கு? வாடிக்கையாளர்களுக்கு யார் பதில் சொல்வது?” என்று எரிந்துவிழுந்தால், பொறியாளருக்கு “சர்” என்று கோபம் வரும். வாடிக்கையாளர்தான் தெரியாமல் சொல்கிறார் என்றால், விற்பனைக்குப் போன உனக்கு விபரம் வேண்டாமா? என்று எரிந்துவிழுவார்.
இருவருமே மையப் பிரச்சினையிலிருந்து விலகிவிடுகிறார்கள். வாடிக்கையாளர் நன்மையும் அடிபடுகிறது. அலுவலகத்தின் சூழலும் கெடுகிறது.
உரையாடல் கலையில் எதையும் நேர்மறையாகச் சொல்லிப் பழகவேண்டும். குறிப்பாக அலுவலகத்தில் இது மிகவும் முக்கியம். “இது ஏன் இங்கே இருக்கிறது-?” என்கிற கேள்விக்குப் பதில், “இதை அகற்றிவிடலாமே” என்று மெதுவாகக் கேட்கலாம்.
எந்தச் சூழலிலும் தன் நிறுவனத்தை விட்டுக் கொடுக்காமல் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதுதான் சாமர்த்தியம்.
தேவையில்லாமல் சக அலுவலர்களைப் பகைத்துக் கொண்டும், அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளைப் பெரிதுபடுத்திக்கொண்டும் இருப்பவர்கள் பகைவர்களை சம்பாதித்துக் கொள்வதோடு, அலுவலகத்திலும் மிகவும் எரிச்சலான சூழ்நிலையை ஏற்படுத்திவிடுவார்கள்.
இன்னும் சிலரோ சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்கூட “தொட்டால் சிணுங்கிகளாக” முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பகை பாராட்டுவார்கள். கருத்து வேறுபாடுகளை மதியுங்கள். ஆரோக்கியமான கருத்து மோதலை அனுமதியுங்கள். அவை நம்மை நாமே வளர்த்துக்கொள்வதற்கான மிக நல்ல வாய்ப்புகள்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)