முதல் வெற்றிக்குப் பிறகு…

முதல் வெற்றி கொடுக்கும் மனத்துணிவு, அபாரமானது. பாராட்டு மழை, பணம், புகழ் என்று முப்படைகளும் அணிவகுத்து மரியாதை செய்யும்போது, குதூகலத்திற்குக் கேட்கவா வேண்டும்? நிற்க முடியாத அளவு வெற்றியின் கனம் அழுத்தும் நேரத்தில், இதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டவர்களுக்கு முதல் வெற்றியே முன்னேற்றப் பாதை. அந்த உணர்வை இழந்தவர்களுக்கு முதல் வெற்றியே மூழ்க வைக்கும் போதை!

ஓங்கி ஒலிக்கும் பாராட்டுக் குரல்களுக்கு நடுவே, “இப்போதுதான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்” என்ற குரல் முணுமுணுப்பாகத்தான் கேட்கும்.

அதற்குக் காது கொடுத்தவர்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள். அந்த முணுமுணுப்பைக் கூர்ந்து கவனித்தால் அது என்ன சொல்கிறது தெரியுமா?

அடுத்தடுத்த வெற்றிக்கு ஐந்து கட்டளைகள்
ஆமாம்! ஐந்து விஷயங்களைச் சொல்கிறது. முதலாவது புதுமைக்கான தேடல். புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் எதையுமே செய்வதில்லை.

புதுமைக்கான தேடல் உங்களுக்குள் ஏற்பட்டு ஒரு தீப்பொறிக் கனலைத் தொடங்குமேயானால், அந்தப் பொறியை உங்கள் உள்மனமே ஊதி, ஊதி பெரிய நெருப்பாகச் சுடர்விடச் செய்யும். “என் வாழ்வில் பெரிய மாற்றம் வேண்டும்” என்ற இந்தத் தேடல் மிகவும் வலிமையான சக்தியையும் உத்திகளையும் கொடுக்கும்.

துல்லியமான கனவு

உங்கள் தொழிலில் எந்த உயரத்தை எட்ட விரும்புகிறீர்கள்? இந்தக் கனவைத் துல்லியமாக வரையறை செய்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, பெரிய ஆலை ஏற்படுத்துவது என்பது பொதுவான கனவு. இத்தனை டன்கள் உற்பத்தி என்று வரையறையை மனதில் ஏற்படுத்திக்கொண்டு, அதை நோக்கி உழைப்பதே துல்லியமான கனவு.

ஆயத்தம்
நீங்கள் செய்யும் புதுமைகள் ஆதாயம் தருவதாக அமையும்வரைக்கும், அதற்கான முக்கியத்துவம் கிடைக்கப்போவதில்லை. எனவே மனதில் உதித்த புதுமையான சிந்தனையைச் சரியான முறையில் செயல்படுத்த ஆயத்தமாக வேண்டும். அதற்கான படிநிலைகள் அங்குலம் அங்குலமாகத் திட்டமிடப்படவேண்டும்.

நம்பிக்கை
ஒன்று தெரியுமா? உங்கள் கனவுகளுக்கு உருவம் தந்து அதனை வெற்றிகரமாக்கும் விருப்பம் அடிமனதுக்குள் ஆழப்பதிந்திருக்கிறது. அந்த ஆழமான விருப்பமே நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நீங்கள் உறுதியாக்கிக்கொண்டே வரும்போது அந்த நம்பிக்கையே வளர்ச்சியையும் வெற்றியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

செயல்படுத்துதல்
எத்தனை புதுமையான சிந்தனைகள் பிறந்தாலும், எவ்வளவு கற்பனைகள் இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்தத் தொடங்கும்போது கூடுதல் சக்தி பிறக்கிறது. அதன் விளைவாக வெற்றி கிடைக்கிறது. கனவுகளின் சுகத்திலேயே கரைந்துவிடாமல், சரியான நேரம் பார்த்துச் செயல்வடிவம் தருபவர்கள்தான் தங்கள் வெற்றிகளைத் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

முதல் வெற்றியின் விளைவாக, அடுத்தடுத்த வெற்றிகள் அணிவகுக்க வேண்டுமென்றால், இந்த ஐந்து அம்சங்களை உங்களுக்குள் அணிவகுக்கச் செய்யுங்கள். வெற்றிகள் நிச்சயம்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *